Ilavarasu: தற்கொலை எண்ணத்தில் இருந்த நடிகர் இளவரசு.. தப்பி வந்தது எப்படி?
தற்கொலை எண்ணத்தில் இருந்த நடிகர் இளவரசு அதில் இருந்து எப்படி மீண்டு வந்தார்? நடிகராக உருமாறியது எப்படி? என்பதை கீழே காணலாம்.

தமிழ் திரையுலகின் குணச்சித்திர நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் இளவரசு. இவர் திரையுலகில் ஒளிப்பதிவாளராக வேண்டும் என்ற நோக்கத்தில் திரையுலகிற்கு வந்தவர். ஆனால், தற்போது 100க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துவிட்டார். தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத குணச்சித்திர கதாபாத்திர நடிகராக உலா வருகிறார்.
நடிகரானது எப்படி?
ஒளிப்பதிவாளர் உதவியாளராக இருந்தபோதே இவர் 1985ம் ஆண்டு முதல் மரியாதை படத்தில் நடித்திருப்பார். 1996ம் ஆண்டு பாஞ்சாலாங்குறிச்சி படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். பின்னர், பெரிய தம்பி, நினைத்தேன் வந்தாய், இனியவளே, மனம் விரும்புதே உன்னை என 13 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த சூழலில், இவர் எப்படி நடிகராக மாறினார்? என்பதை அவர் ஒரு முறை பேட்டியில் கூறியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, 10, 12 படம் பண்ணியாச்சு. நான்ஸ்டாப் கேமராமேனாக போயிட்டு இருந்தேன். டக்குனு எந்த டைரக்டரும் மார்க்கெட்ல இல்ல. முழுசா ப்ளாங்க் ஆகி நின்னுட்டேன். என்ன செய்யப்போறோம்? இரண்டு குழந்தைகள், மனைவி, வீட்டு வாடகை. எல்லாம் சென்னையில.
தற்கொலை எண்ணத்தில் இளவரசு:
ஊர்ல வந்து திருப்பி போயி வாழ முடியலனு போறதுக்கு பதிலா தற்கொலை பண்ணிக்கலாம். அந்த நிலைமைக்கு போயாச்சு. என்ன செய்றதுனு தெரியல? ரொம்ப மன உளைச்சலோட இருந்தேன். நடிக்க கூப்பிட்றாங்க. ஆனா, நடிகனா ஆகிட முடியுமானு ஒரு பெரிய எனக்கு என்னன்னா என் வேலையை விட்டுவிட்டு இன்னொரு வேலைக்கு போறதே பெரிய தாழ்வு மனப்பான்மையா இருந்துச்சு.
திடீர்னு கேமராமேன் யூனியன் ஆபீஸ்ல கையெழுத்து போட போறதுக்காக போகும்போது மூத்த ஒளிப்பதிவாளர் பிஎன் சுந்தரம் சார் வாயா ஷுட்டிங் இல்லனு கேட்டாரு. நான் அவருகிட்ட புலம்புறேன். டைரக்டர் யாரும் சரி இல்ல சார். எல்லா டைரக்டரும் ஃப்ளாப்பானதால படம் இல்லனு சொல்றேன். அவரு நான் கேமராமேனா கேக்கலயா நடிக்கப் போலயானு கேட்டேன்னு சொன்னாரு.
தெய்வ வாக்கு:
நான் இதை எதிர்பார்க்கவே இல்ல அவர்கிட்ட. நிறைய பேர் சொல்லுவாங்க நம்ம வேலையை விட்டு போறோம் பேசாம போய் நடி. பேசாய போய் நடின்னாரு. வெளிய வரும்போது ஈஸியா வெளிய வந்தேன். தெய்வ வாக்கு மாதிரி. அப்டிதான் நினைக்கனும். குழப்பமே இல்லாம கூப்பிட்ட இடதுக்கு போனேன். அது வரம்னு சொல்றதா? காலத்தால் ஆசிர்வதிக்கப்பட்ட மனிதன் என்பது ஒவ்வொரு விநாடியும் உணரவைக்கக்கூடிய ஒரு வாழ்க்கை சார்.
இவ்வாறு அவர் கூறினார்.
முழு நேர நடிகராக மாறுவதற்கு முன்பு அவர் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தாலும் 1995ம் ஆண்டு பசும்பொன் படத்தில் அவரது நடிப்பு கவனிக்கப்பட்டது. 2000ம் ஆண்டு வெற்றிக் கொடி கட்டு படத்தில் நல்ல கதாபாத்திரம் அவருக்கு கிடைத்தது.
தவிர்க்க முடியாத நடிகர்:

பூவெல்லாம் உன்வாசம், பாண்டவர் பூமி, தவசி, ஷாஜஹான், ரெட், ஜெமினி, சுந்தரா டிராவல்ஸ் என அதன்பின்பு வந்த அனைத்து படங்களிலும் தவிர்க்க முடியாத நடிகராக இருந்தார். இம்சை அரசன் 23ம் புலிகேசியில் வடிவேலுவிற்கு இவர் அமைச்சராக நடித்த கதாபாத்திரம் பட்டிதொட்டியெங்கும் இவருக்கு புகழ் பெற்றுத் தந்தது. கலகலப்பு படத்தில் இவரது அமிதாப் கதாபாத்திரம் மிகவும் பிரபலம்.
காமெடி மட்டுமின்றி குணச்சித்திர கதாபாத்திரத்தில் மிகவும் உணர்வுப்பூர்வமாக முத்துக்கு முத்தாக படத்தில் தந்தை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். ரஜினி, விஜய், அஜித், விஜயகாந்த், சிம்பு, தனுஷ் என முன்னணி கதாநாயகர்கள் முதல் இளம் ஹீரோக்கள் என பெரும்பாலான கோலிவுட் நடிகர்களுடன் நடித்துவிட்டார்.





















