Actor Ganga: தமிழ் திரையுலகினர் அதிர்ச்சி.. உடல்நலக்குறைவால் 80’ஸ் ஹீரோ கங்கா காலமானார்..
தமிழ் சினிமாவில் 80களின் காலகட்டத்தில் பல படங்களில் ஹீரோவாக நடித்த நடிகர் கங்கா உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
தமிழ் சினிமாவில் 80களின் காலகட்டத்தில் பல படங்களில் ஹீரோவாக நடித்த நடிகர் கங்கா உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
தமிழ் சினிமாவின் பன்முக கலைஞர் டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான “உயிருள்ள வரை உஷா” படம் அவருக்கு மட்டுமல்லாது அந்த படத்தில் நடித்த அனைவருக்குமே திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தில் நடித்து ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் கங்கா. இதனைத் தொடர்ந்து 1986 ஆம் ஆண்டு கரையைத் தொடாத அலைகள், மீண்டும் சாவித்திரி போன்ற படங்களில் நடித்தார். மேலும் பல படங்களில் தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்திருந்தார்.
பல படங்களில் இரண்டாவது ஹீரோ போன்ற வேடத்தை மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த கங்கா, சின்னத்திரை தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் திருமணமே செய்து கொள்ளாமல் தன்னுடைய சகோதரர் குடும்பத்துடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இப்படியான நிலையில் தனது 63வது வயதில் கங்கா மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அவரது மரணம் திரையுலகைச் சேர்ந்த பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் கங்காவின் இறுதிச்சடங்குகள் அவரது சொந்த ஊரான சிதம்பரத்தில் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.