கொட்டுக்காளி படம் லாபமா? நஷ்டமா ? ஓப்பனாக பேசிய சிவகார்த்திகேயன்
பி.எஸ் வினோத்ராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தயாரித்த கொட்டுக்காளி திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றியா தோல்வியா என்பது குறித்து எஸ்.கே ஓப்பனாக பேசியுள்ளார்
சிவகார்த்திகேயன்
ஒரு பக்கம் நடிகராக கலக்கி வரும் சிவகார்த்திகேயன் இன்னொரு பக்கம் தயாரிப்பாளராகவும் உருவெடுத்து வருகிறார். தனது தயாரிப்பு நிறுவனம் சார்பாக வழக்கமான கமர்சியல் படங்களை தயாரிக்காமல் மாறுபட்ட கதைக்களங்களை இயக்கும் இயக்குநர்களுக்கு வாய்ப்பு வழங்கி வருகிறார். வாழ் , கனா , குரங்கு பெடல் , கொட்டுக்காளி உள்ளிட்ட படங்களை எஸ்.கே ப்ரோடக்ஷன்ஸ் தயாரித்து வெளியிட்டுள்ளது.
கொட்டுக்காளி பற்றி சிவகார்த்திகேயன்
சர்வதேச அளவில் கவனமீர்த்த பி.எஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி நடித்த கொட்டுக்காளி படத்தை எஸ்.கே தயாரித்தார். இப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடம் நெகட்டிவான விமர்சனங்களை பெற்றது. விடுதலை , கருடன் என சூரி அடுத்தடுத்து இரண்டு வெற்றிப்படங்களைக் கொடுத்த சூரி இப்படத்தில் ஏன் நடித்தார். கொட்டுக்காளி ஒரு ஃபெஸ்டிவல் படம் இதை திரையரங்கில் வெளியிட்டிருக்க கூடாது என இப்படம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இது தொர்பாக தற்போது சிவகார்த்திகேயன் வெளிப்படையாக பேசியுள்ளார்.
கொட்டுக்காளி படத்தால் லாபமா ? நஷ்டமா ?
'கொட்டுக்காளி படம் தோல்வி என பலர் சொல்கிறார்கள். ஆனால் எதன் அடிப்படையில் அந்த படம் வெற்றியா தோல்வியா என்று சொல்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. நான் நடிக்கும் படங்கள் 120 கோடி செலவு செய்து எடுக்கப்படுகிறது. அந்த படம் நிச்சயமாக திரையரங்கில் இருந்து வசூல் எடுக்க வேண்டும். ஆனால் கொட்டுக்காளி படத்திற்கு அந்த தேவையில்லை. கொட்டுக்காளி படத்தை 100 முதல் 110 திரையரங்கில் வெளியிட்டோம். திரையரங்கில் இருந்து 2 கோடி ரூபாய் வசூல் வந்தது. அதற்கு முன்பாக சூரி நடித்த கருடன் படம் பெரிய வெற்றிபெற்றது. அதனால் நிறைய பேர் அதிக விலை கொடுத்து அந்த படத்தை வாங்க வந்தார்கள். நான் தான் வேண்டாம் இது அந்த மாதிரியான படம் இல்லை என்று மறுத்துவிட்டேன். இந்த படம் ஒன்று மக்களால் கொண்டாடப்படும் அல்லது நிராகரிக்கப்படும் என்று முன்பே நான் படக்குழுவிடம் சொல்லிவிட்டேன். நாம் புதிதாக ஒன்றை செய்கிறோம். இதில் நாம் பெஸ்ட்டாக ஏதும் பண்ண முடியாது. ஆனால் இது ஒரு தொடக்கம். எப்போதாவது ஒரு நாள் இதே மாதிரியான ஒரு படம் கொண்டாடப்படும் அப்போது நாம் கொட்டுக்காளி படத்தின் வெற்றியை கொண்டாடலாம் என்று சொல்லிவிட்டேன்.
என்னைப் பொறுத்தவரை கொட்டுக்காளி ஒரு வெற்றிப்படம். நான் ரசிகர்களை குறை சொல்ல மாட்டேன். இந்த படம் அவர்களுக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது. கமல் சார் இயக்கிய எத்தனையோ படங்கள் வரவேற்பைப் பெறவில்லை. ஆனால் அவர் குணா , அன்பே சிவம் மாதிரியான படங்களை தொடர்ந்து கொடுத்துக் கொண்டேதான் இருந்தார். அவர் யாரையும் குறை சொல்லவில்லை. இல்லை நாம் கமர்சியல் படங்கள் மட்டும்தான் பண்ணுவேன் என்று கமல் நினைத்திருந்தால் இன்று நமக்கு அவ்வளவு அற்புதமான படங்கள் கிடைத்திருக்காது. அவருடைய வழித்தடத்தில் தான் நானும் பயணிக்கிறேன். கொட்டுக்காளி படத்தை தயாரித்ததற்கு நான் பெருமை படுகிறேன் " என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்