AR Rahman Son: பெரும் விபத்து... நூலிழையில் உயிர் தப்பிய ஏ.ஆர்.ரஹ்மான் மகன் - நடந்தது என்ன?
படப்பிடிப்புக்காக அமைக்கப்பட்டிருந்த செட்டும், அலங்கார விளக்குகளும் அறுந்து விழுந்து நிகழ்ந்த விபத்தில் தான் நூலிழையில் தப்பியதாக அமீன் பகிர்ந்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் ஷூட்டிங் ஸ்பாட்டில் பெரும் விபத்தில் இருந்து தப்பியது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் மகன்:
கோலிவுட் தொடங்கி ஹாலிவுட் வரை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை பிரபல இசையமைப்பாளர்களுள் ஒருவராக வலம் வரும் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் பாடகர் ஏ.ஆர்.அமீன். குழந்தையிலேயே தன் தந்தையின் இசையில் பாடகராக அறிமுகமான ஏ.ஆர்.அமீனுக்கு, 2015ஆம் ஆண்டு ஓகே கண்மணி படத்தில் இடம்பெற்ற மௌலா வா சல்லிம எனும் பாடல் பெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுத் தந்தது.
அதனைத் தொடர்ந்து தன் தந்தையின் இசையில் தொடர்ந்து பாடல்களைப் பாடி வரும் அமீன், யுவன் சங்கர் ராஜாவின் இசையிலும் பாடியுள்ளார். மேலும் தனி இசைப்பாடகராகவும் வலம் வருகிறார்.
உயிர் தப்பிய அமீன்:
இந்நிலையில் முன்னதாக தனது பாடல் ஒன்றுக்கான ஷூட்டிங் தளத்தில் படப்பிடிப்புக்காக அமைக்கப்பட்டிருந்த செட்டும், அலங்கார விளக்குகளும் அறுந்து விழுந்து நிகழ்ந்த விபத்தில் தான் நூலிழையில் தப்பியதாக அமீன் பகிர்ந்துள்ளார்.
”இன்று நான் பாதுகாப்பாக உயிருடன் இருப்பதற்கு எல்லாம் வல்ல இறைவனுக்கும் எனது பெற்றோrருக்கும் குடும்பத்தினருக்கும் நலம் விரும்பிகளுக்கும் என் ஆன்மிக ஆசிரியருக்கும் நன்றி. மூன்று இரவுகளுக்கு முன் நான் ஒரு பாடலுக்கான படப்பிடிப்பில் இருந்தேன்.
கேமரா முன் நடிப்பதில் கவனம் செலுத்தியபோது, பொறியியல் மற்றும் பாதுகாப்பை குழு கவனித்துக்கொண்டிருக்கும் என்று நான் நம்பினேன். நான் அந்த இடத்தின் நடுவில் இருந்தபோது கிரேனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த செட் மற்றும் சரவிளக்குகள் கீழே விழுந்தன. சில அங்குலங்கள்... சில வினாடிகளில் மேடை செட் எங்கள் தலையிலேயே விழுந்திருக்கும். நானும் எனது குழுவினரும் அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீள முடியவில்லை” என தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமீன் பதிவிட்டுள்ளார். இந்நிலையில், அமீனின் இந்தப் பதிவில் அவரது ரசிகர்கள் அமீனுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
பென்னி தயாளுக்கு காயம்
இதேபோல் முன்னதாக பாடகர் பென்னி தயாளுக்கு விபத்து நேர்ந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ் சினிமாவின் பிரபல இளம் பாடகர்களுள் ஒருவராக வலம் வரும் பென்னி தயாள், முன்னதாக விஐடி கல்லூரியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டநிலையில், அவரது தலையின் பின்புறத்தில் ட்ரோன் கேமரா எதிர்பாராதவிதமாக மோதி விபத்து ஏற்பட்டது. பென்னி தயாள் மேடையிலேயே வலி தாங்காமல சுருண்டு அமர்ந்த நிலையில், இசை நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு பென்னி தயாள் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்நிலையில் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்னதாக தொழில்முறை ட்ரோன் ஆபரேட்டர்களை பணியமர்த்துமாறு பென்னி கோரியிருந்தார். இந்நிலையில், அடுத்தடுத்து பாடகர்கள் பென்னி தயாள், ஏ.ஆர். அமீன் எதிர்பாராத விபத்துகளில் இருந்து மீண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.