22 Years Of Citizen: ஆல் ஓவர் தமிழ்நாட்டை அலறவைத்த ‘அத்திப்பட்டி’ சம்பவம்.. 22 ஆண்டுகளை நிறைவு செய்த சிட்டிசன்..!
அஜித்குமார் பல்வேறு கெட்அப் களில் நடித்த சிட்டிசன் திரைப்படம் இன்றுடன் 22 ஆண்டுகளை நிறைவுசெய்கிறது. அந்த திரைப்படம் பற்றிய சில சுவாரஸ்யமானத் தகவல்களைப் பார்க்கலாம்
அஜித் நடித்த சிட்டிசன் திரைப்படம் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இன்றுடன் 22 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்தப் படம் குறித்த பலர் அறியாத சில சுவாரஸ்யமானத் தகவல்களைப் பார்க்கலாம்.
நடிகர் அஜித் குமாரின் கேரியரில் சிட்டிசன் ஒரு மாறுபட்ட அதே நேரத்தில் அவருக்கு மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்த திரைப்படம் . ஏற்கனவே வாலி படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படத்திலும் இரண்டு கதாபாத்திரங்களில் அவர் நடித்திருந்தார். அதே சமயத்தில் படம் முழுவதும் பல்வேறு வேஷங்களில் தோன்றுவார் அஜித். மீனா, வசுந்தரா தாஸ், நக்மா, நிழல்கள் ரவி, பாண்டியன் , தேவன், அஜய் ரத்னம் ஆகியவர்களும் சிட்டிசனில் நடித்திருந்தார்கள். அரசியல் கதைகளத்தை மையமாக வைத்து த்ரில்லர் பாணியில் இந்தப் படத்தை இயக்கியிருப்பார் சரவண சுப்பையா.
வசுந்தரா தாஸ் கதாபாத்திரத்தில் முதலில் நடிகர் சமீரா ரெட்டி நடிக்க இருந்ததாகவும் கால் ஷீட் காரணமாக அவர் நடிக்க முடியாமல் போனதால் ஹே ராம் படத்தில் அறிமுகமான வசுந்தரா தாஸ் இந்தப் படத்தில் நடிக்க தேவு செய்யப்பட்டார். நடித்தது மட்டுமில்லாமல் படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்களையும் பாடியுள்ளார் வசுந்தரா தாஸ்.
படத்தின் இயக்குநரான சரவணா சுப்பையா இயக்கிய முதல் படம் சிட்டிசன். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜித்துடன் சேர்ந்து இதிகாசம் என்கிற படத்தை எடுக்க முடிவு செய்தார்கள்.இதிகாசம் திரைப்படம் சாதியப் பிரச்சனையை மையப்படுத்திய படமாக இருக்கும் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் சில காரணங்களால் இந்தப் படத்தின் முயற்சி கைவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ‘மீண்டும்’ ‘ABCD’ ஆகியத் திரைப்படங்களை இயக்கினார். மேலும் ராவணன் , விசாரனை, காஷ்மோரா, வேலைக்காரன், கோலி சோடா ஆகியத் திரைப்படங்களில் நடிகராகத் தோன்றினார் சரவண சுப்பையா .
படத்தில் காணாமல் போனதாக சொல்லப்படும் அத்திபட்டி கிராமம் ஏதோ தொலைதூர கிராமத்தில் எடுத்தது போல் தோன்றும் ஆனால் அத்திபட்டி காட்சிகள் அனைத்தும் சென்னைக்கும் ஆந்திராவுக்கும் நடுவில் உள்ள பழவேற்காட்டில் தான் எடுக்கப்பட்டது .
இசையமைப்பாளர் தேவா இசையமைத்து பாடலாசிரியர் வைரமுத்து பாடல்களை எழுதியிருந்தார். மொத்தம் ஏழு பாடல்களைக் கொண்டது சிட்டிசன் திரைப்படம். சில பாடல்கள் ஆங்கிலப் பாடல்களின் தழுவல்கள். படத்தில் வரும் ஐ லைக் யூ என்கிறப் பாடல் ஜெர்மன் பாடகரான ஷாஷா பாடிய ஐ ஃபீல் லோன்லி என்கிறப் பாட்டில் இருந்து தழுவப்பட்டது. மேலும் வசுந்தரா தாஸ் மற்றும் ஷங்கர் மகாதேவன் பாடிய பூக்காரிப் பாடல் ’டேக் எ சான்ஸ் ஆன் மி’ என்கிற ஆங்கிலப் பாடலில் இருந்து தழுவி எடுக்கப்பட்டது.