விஜயை புகழ்ந்து பாட்டு.. மேடையிலேயே வேல்முருகனை விமர்சித்த உதயநிதி, சேகர்பாபு.. நடந்தது என்ன?
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 3ம் ஆண்டு தொடக்கவிழாவில் பாடகர் வேல்முருகன் விஜயை புகழ்ந்து பாடியது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் நிகழ்ச்சியில் விஜயை புகழ்ந்து பாடகர் வேல்முருகன் பாடிய பாடல் கடும் சர்ச்சைகளை கிளப்பியது. இந்த நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், அமைச்சர் சேகர்பாபுவும் இதனைப் பற்றி நேரடியாகவே பேசியுள்ளதாக வேல்முருகன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக ஆண்டு விழா
கடந்த பிப்ரவரி 2ம் தேதி விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 3ம் ஆண்டு தொடக்கவிழா பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பாடகர் வேல்முருகனின் கச்சேரியும் நடைபெற்றது. அவர் விஜயை புகழ்ந்து தொடர்ச்சியாக பாடல்களை பாடினார். அப்படியாக அவர் பாடிய வரிகளில் கொள்ளையடித்த கூட்டம் என்ற வார்த்தை இடம் பெற்றிருந்தது. அது திமுக ஆட்சியை விமர்சிக்கும் வகையில் இருந்ததாக கூறப்பட்டது.
மேலும் முருகன் பாடலை வரிகள் மாற்றி பாடியதற்காக வேல்முருகன் மீது போலீசில் புகாரளிக்கப்பட்டது. ஆனால் நான் பாடியதற்கும், விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. யார் மனமாவது புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் எனவும் தெரிவித்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
மாநில அரசு விருது பெற்ற வேல்முருகன்
இதற்கிடையில் பிப்ரவரி 13ம் தேதி தமிழ்நாடு அரசின் மாநில திரைப்பட விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த விருதுகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். அப்போது விருது பெற மேடையேறிய பாடகர் வேல்முருகனிடம் அமைச்சர் சேகர்பாபு, “பாடகரே உங்களோட சமீபத்திய ஆடல், பாடல் நிகழ்ச்சியைப் பார்த்தோம். நன்றாக இருந்தது. இருந்தாலும் எங்களுக்கு உங்க மேல வருத்தம் தான்” என கூறியிருக்கிறார். இப்படியான தகவல் வெளியானதும் ஊடகம் ஒன்றின் சார்பில் வேல்முருகனிடம் விளக்கம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “நான் எல்லாருக்கும் பொதுவானவன் தான். தவெக 3ம் ஆண்டு தொடக்க விழாவுக்கு கூப்பிட்டாங்க. என்னை நம்பி உடன் இருப்பவர்களுக்கு பாடுவதற்கு ஒரு மேடையும், பணமும் கிடைக்கும் என்பதால் அதில் பங்கேற்று பாடினேன். அங்கு வந்திருந்தவர்கள் நன்றாக இருக்கிறது என சொன்னார்கள். இதைத் தாண்டி நான் வேறு எதையும் காதில் ஏற்றிக் கொள்ளவில்லை.
அதேசமயம் சென்னையில் நடந்த திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் அமைச்சர் சேகர்பாபு அப்படி பேசியது உண்மை தான். அவர் அப்படி கேட்டதும் எனக்கு கொஞ்சம் சங்கடமாக போய் விட்டது. இதற்கு என்ன பதில் சொல்லலாம் என யோசிப்பதற்குள் விருது வழங்கிய துணை முதலமைச்சர் எங்கு வருமானம் வருகிறதோ அங்கு போக வேண்டியது தான் என கூறினார். அதைக் கேட்டு எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. அதை கவனித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நீங்க எல்லாருக்கும் பொதுவானவர் என எனக்கு தெரியும் என கூறி அந்த சூழலை எளிதாக மாற்றி விட்டார்.
எனக்கு முன்பே உதயநிதியும்,சேகர்பாபுவும் நன்கு பழக்கம் என்பதால் அவர்கள் சொன்னதை நான் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. இருந்தாலும் அப்போது மேடையில் கேட்டது சங்கடமாக இருந்தது என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.























