HBD Delhi Ganesh : எளிமை, எதார்த்தம் மட்டுமே தாரக மந்திரம்! 80வது பிறந்தநாளில் டெல்லி கணேஷுக்கு நடைபெற்ற சதாபிஷேக விழா!
HBD Delhi Ganesh : அன்று முதல் இன்று வரை குணச்சித்திர நடிகராகவே தனக்கு ஒரு அந்தஸ்தை ஏற்படுத்தி கொண்ட நடிகர் டெல்லி கணேஷுக்கு இந்து சதாபிஷேக விழா நடைபெற்றது.
தமிழ் சினிமாவில் திறமையானவர்களுக்கு பஞ்சமே இல்லை என்றாலும் ஒரு சிலர் தமிழ் சினிமா வரலாற்றின் அடையாளங்களாக விளங்குவார்கள். அப்படி குணச்சித்திர நடிகராகவே தன்னுடைய ஒட்டுமொத்த திரை பயணத்தை கடந்து தனக்கென ஒரு தனி அந்தஸ்தை ஏற்படுத்தி கொண்ட ஒரு சகலகலா வல்லவன் நடிகர் டெல்லி கணேஷ் 80வது பிறந்தநாள் இன்று. கமல் உட்பட பல திரைபிரபலங்களும் சோசியல் மீடியா மூலம் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். யதார்த்தமான நடிப்பு, எளிமையான தோற்றம், அப்பாவித்தனமான முகத்தில் நகைச்சுவையை வாரி வழங்கும் அபாரமான இந்த நடிகர் இன்று வரை தமிழ் ரசிகர்கள் நெஞ்சங்களில் கோலோச்சி வருகிறார்.
இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர் கண்டுபிடித்த பொக்கிஷங்களில் ஒருவரான டெல்லி கணேஷ் அவரின் படங்களில் ஆஸ்தான நடிகராக நிச்சயம் இடம் பிடிப்பார். விசு, மணிரத்னம் படங்களிலும் பெரும்பாலும் அவருக்கு இடமுண்டு. எந்த வகையான கேரக்டர் கொடுத்தாலும் அதில் தன்னுடைய தனித்துமான நடிப்பால் அசத்தி விடுவார். சிந்து பைரவி, மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள், அவ்வை சண்முகி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, புன்னகை மன்னன், தெனாலி, நாயகன் உள்ளிட்ட படங்களில் அவரின் அபாரமான நடிப்பு திறமைக்கு சான்றாகும். 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள டெல்லி கணேஷ் ஏராளமான வளரும் கலைஞர்களுக்கு ஏணியாய் இருந்து வழி நடத்தியுள்ளார்.
டெல்லி கணேஷ் 80
— Rasi Azhagappan (@rasiazhagappan) August 1, 2024
ஆரோக்கியம் அன்பு பெருகட்டும். கலை தொடரட்டும்#delhiganesh #kamal #rasiazhagappan pic.twitter.com/GAeta4Cmp9
இன்று 80வது பிறந்தநாளை கொண்டாடும் டெல்லி கணேஷுக்கு மிகவும் விமர்சையாக சதாபிஷேக விழா நடைபெற்றது. இந்த விழாவில் பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டு ஆசீர்வாதம் பெற்றனர். தயாரிப்பாளர் எஸ்.பி. முத்துராமன், காத்தாடி ராமமூர்த்தி, சச்சு, ரேணுகா, ராசி அழகப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அவரின் ரசிகர்கள் பலரும் நீண்ட ஆயுளையும், நல்ல ஆரோக்கியத்தையும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.