TN Election 2026: நாங்க கஷ்டபடனுமா? அரசியல் கட்சிகளால் அவதிப்படும் மக்கள்! இதெல்லாம் எப்போ மாறும்?
Tamil Nadu Assembly Election 2026: சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், பேனர்கள், அரசியல் தலைவர்களின் பரப்புரையால் ஏற்படும் நெரிசல்களால் மக்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

Tamil Nadu Assembly Election 2026: அரசியல் என்பது ஒரு நாட்டின் வளர்ச்சிக்காகவும், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் இருக்க வேண்டும் என்பதே அரசியலின் அடிப்படை. அரசியலின் அடிப்படைத் தத்துவம் அதுவே என்றாலும் பல அரசியல் கட்சிகள் மக்களை வாட்டுவதையும், வதைப்பதையும் அவ்வப்போது செய்து வருகின்றனர் என்பதும் மறுக்க முடியாத உண்மையாக உள்ளது.
சூடுபிடித்த அரசியல் களம்:
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பங்கீடு பேச்சுவார்த்தை, வேட்பாளர்கள் தேர்வு, விருப்பமனு வழங்கல், பொதுக்கூட்டம், பரப்புரை என்று தீவிரம் அடைந்து வருகின்றனர். இது அனைத்தும் தேர்தலுக்கு முன்பு ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் செய்யும் அடிப்படையான விஷயங்களே ஆகும்.
அண்ணா சாலையில் அவதிப்பட்ட மக்கள்:
ஆனால், மக்கள் நலனுக்காக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று தேர்தல் களத்தைச் சந்திக்கும் அரசியல் கட்சிகளின் இந்த செயல்களே பல தருணங்களில் மக்களை அவதிக்கு ஆளாக்குகிறது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நேற்று திமுக விருப்பமனு தாக்கல் நடைபெற்றது.
பெளர்ணமி நாள் என்பதால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 234 தொகுதிகளுக்கும் விருப்பமனு தாக்கல் செய்ய பலரும் குவிந்தனர். பரபரப்பான அண்ணாசாலையில் உள்ள அறிவாலயத்தில் இவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய ஒவ்வொரு வேட்பாளரும் தங்களது ஆதரவாளர்களுடன் குவிந்ததால் நேற்று மதியம் கடுமையான போக்குவரத்து நெரிசல் அண்ணா சாலையில் ஏற்பட்டது.
மதுரையில் அவதிப்பட்ட வாகன ஓட்டிகள்:
அதேபோல, கடந்த மார்ச் 1ம் தேதி பிரதமர் மோடி திருப்பரங்குன்றத்தில் சாமி தரிசனம் செய்துவிட்டு மண்டேலா நகரில் நடந்த என்டிஏ பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். மோடி மதுரையில் இருந்து மண்டேலா நகர் வருவதற்காக போக்குவரத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. அது பாதுகாப்பு விதிகளுக்கு கீழே உட்பட்டது என்றாலும், மண்டேலா நகர் என்பது திருச்செந்தூர், திருநெல்வேலியில் இருந்து மதுரை நோக்கி வரும் பாதையின் முக்கிய இடம் ஆகும். மேலும், மதுரை விமான நிலையத்திற்கு வாகனங்கள் திரும்புவதிலும் முக்கிய இடம் ஆகும். இதனால், அன்றைய நாளில் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகினர். பிரதமர் மோடி பங்கேற்ற அந்த கூட்டத்தில் அதிமுக - பாஜக கூட்டணியில் உள்ள தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர்.
விஜய் கட்சியும் விதிவிலக்கு அல்ல:
மேலும், அதிமுக வானகரத்தில் நடத்தும் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தால் அந்த பகுதிகளில் அந்த நாளில் கடும் போக்குவரத்து நெரிசல் உண்டாகும். இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகும் நிலை உண்டாகிறது. அரசியலுக்கு புது வரவாக அமைந்துள்ள தவெக-வும் இதற்கு விதிவிலக்கு அல்ல.
திரையுலகின் மிகப்பெரிய நடிகர் விஜய் என்பதால் அவரைப் பார்ப்பதற்காக அவர் செல்லும் இடங்களிலும், அவரது பொதுக்கூட்டத்திலும் ஆயிரக்கணக்கில் மக்களும், தவெக நிர்வாகிகளும் குவிகின்றனர். இதனால், அந்தந்த பகுதிகளில் வசிப்பவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.
அவதிக்குள்ளாகும் அடித்தட்டு மக்கள்:
இந்த குற்றச்சாட்டுகள் தமிழ்நாட்டில் அதிக செல்வாக்குடன் உள்ள ஒவ்வொரு கட்சியினர் மீதும் உள்ளது. அரசியல் கட்சிகளின் அரசியல் தலைவர்களின் பிறந்தநாள், கட்சியின் முக்கிய நிகழ்வுகளுக்காக சாலைகளின் ஓரத்தில் வைக்கப்படும் பேனர்கள் பல இடங்களில் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் பொதுமக்களின் வாக்குகளை கவர்வதற்காக பொதுக்கூட்டங்கள், பரப்புரை அவர்களுக்கு அவசியமானது என்றாலும் அதனால் மக்கள் அவதிக்கு ஆளாகாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டியதும் அவசியம் ஆகும்.
இதனால், இனி வரும் நாட்களில் அரசியல் கட்சிகள் அவர்களது தனிப்பட்ட பணிகளால் மக்கள் அவதிப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.























