IND Vs ZIM: அரையிறுதி வாய்ப்பு.. இந்திய அணி தக்கவைக்குமா? ஜிம்பாப்வே உடன் மோதல் - தெ.ஆப்., ஜெயிக்கணும்..
ICC T20 World Cup 2026 IND Vs ZIM: ஐசிசி டி20 உலகக் கோப்பை அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க, கட்டாயம் வெற்றி பெற வேண்டிய சூழலில் ஜிம்பாவே அணியுடன் இந்தியா இன்று பலப்பரீட்சை நடத்துகிறது.

ICC T20 World Cup 2026 IND Vs ZIM: இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் இடையேயான சூப்பர் 8 சுற்று போட்டி, இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது.
இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதல்:
ஐசிசி டி20 உலகக் கோப்பை பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றின் முடிவில் நான்கு பிரிவுகளிலும், முதல் இரண்டு இடங்களை பிடித்த 8 அணிகள், தலா அணிகளுடன் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டன. அதில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து அணி தனது அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டது. அதேநேரம், ஏ பிரிவில் இருந்து அரையிறுதிக்கு செல்லப்போகும் இரண்டு அணிகள் யார் என்பதே பெரும் கேள்வியாக உள்ளது. அதற்கான பதிலை அளிக்கும் முக்கியமான போட்டியாக, இந்தியா - ஜிம்பாப்வே இடையேயான இன்றைய போட்டி அமைய உள்ளது. தங்களுக்கான அரையிறுதி வாய்ப்பை நீட்டிக்க, இன்றைய போட்டியில் வெற்றி பெறுவது இரண்டு அணிகளுக்கு முக்கியம். எனவே, இன்றைய போட்டி கிட்டத்தட்ட நாக்-அவுட் சூழலை எட்டியுள்ளது.
அரையிறுதி வாய்ப்பு - தக்கவைக்குமா இந்தியா?
இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானதில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இதன் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். இரு அணிகளும் சூப்பர் 8 சுற்றில் விளையாடிய ஒரு போட்டியில் மோசமான தோல்விகளையே பதிவு செய்துள்ளன. இன்றைய போட்டியில் தோல்வியுறும் அணி, உலகக் கோப்பையில் இருந்து வெளியேற்றப்படுவது உறுதி. மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணி வெற்றி பெறுவதோடு, பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் தென்னாப்ரிக்கா அணியுடனான் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி தோல்வியுற்றால் மட்டுமே அரையிறுதிக்கான வாய்ப்பு இந்திய அணிக்கு பிரகாசமாக இருக்கும்.
உள்ளூரிலேயே நடையை கட்டுமா இந்திய அணி?
இந்த உலகக் கோப்பையை நடத்தும் இலங்கை அணி ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில், மற்றொரு அணியான இந்தியாவாவது அடுத்த சுற்றுக்கு முன்னேறுமா? என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான போட்டி, இந்திய அணியில் உள்ள பல குறைபாடுகளை வெளிச்சம் போட்டு காட்டியது. பந்துவீச்சில் பும்ராவை தவிர மற்ற வீரர்கள் அனைவருமே ரன்களை வாரிக்கொடுத்தனர். பேட்டிங்கில் ஒரே அடியாக அனைத்து வீரர்களும், தென்னாப்ரிக்காவிடம் சரணடைந்தனர். இந்த அனைத்து பிரச்னைகளையும் சரி செய்து முழுமையான திறனை வெளிப்படுத்தினால் மட்டுமே இன்றைய போட்டியில் இந்திய அணியால் வெற்றி பெற முடியும். அடுத்த சுற்றுக்கான கட்டாய வெற்றியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டி முக்கியத்துவம் பெற்றுள்ளது. தென்னாப்ரிக்கா அணி உடனான மோசமான தோல்வி காரணமாக, இன்றைய போட்டிக்கான அணியில் இந்தியா சில மாற்றங்களை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புள்ளிப்பட்டியல்:
| அணிகள் | போட்டிகள் | வெற்றி | தோல்வி | புள்ளிகள் | ரன் ரேட் |
| மேற்கிந்திய தீவுகள் | 1 | 1 | 0 | 2 | 5.350 |
| தென்னாப்ரிக்கா | 1 | 1 | 0 | 2 | 3.80 |
| இந்தியா | 1 | 0 | 1 | 0 | -3.80 |
| ஜிம்பாப்வே | 1 | 0 | 1 | 0 | -5.30 |
நேருக்கு நேர்:
சர்வதேச டி20 போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை 13 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இந்திய அணி 10 முறையும், ஜிம்பாப்வே அணி 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
சேப்பாக்கம் மைதானம் எப்படி?
2026 டி20 உலகக் கோப்பையில் சென்னை சேப்பாக்கம் மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக உள்ளது. 160-180 என்ற அளவிலான ஸ்கோர்கள் எளிதில் குவிக்கப்படுகின்றன. அதேநேரம், சுழற்பந்துவீச்சாளர்கள் துல்லியமான லைன் மறும் லெந்தை பின்பற்றினால் பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுக்க முடியும்.
உத்தேச பிளேயிங் லெவன்
இந்தியா : சஞ்சு சாம்சன் , திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கே), இஷான் கிஷன், சிவம் துபே, அபிஷேக் சர்மா, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வருண் சகரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா
ஜிம்பாப்வே : பிரையன் பென்னட், சிக்கந்தர் ராசா (கே), தஷிங்கா முசெகிவா, தடிவானாஷே மருமானி, ரியான் பர்ல், பிராட் எவன்ஸ், டோனி முனியோங்கா, டியான் மியர்ஸ், ரிச்சர்ட் ங்கராவா, கிரேம் க்ரீமர், முசரபானி,





















