Vaathi : தனுஷ் “வாத்தி” பட ரிலீஸ் எப்போது?... அதிகாரப்பூர்வமாக தேதியை அறிவித்தது படக்குழு
தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகி வரும் ’வாத்தி’ படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார்.
நடிகர் தனுஷ் நடித்துள்ள வாத்தி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படம் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்தில் நடிகைகள் நித்யாமேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷிகண்ணா, நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாரதிராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தனுஷூக்கும் நல்ல கம்பேக் கொடுக்கும் படமாக அமைந்தது.
View this post on Instagram
இதனைத் தொடர்ந்து தனுஷ் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் இம்மாதம் இறுதியில் வெளியாகவுள்ளது. மேலும் கேப்டன் மில்லர், வாத்தி ஆகிய படங்களிலும் தனுஷ் நடித்து வருகிறார். இதில் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகி வரும் ’வாத்தி’ படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார்.
View this post on Instagram
மேலும், சாய்குமார், தனிக்கெல்லா பரணி, கென் கருணாஸ் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். மேலும் கடந்த ஜூலை 28 ஆம் தேதி தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு ‘வாத்தி’ படத்தின் டீசர், போஸ்டர்கள் வெளியாகியிருந்தது. இந்த படத்தின் ரிலீஸ் குறித்து எந்த தகவலும் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி வாத்தி படம் டிசம்பர் 2 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தாண்டு மட்டும் தனுஷ் நடிப்பில் ஏற்கனவே மாறன், திருச்சிற்றம்பலம், தி க்ரே மேன் படங்கள் நிலையில், அடுத்ததாக நானே வருவேன், வாத்தி ஆகிய படங்கள் ரிலீசாகும் என்பதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.