Vijayakanth: தேமுதிகவில் சேர வேண்டாம் என சொன்ன விஜயகாந்த் - நடிகர் ரமேஷ் கண்ணா அதிர்ச்சி தகவல்!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.
தன்னை தேமுதிக கட்சியில் இணைய வேண்டாம் என மறைந்த அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறியதாக நடிகர் ரமேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விஜயகாந்தின் இரு மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் இருவரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரையுலக பிரபலங்கள் பலரும் விஜயகாந்த் பற்றி பல்வேறு நினைவுகள் பற்றியும் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய ரமேஷ் கண்ணா, “எனக்கும் விஜயகாந்துக்கு நிறைய அனுபவம் உள்ளது. நான், விவேக், நாசர் எல்லாரும் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே நண்பர்கள். அப்படியான நிலையில் விவேக் ஒருமுறை இப்ராகிம் ராவுத்தரிடம் கதை சொல்ல கூற, நானும் போய் சொன்னேன். உடனே அவர் கேப்டனுக்கு போன் பண்ணி, “ரமேஷ் கண்ணான்னு ஒரு பையன் வந்திருக்கான். கே.எஸ்.ரவிகுமாரின் உதவி இயக்குநர். நல்லா கதை சொல்றான்” என கூறினார். மேலும் என்னிடம், “நீ விஜயகாந்தின் தர்ம சக்கரம் படத்தில் இணை இயக்குநராக வேலை பார்க்குறீயே. பொள்ளாச்சில தானே ஷூட்டிங் நடக்குது போய் கதை சொல்லு” என ராவுத்தர் என்னிடம் கூறினார்.
நானும் போய் விஜயகாந்திடம், “ராவுத்தரிடம் கதை சொன்னேன், பிடிச்சி போச்சு. உங்ககிட்ட சொல்ல வந்திருக்கிறேன்” என சொன்னேன். எதுக்கு கதை சொல்லிகிட்டு, “நீ நல்லா வேலை பார்க்குறதை பார்த்திருக்கேன். ஷூட்டிங் வேலை ஆரம்பின்னு சொல்லிட்டாரு”. கதையே கேட்காமல் இயக்குநராக்க என்னை ஒப்புக்கொண்டார். அந்த கதை தான் அப்படியே பல காரணங்களால் தள்ளிப்போய் சூர்யாவை வைத்து ஆதவன் படமாக உருவானது. நான் அவருடன் வானத்தைப்போல, மரியாதை உள்ளிட்ட படங்கள் பண்ணியிருக்கிறேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் கேரவனில் கூட உட்கார மாட்டார். ஷாட் முடிந்த பிறகு அங்கு கூடியிருந்த ரசிகர்களை போய் சந்திப்பார்.
கஜேந்திரா படம் ஷூட்டிங் நடக்குது. அப்போது விஜயகாந்த் அரசியல் கட்சி தொடங்கி விட்ட நிலையில் நான் கட்சியில் இணைவதாக சொன்னேன். எதுக்கு என் கட்சிக்கு வர்ற என கேட்டார். நான், ‘அரசியலில் வந்தால் பெரிய ஆளாக வரலாம் இல்லையா. எம்ஜிஆர் ஆரம்பிக்கும்போது தான் வர முடியல. இப்ப கொஞ்சம் பிரபலமாகி விட்டேன். அதனால் வருகிறேன்’ என சொன்னேன்.
ஆனால் அவரோ, ரமேஷ் கண்ணா நீ என் கட்சிக்கு வந்தால் அடுத்த கட்சி இயக்குநர்களோ, தயாரிப்பாளர்களோ உன்னை அவர்கள் படங்களில் நடிக்க வைக்க தயங்குவாங்க. அதனால் நீ வர வேண்டாம். நிறைய படம் நடிச்சிட்டு இருக்க. தொழிலை கெடுத்துக்காத என சொன்னார். எந்த நடிகரும், தலைவரும் அப்படி சொல்லமாட்டார்கள். அவர் சொன்னார். அதுதான் விஜயகாந்த்” என ரமேஷ் கண்ணா அந்நிகழ்ச்சியில் கூறினார்.