(Source: ECI/ABP News/ABP Majha)
Kannadasan: “27 ஆண்டுகளில் அப்பா ஒருமுறை கூட அப்படி பார்த்தது இல்லை” - கண்ணதாசன் மகன் உருக்கம்
எங்க வீட்டுல எப்பவும் 10 கார்கள் நிற்கும். எந்த கம்பெனி கார் வாசலை சரியாக மறித்து நிற்கிறதோ திரும்பியே பார்க்காமல் அந்த காரில் ஏறிச் சென்று விடுவார்.
கவியரசு கண்ணதாசன் வாழ்க்கையின் கடைசி நாளில் என்ன நடந்தது என்பதை அவரது மகன் அண்ணாதுரை கண்ணாதசன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அண்ணாதுரை கண்ணதாசன்
நான் சினிமாவை மிகவும் நேசிக்கிறேன். அதனால் சினிமாவுக்குள் செய்வது எது என்றாலும் நான் கௌரவம் பார்ப்பதில்லை. நான் விவேக்கை வைத்து சொல்லி அடிப்பேன் படத்தை இயக்கினேன். அப்படம் ரிலீசாகவில்லை. தொடர்ந்து பல துறைகளிலும் பணிபுரிந்துள்ளேன். விவேக் நடித்த அந்த படம் ரிலீசாகாமல் போனதற்கு காரணம் தயாரிப்பாளர் செய்த தவறு தான். 15 நாட்கள் நடந்த ஷூட்டிங்கில் கிட்டதட்ட பாதிபடம் முடிந்து விட்டது.
கண்ணாதாசனின் மறுபக்கம்
எனது அப்பா கண்ணதாசனின் ஒருநாள் சம்பளம் 1964ல் ரூ. 10 ஆயிரம். அவர் ஒரு நாளைக்கு குடிக்க ஃபுல் பாட்டில் வாங்கினால் பாதி தான் குடிப்பார். மீதியை தன் உதவியாளர்களிடம் கொடுத்து விடுவார். அந்த பாட்டிலின் விலை அப்போது ரூ.60. ஒருநாள் சம்பளத்தில் அது 0.1 சதவீதம் தான். அதனால் எந்தவித பிரச்சினையும் எழவில்லை. அப்பாவின் குடிபழக்கம் தான் நான் இன்றைக்கு குடிபழக்கம் இல்லாமல் இருப்பதற்கு காரணமாக அமைந்தது. அவர் தன் கவலைகளை மறந்து இலக்கிய தளத்துக்குள் சென்று விட்டால் குடித்தால் எங்களிடம் பேச மாட்டார். அதனை வைத்து எத்தனையாவது ரவுண்டில் இருக்கிறார் என்பதை பேச்சின் மூலமே கண்டுபிடித்து விடலாம்.
என்னிடம் நிறைய பேர் சொல்லி இருக்கிறார்கள். உங்க அப்பா முழுக்க குடித்துவிட்டு அப்படியே கவிதை பேச்சா பேசுறாருன்னு சொல்வாங்க. அப்படியான நிலைமையில சொல்றவங்களை அறைந்து விடலாம் போல தோன்றும். காரணம் குடித்து விட்டால் அப்பா வெளியே போக மாட்டார். அதேபோல் தனியாக தான் மது அருந்துவார். யாரையும் உடன் அழைக்க மாட்டார்.
அப்பாவின் கஷ்டங்கள் எல்லாம் அவரின் உடன்பிறந்தவர்களால் தான் வந்தது. அந்த நேரத்தில் அவரை உபயோகப்படுத்திக் கொண்டு கஷ்டத்தில் விட்டு விட்டார்கள். தனது அண்ணனிடம் பணம் இருப்பதை தெரிந்து கொண்டு நேரில் போய் கேட்டார். ஆனால் அவரோ பணம் இல்லை என சொல்லி விட்டார். இதனால் ஏற்பட்ட வருத்ததில் “அண்ணன் என்னடா...தம்பி என்னடா..அவசரமான உலகினிலே” பாடலை எழுதி விட்டார்.
ஆனால் இயக்குநர் பீம்சிங், அப்போதைய முதலமைச்சர் அண்ணாதுரையை வைத்து எழுதியதாக நினைத்து விட்டு பின் மாற்ற சொன்னார்.
இறப்பதற்கு முன்னால் நடந்த சம்பவம்
எங்க வீட்டுல எப்பவும் 10 கார்கள் நிற்கும். எந்த கம்பெனி கார் வாசலை சரியாக மறித்து நிற்கிறதோ திரும்பியே பார்க்காமல் அந்த காரில் ஏறிச் சென்று விடுவார். அவர் இறப்பதற்கு முன்னால் காரில் ஏறச் சென்றவர் வீட்டை திரும்பி ஏற இறங்க பார்த்து விட்டு சென்றார். 1954ஆம் ஆண்டு அந்த வீட்டுக்கு நாங்கள் வந்தோம். 1981 ஆம் ஆண்டு இறந்த நாளுக்கு முன்னால் வரை ஒரு நாள் கூட அப்படி பார்த்தது இல்லை. அதேமாதிரி கடைசி கவிதையாக “வாழ்க்கை” பற்றி தான் எழுதியிருந்தார்.
எம்.ஜி.ஆர்., சிவாஜியை விட அதிகமாக சம்பாதித்தவர் அப்பா தான். ரங்கராஜபுரம் என்ற இடத்தில் 6 கிரவுண்ட் இடம் வாங்கி வைத்தார். அப்படி ஒரு இடம் வாங்கியதே அப்பாவுக்கு நினைவில் இல்லை. இதற்கிடையில் எம்.ஆர்.ராதாவிடம் அவசர செலவுக்கு ஆயிரம் வாங்கி வருவார். அடிக்கடி வாங்கி வந்த நிலையில் எம்.ஆர்.ராதாவின் கணக்காளர் அப்பாவிடம் , கடன் ரூ.9 ஆயிரத்தை தாண்டியதாக சொல்கிறார். இரண்டே வாரத்தில் திருப்பி தருவதாக அப்பா சொல்லிவிட்டார். ஆனால் பணத்திற்கு பதில் மேற்கொண்டு பணம் வாங்கி தருகிறேன். ரங்கராஜ புரம் இடத்தை தருமாறு சொன்னார்.
விற்பதை பற்றி எப்போதும் கவலைப்படமார். தமிழை நம்பினார். சம்பாதித்து விடலாம் என நினைப்பார். ஒரு முறை கலைஞர் கருணாநிதியிடம் அப்பா மெடிக்கல் சீட் வேண்டும் என கேட்டார். அவரும் அப்பா மேல் கொண்ட அன்பால் உடனடியாக ஏற்பாடு செய்து கொடுத்தார். பின்னர் யாருக்கு என கருணாநிதி கேட்க, யாருக்கு தெரியும். வந்து கேட்டாங்க வாங்கி கொடுத்தேன் என கூறினார். அவர் வாழ்நாளில் தவறான வழியில் சம்பாதிக்கவேயில்லை என அந்த நேர்காணலில் அண்ணாதுரை கண்ணதாசன் தெரிவித்துள்ளார்.