Squid Game 3 Review: ஹீரோவின் முடிவு என்ன? பணத்திற்காக நடக்கும் கொலைகள்.. ஓவர் வயலன்ஸ்
நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான ஸ்க்விட் கேம் 3வது சீசன் ரசிகர்களை கவர்ந்ததா, ஏமாற்றியதா என்பதை காணலாம்.

கொரோனாவுக்கு பிறகு ஓடிடி தளங்களில் அதிக வெப் தொடர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. குறிப்பாக மணி ஹெய்ஸ்ட் ரசிகர்களை ஈர்த்தது. அதேபோன்று உலகளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த வெப் தொடர் ஸ்க்விட் கேம். இவை 3 பாகங்களாக வெளியாகியுள்ளன. முதல் இரண்டு பாகங்களை காட்டிலும் பெரும் எதிர்பார்ப்போடு ஸ்க்விட் கேம் 3வது சீசன் நேற்று வெளியானது. இதில், ஹீரோ லீ ஜுங் ஜே போட்டியில் வெற்றி பெற்று வில்லன்களை கூண்டோடு அழித்தாரா என்பதே எதிர்பார்ப்பாக இருந்தது.
தென்கொரிய வெப் தொடர்
ஸ்க்விட் கேம் 3 தென்கொரியாவில் உருவாக்கப்பட்டதாகும். 3ஆவது சீசனில் என்ன என்ன ட்விஸ்ட்களோடு முடித்திருக்கிறார்கள், இதில் ரசிகர்கள் யூகித்த விதம் சரிதானா என்பதை பார்க்கலாம். மொத்தம் 6 எபிசோடுகளை கொண்ட இந்த வெப் தொடரை ஹ்வாங் டாங் ஹியூக் இயக்கியுள்ளார். முதல் சீசனை போன்றே இரண்டாவது சீசன் எதிர்பார்த்த வரவேற்பை பெறாவிட்டாலும், 3வது சீசனை பார்க்க ரசிகர்களின் ஆர்வம் குறையவில்லை. இதனை பார்த்த பலரும் தங்களது கருத்துக்களை எக்ஸ் தளத்திலும் பதிவிட்டு வருகின்றனர்.
எதிர்பாராத ட்விஸ்ட்
ஸ்க்விட் கேம் நிகழ்ச்சியை நடத்தும் வில்லனான தி ஃப்ரண்ட் மேன் மற்றும் அந்த போட்டியை ஹோஸ்ட் செய்யும் லீ பியூங் ஹுன் ஹீரோவை சுடுவது போல இரண்டாவது சீசன் இறுதியில் காட்டப்பட்டது. இதைப் பார்த்த ரசிகர்களும் ஹீரோ இறந்ததை நினைத்து ஏமாற்றம் அடைந்தனர். ஆனால், ஸ்க்விட் கேம் 3வது சீசனின் முதல் எபிசோடில், ஒரு சவப்பெட்டியில் பிளேயர்ஸ் இருக்கும் அறைக்கு போட்டியை நடத்தும் குழுவில் இருக்கும் ஆயுதம் தாங்கியவர்கள் எடுத்து வந்த வைக்க, ஹீரோ பிளேயர் 456 சியோங் ஜி ஹுன்னுக்கு உயிர் இருப்பதை தெரிந்துகொள்கின்றனர். ஹீரோவின் காதில் மட்டுமே ரத்தக்காயம் இருக்கிறது. உயிர் பிழைத்த லீ பியூங் ஹூன் வில்லனிடம் என்னை ஏன் கொல்லவில்லை என கேட்கிறார்.
கோடீஸ்வரர்களின் கோர முகம்
ஸ்க்விட் கேம் 2வது சீசனை காட்டிலும் 3வது சீசன் ஆட்டம் தொடக்கம் முதலே விறுவிறுப்புடனே செல்கிறது. ஆனால், போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பணத்திற்காக ஒருவர் ஒருவரை கொலை செய்யும் காட்சிகள் மனதை ரணப்படுத்துகின்றன. அதுவும் இதுபோன்ற கோரமான கொலைகளை கண்டு ரசிக்கும் கோடீஸ்வரர்களின் கோரமுகத்தை பார்க்கும் போது நெஞ்சை உலுக்குகின்றன. இதுமாதிரியான மனிதர்களும் இந்த பூமியில் வாழ்கிறார்களா என்கின்ற அளவிற்கு கோபத்தை வரவைக்க வாய்ப்புகள் இருக்கிறது. முதல் 2 சீசனை காட்டிலும் 3ஆவது சீசன் ரத்தக் காட்சிகளும், வன்முறையும் அதிகம் இருப்பதாகவே விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.
பணத்திற்காக இப்படி ஒரு கொலை
பணம் பத்தும் செய்யும் என்ற பழமொழிகளை கேட்டு ரசித்திருப்போம். அதேபோன்ற ஒரு உலகத்தில் தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை இந்த வெப் தொடர் காட்டுகிறது. பெற்ற குழந்தையை பலி கொடுக்கும் தந்தை, பெத்த மகனையே கொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும் தாய் என பல காட்சிகள் மிகவும் ஆராத தழும்பாக காட்சிகளை இயக்குநர் பதிவு செய்திருக்கிறார். பணம் தான் எதையும் முடிவு செய்யும் என்பதையும், சக மனிதர்களை மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும் என்ற கருத்தை முன்வைப்பதற்காக இப்படியொரு வெப்சீரிஸ் எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், ஆபாச நிறைந்த வார்த்தைகள் அதிகம் இடம்பிடித்திருக்கின்றன, மிகவும் கொடூரமான கொலை சம்பவம் நெஞ்சை பதற வைக்கும் காட்சிகளும் தேவைதானா என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது.
க்ளைமேக்ஸ் வேற ரகம்
இந்த சீசனில் உள்ள 6 எபிசோடுகளிலும் ரசிகர்கள் கண் கலங்குவது உறுதி. எமோஷனலா நிறைய டச்சிங்கான காட்சிகள் இடம்பிடித்திருக்கின்றன. க்ளைமேக்ஸ் காட்சிகளை ரசிகர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்பது கடினம் தான். ஆனால், மனிதர்கள் ஒன்றும் விளையாட்டு பொருள் அல்ல என்பது ஆழமான கருத்தாக இருக்கிறது. பணத்தை வைத்து சூதாடுபவர்களுக்கு மத்தியில் மனிதனை வைத்து சூதாடும் கொலை வெறிப்பிடித்த பணக்காரர்களுக்கு இது ஒரு சவுக்கடி என்றே கூறலாம்.





















