Sivakarthikeyan: 'தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்’ .. அப்பா பிறந்தநாளில் உருக்கமான பதிவை வெளியிட்ட சிவகார்த்திகேயன்..!
மறைந்த தனது அப்பா பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மறைந்த தனது அப்பா பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சின்னத்திரையில் மிமிக்ரி, தனது டைமிங் காமெடியால் ரசிகர்களை கவர்ந்த சிவகார்த்திகேயன், 2013 ஆம் ஆண்டு வெளியான ‘மெரினா’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதற்கு முன்னால் சில விளம்பரங்களிலும், படங்களிலும் தலைக்காட்டிய சிவா, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் மூலம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானார். தொடர்ந்து எதிர்நீச்சல், மான் கராத்தே, காக்கிச்சட்டை, ரஜினி முருகன், ரெமோ, வேலைக்காரன், சீமராஜா, மிஸ்டர் லோக்கல், நம்ம வீட்டுப் பிள்ளை, டாக்டர், டான், பிரின்ஸ் ஆகிய பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக உள்ளார்.
தற்போது மாவீரன்,அயலான் ஆகிய படங்களில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், பாடகர், தயாரிப்பாளர் என பல துறைகளிலும் முத்திரை பதித்துள்ளார். இதனிடையே சிவகார்த்திகேயன் 2010 ஆம் ஆண்டு தனது உறவினரான ஆர்த்தியை திருமணம் செய்தார். இந்த தம்பதியினருக்கு ஆராதனா, குகன் தாஸ் என இரு குழந்தைகள் உள்ளனர். இதில் தாஸ் என்பது சிவகார்த்திகேயனின் அப்பா பெயராகும். இவர் காவல்துறையில் பணியாற்றிய நிலையில் பல ஆண்டுகளுக்கு முன் காலமானார். அதனால் தன் அப்பா நினைவாக மகனுக்கு பெயர் சூட்டியிருந்தார்.
இதுதொடர்பான பதிவு ஒன்றில், ‘18 வருடங்களுக்குப் பிறகு என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார். அதோடு மகன் நெற்றியில் அன்பு முத்தமிடும் புகைப்படத்தையும் சிவகார்த்திகேயன் பகிர்ந்திருந்தார். தொடர்ந்து தனது மகன், மகள் குறித்த அப்டேட்டுகளை அவ்வப்போது தன் சமூக வலைத்தளப்பக்கத்தில் சிவா வெளியிட்டு வருகிறார்.
இப்படியான நிலையில், சிவகார்த்திகேயன் அப்பாவுக்கு இன்று 70வது பிறந்தநாளாகும். இதனை முன்னிட்டு அவர் சமூக வலைத்தளங்களில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “இன்றைக்கு நான் என்ன செய்தாலும் அதற்கு காரணம் நீங்கள் தான் அப்பா. நீங்கள் எனக்குக் கற்றுத்தந்தவை மற்றும் நமக்கு என்ன கிடைத்தாலும் மற்றவர்களுக்கு எப்படி ஆதரவாக இருக்க வேண்டும் என்பதைக் காட்ட நீங்கள் வாழ்ந்த விதம் என நினைக்கையில் உங்கள் மகனாக பெருமையாக உள்ளது. நீங்கள் என்றென்றும் நினைவில் இருப்பீர்கள்” என தெரிவித்துள்ளார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்