மகாராஜா பட இயக்குநரிடம் கதை கேட்ட அஜித்...வெளியான மாஸ் அப்டேட்
அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கும் நிலையில் அஜித்தின் அடுத்த பட பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன

அஜித்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமார் தற்போது கார் பந்தையத்தில் பிஸியாக இருந்து வருகிறார். துபாயில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற 24H மிச்லின் கார் பந்தையத்தில் அஜித் குமார் ரேஸிங் அணி கலந்துகொண்டு மூன்றாவது இடத்தைப் பிடித்தது. மறுபக்கம் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
குட் பேட் அக்லி
விடாமுயற்சி படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் அஜித் ரசிகர்கள் இதற்கு பெரிதாக கவலைப்படவில்லை. ஏனால் அடுத்த சில மாதங்களில் குட் பேட் அக்லி படம் வெளியாக இருக்கிறது. இப்படம் அஜித் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய கொண்டாட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் இப்படத்தில் பிரசன்னா , சஞ்சய் தத் , அர்ஜூன் தாஸ் , த்ரிஷா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். தேவிஶ்ரீ பிரசாத் மற்றும் ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார்கள். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.
மகாராஜா இயக்குநர் இயக்கத்தில் அஜித் ?
BREAKING 🎬 :
— Box Office India (@BoxOffice36O) February 13, 2025
Maharaja Director Nithilan Swaminathan is in Consideration for Ajith Sir Next Film #AK64 pic.twitter.com/ykop1qdhgd
மார்ச் முதல் அக்டோபர் மாதம் வரை அஜித் முழுக்க முழுக்க கார் பந்தையத்தில் கவனம் செலுத்த இருப்பதாக சமீபத்தில் தெரிவித்தார். அக்டோபர் மாதத்திற்கு பின் அஜித் தனது அடுத்த படத்திற்கான வேலைகளை தொடங்குவார் என எதிர்பார்க்கப் படுகிறது. தற்போது தனது அடுத்த படத்தை இயக்கப்போகும் இயக்குநர்களை அஜித் தேர்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் மகாராஜா படத்தின் இயக்குநர் நிதிலன் ஸ்வாமி நாதன் அஜித்திற்கு கதை சொல்லியிருப்பதாகவும் அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம் .
இன்னொரு பக்கம் அஜித் கே.ஜி.எஃப் பட இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்தும் படக்குழு சார்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

