Heera Rajagopal :பொட்டு வைத்த வட்ட நிலா... 90'ஸ் கனவுக்கன்னி ஹீரா இப்போ என்ன செய்து கொண்டு இருக்கிறார் தெரியுமா?
இதயம், திருடா திருடா, காதல் கோட்டை போன்ற படங்களின் மூலம் தனது திறமையான நடிப்பிற்காக பாராட்டுகளை பெற்ற நடிகை ஹீரா ராஜகோபால் தற்போதைய நிலை.
90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை ஹீரா ராஜகோபால். அறிமுகமான முதல் படத்திலேயே இதயமே இதயமே உன் மௌனம் என்னை கொல்லுதே... என்ற பாடலின் வரிகளுக்கேற்ப அக்காலகட்ட இளைஞர்களின் கனவுக்கன்னியாக இருந்தவர். தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்திருந்தார். கமல், சிரஞ்சீவி, மம்மூட்டி, நாகர்ஜூனா, பாலகிருஷ்ணா, ரவி தேஜா, வினீத், அணில் கபூர், ரமேஷ் அரவிந்த் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார்.
அமைதியான முகம், காட்டன் புடவை, ஸ்டைலான கொண்டை அதில் ஒத்தை ரோஜாவை வைத்து கொண்டு ஒரு அழகு தேவதையாக அறிமுகமான ஹீரா, முதல் படத்திலேயே மிகவும் அடக்கமாக அமைதியான ஒரு கதாபாத்திரத்தில் மிகவும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதனை தொடர்ந்து தொடரும், காதல் கோட்டை, திருடா திருடா, சதி லீலாவதி, சுயம்வரம், தசரதன் என ஏராளமான படங்களில் நடித்திருந்தார். வெவ்வேறு வகையான கதாபாத்திரங்களா இருந்தாலும் தனது வர்சிடாலிட்டியை நிரூபித்தவர்.
இப்படி பிரபலமான நடிகையாக வலம் வந்த சமயத்தில் நடிகர் அஜித்துடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டார். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த தொடரும், காதல் கோட்டை போன்ற படங்களின் படப்பிடிப்பு சமயத்தில் இருவரும் இடையில் நட்பு ஏற்பட்டு அது காதல் ஆனது என கிசுகிசுக்கப்பட்டது. அதை போலவே சரத்குமார், ஹீராவின் வீட்டிற்கு பெண்கேட்டு சென்றதாகவும் அவர்கள் இருவர் இடையில் காதல் என்றும் வதந்திகள் பரவின. இப்படி திரைத்துறையில் பல காதல் சடுகுடு வதந்திகளில் சிக்கிய ஹீரா 2002ம் ஆண்டு தொழிலதிபர் புஷ்கர் மாதவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அந்த திருமணமும் 2006ம் கருத்து வேறுபாட்டால் பாதியிலேயே முடிந்து விவாகரத்து பெற்றனர். அதற்கு பிறகு அமெரிக்காவிலேயே செட்டிலாகி விட்டார் என கூறப்பட்டது.
ஹீரா சில காலங்களுக்கு முன்னர் அமைப்பு ஒன்றை நிறுவி பெண்களுக்கும், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குழந்தைகளின் கல்வி செலவுக்காகவும் தன்னால் முயன்ற உதவிகளை செய்து வருகிறார். அதே போல பெண்களுக்கு எதிரான அநீதிகளுக்கும் குரல் கொடுத்து வந்தார் ஹீரா. சமூக நல பணிகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்ட ஹீரா இரண்டாவதாக திருமணம் கூட செய்து கொள்ளவில்லை.