மு.க.முத்துவை திட்டிய எம்ஜிஆர்.. கண்டுகொள்ளாத கருணாநிதி.. சிவகாமசுந்தரி வேதனை
மு.க.முத்து என்னை போன்று நடிக்காதே என எம்ஜிஆர் திட்டியதாக சிவகாமசுந்தரி தெரிவித்திருக்கிறார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து இன்று காலை உடல்நலக் குறைவால் காலமானார். கருணாநிதி - பத்மாவதி தம்பதியினருக்குப் பிறந்தவர் மு.க.முத்து. இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றுள்ளார். பூக்காரி, சமையல்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அவர், தந்தையுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அரசியலில் இருந்து விலகியதாகக் கூறப்படுகிறது.
இசைஞானம் பெற்ற மு.க.முத்து
திமுகவில் இருந்து எம்ஜிஆர் விலகிய பின்பு அவரை போலவே நடை, உடை பாவனைகளோடு சினிமாவில் மு.க.முத்து நடிக்க தொடங்கினார். ஆரம்பகாலகட்டத்தில் ரசிகர்கள் அனைவரும் அடுத்த எம்ஜிஆர் கிடைத்து விட்டார் என்ற பெரும் நம்பிக்கை கொண்டிருந்தனர். மு.க.முத்து நடிப்பதில் மட்டும் சிறந்தவர் அல்ல, இசைஞானம் பெற்றவர். மு.க.முத்துவை பாட சொல்லி கருணாநிதி கேட்டு ரசித்த பொற்காலமும் இருக்கிறது. அவர் பாடினால் குடும்பத்தில் உள்ள அனைவரும் கேட்டு ரசிப்பார்கள்.
சினிமாவில் தோல்வி
ஆனால் மு.க.முத்து நடிப்பில் வெளியான பிள்ளையோ பிள்ளை, பூக்காரி, சமையல்காரன், அணையா விளக்கு, உள்ளிட்ட படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்ததால், சினிமாவில் தனித்த இடத்தை பிடிக்க முடியாமல் தடுமாறினார். இருப்பினும், கருணாநிதிக்கும் மு.க.முத்துவிற்கும் இடையே இருந்த நெருக்கமும் குறைந்தது. இதனால், தந்தைக்கும் மகனுக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக தந்தையை விட்டு விலகி இருந்தார் மு.க.முத்து.
மு.க.முத்துவை திட்டிய எம்.ஜி.ஆர்
ஆரம்பகாலகட்டத்தில் பார்க்க எம்ஜிஆர் போன்று நடித்தாலும், காலப்போக்கில் மக்களுக்கு சலிப்பு தட்ட தொடங்கியது. இதுகுறித்து கருணாநிதி எதுவும் கண்டுகொள்ளவில்லை. எம்ஜிஆர் போன்று நடிப்பதை மு.க.முத்து விரும்பியதாக அவரது மனைவி சிவகாமசுந்தரி தெரிவித்துள்ளார். கடந்தாண்டு அவர் அளித்த பேட்டியில், ஒருமுறை எம்ஜிஆர் மு.க.முத்துவை அழைத்து திட்டினாராம். என்னை போன்று நடிக்காதே, உனக்கென்று உடல்மொழி தனியான இடத்தை பிடித்து மக்களின் அன்பை பெறு என்று கூறியுள்ளார். ஆனால், கேமரா முன்பு மேக்கப்போடு நின்றாலும் எம்ஜிஆரை போன்று தான் நடிக்க வந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். எம்ஜிஆரின் தீவிர ரசிகர் அவர் என சிவகாமசுந்தரி தெரிவித்திருக்கிறார்.
அடம்பிடித்த கருணாநிதி
எனது குடும்பமே இசைக்குடும்பம், அரசியல் பற்றி ஒன்னும் தெரியாது. ஆனால், சிறு வயதில் இருந்தே மு.க.முத்துவை தெரியும். மாமா கருணாநிதி என் வீட்டிற்கு வந்து என்னை பார்த்து நீதான் என் வீட்டு மருமகள் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். மு.க.முத்துவிற்கு என்னைதான் கல்யாணம் பண்ணி வைப்பேன் என அடம்பிடித்தார். அப்படித்தான் எங்களது திருமணம் நடந்தது. 1968ல் அறிஞர் அண்ணா தலைமையில் திருமணம் நடந்ததாக சிவகாமசுந்தரி தெரிவித்திருக்கிறார்.





















