Trisha: த்ரிஷா யானையை பார்த்தீங்களா.. அச்சு அசல் யானை போல இருக்கும் கஜா.. குவியும் பாராட்டு
அருப்புக்கோட்டையில் உள்ள பிரபலமான கோயிலில் நடிகை த்ரிஷா வழங்கியிருக்கும் பரிசை பார்த்து அப்பகுதி மக்கள் வியந்து ரசிக்கின்றனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும், ரசிகர்களை கவர்ந்த நடிகையாகவும் வலம் வருபவர் த்ரிஷா. சமீபத்தீல் இவரது நடிப்பில் வெளியான தக் லைஃப் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. அதைத்தொடர்ந்து, விஜய், அஜித் படங்களில் நடித்து தனக்கான தனி இடத்தை பிடித்திருக்கிறார். சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் த்ரிஷா தற்போது அவர் செய்திருக்கும் செயல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
கோயில்களில் யானைகள்
தமிழகத்தில் சிறப்பு பெற்ற கோயில்களில் யானை இருப்பதை அறியலாம். யானையிடம் ஆசீர்வாதம் வாங்குவதற்கே பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். யானையை காண சிறுவர்களும் ஆர்வமாக இருப்பார்கள். ஆனால், சமீபகாலமாக யானை மதம் பிடித்து பாகர்களை மிதித்து கொல்லப்படுவது சோகத்தை தரும் செய்தியாக மாறியிருக்கிறது. குறிப்பாக கோயில்களில் யானைகளை பராமரிப்பதும் கடினமான சூழலாக மாறியிருக்கிறது. பராமரிப்பு செலவும் அதிகரித்து காணப்படுவதாகக் கூறப்படுகிறது. எனவே ஒரு சில கோயில்களில் மட்டுமே யானைகளை காண முடிகிறது. அதற்கு செல்லப்பெயர் வைத்தும் அழைக்கின்றனர்.
கோயில்களில் இயந்திர யானை
அருங்காட்சியகத்தில் இருக்கப்படும் இயந்திர யானைகளை கோயில்களிலும் வைக்கப்படுவது தற்போது வழக்கமாகி இருக்கிறது. நிஜ யானையை போன்றே இயந்திர யானைகள் இருப்பதை பார்க்க மக்களும் ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர். பராமரிப்பு செலவு, யானை வைத்திருப்பதையும் விலங்கின ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கிவிட்டனர். இதனால், கோயில்களில் யானையை காண்பது அரிதாகிவிட்டது. இந்தச் சூழலில் பல கோயில் இயந்திர யானை அதிகம் வைக்கப்படுகிறது.
த்ரிஷா வழங்கிய கஜா
அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அஷ்டலிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் மற்றும் அஷ்டபுஜ ஆதிசேஷ வராகி அம்மன் கோயில் ஒன்று உள்ளது. தற்போது இந்த கோயிலுக்கு நடிகை த்ரிஷா இயந்திர யானை ஒன்றை வழங்கியிருக்கிறார். இக்கோயிலில் வரும் ஜூலை 2ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற இருக்கிறது. கும்பாபிஷேக விழாவில் இந்த இயந்திர யானையும் மக்களின் கவனத்தை பெறும். மேலும், இந்த இயந்திர யானைக்கு கஜா என பெயரும் வைக்கப்பட்டுள்ளது. மேலும், த்ரிஷாவின் ரசிகர்கள் பலரும் மக்களும் இந்த இயந்திர யானையை காண கோயிலில் குவிந்துள்ளனர். பார்க்க யானை போன்று இருக்கும் இயந்திர யானையின் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்பகுதி மக்கள் இதனை த்ரிஷா யானை என்றும் அழைக்கின்றனர்.





















