அடுத்த படமும் அஜித் சாருடன் தான்.. ரொம்ப வெயிட்டிங் பண்ணாதீங்க.. ஆதிக் சொன்ன தகவல்!
குட் பேட் அக்லி படத்தை தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருக்கும் படம் குறித்த தகவலை வெளியிட்டார்.

த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் மூலம் அடல்ட் காமெடி வகை படங்களை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். இப்படத்தை தொடர்ந்து சிம்புவை வைத்து அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தை இயக்கினார். இப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே பல பிரச்னைகள் ஏற்பட்டது. சிம்புவிற்கும் படத்தின் தயாரிப்பாளர் தேனப்பனுக்கும் பிரச்னைகள் எழுந்தது. பிரச்னைகளுக்கு மத்தியில் வெளியான இப்படமும் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.
இப்படத்தை தொடர்ந்து அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் நடித்தார். அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக், அஜித்தை வைத்து படம் இயக்குவதே வாழ்நாள் கனவு என்றும் தெரிவித்திருந்தார். அவர் நினைத்தபடியே அஜித்தை வைத்து குட் பேட் அக்லி படத்தை இயக்கினார். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் ரீதியாக பட்டையை கிளப்பியது. இப்படம் வெளியான நேரத்தில் கார் பந்தயIங்களில் கலந்துகொண்ட அஜித்குமார் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்தார்.
ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் ரசிகர் என்பது தெரியும். ஆனால், அஜித் நடித்த படங்களின் காட்சிகளையும், கதாப்பாத்திரத்தையும் நினைவுப்படுத்தும் விதமாகவும் அதனை ரீ கிரியேட் செய்து ரசிகர்களை குதூகலப்படுத்தினார். இப்படம் ரசிகர்களுக்கான படமாகவும் அமைந்தது. இதில், நடிகை சிம்ரன் கேமியோ ரோலில் வந்து சென்றார். மேலும், தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடல்களும் 90ஸ் கிட்ஸ்களை வெகுவாக கவர்ந்தது. அஜித்தை கொண்டாடும் அளவிற்கு சர்ப்ரைஸான காட்சிகளும் இடம்பெற்றிருந்தன.
குட் பேட் அக்லி படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் படத்தின் அடுத்த இயக்குநர் யார் என்பது தான் அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் முக்கிய தகவல்களை அளித்திருக்கிறார். குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு மீண்டும் அஜித் சாருடன் பணியாற்றுகிறேன். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வரும் என தெரிவித்திருக்கிறார். இந்த செய்தியறிந்த ரசிகர்கள் அடுத்த ஃபேன் பாய் படமாக இருக்க போகிறதோ என்று கேள்வி கேட்க தொடங்கிவிட்டனர்.





















