30வது ஆண்டில் சேரன் பாண்டியன்! சுவரை உடைத்து ஜாதியை தகர்த்த 90's கிட்ஸின் பேவரிட்!
காமெடி, சென்டிமெண்ட், காதல், பாடல், சோகம் என அனைத்தும் கலந்த கலவை சோறாய் 90’s கிட்ஸ்களை கட்டிப் போட்ட சேரன் பாண்டியன், 20k கிட்ஸ்களையும் பிரியாணியாய் கவர்ந்திருக்கிறது.
இன்றும் மாதத்தின் இரு நாட்கள் அந்த பிரபல சேனலில் இந்த திரைப்படம் கட்டாயம் இருக்கும். ‛பொங்கப் பானையை தெருவுல வெச்சா… நாய் நக்கத்தாண்டா செய்யும்…’ என்கிற அந்த படத்தின் டயலாக், லொள்ளு சபா போன்ற நிகழ்ச்சிகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டது, இன்றும் பயன்படுத்தப்படுகிறது. கொங்கு பெல்ட் படங்கள் அடுத்தடுத்து வர அச்சாரமிட்ட படம். இப்படி இன்னும் பலவற்றை சொல்லிக் கொண்டேபோகலாம் ‛சேரன் பாண்டியன்’ பற்றி! 1991 ம் ஆண்டு இதே நாளான மே 31ல் வெளியாகி மெகா பிளாக் பஸ்டர் கண்ட சேரன் பாண்டியன் திரைப்படம் வெளியாகி இன்றோடு 30 ஆண்டுகள் ஆகிறது. எப்போதும் எவர்கிரீனாக சேனல்களில் திரையிடப்படுகிறது. அப்படி என்ன ஸ்பெஷல், சேரன் பாண்டின்?
போட்டது சின்ன மீன்; எடுத்ததோ பெரிய மீன்!
33 நாட்களில் 30 லட்சம் ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட பட்ஜெட் படம் தான் சேரன் பாண்டியன். ஆர்.பி.செளத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய இரண்டாவது படம். 7 பாடல்கள், 5 சண்டைக்காட்சிகள் அடங்கிய அந்த படத்தை வெறும் 33 நாட்களில் எடுத்துக்காட்டி, ஒட்டுமொத்த இன்டஸ்ட்ரீயையும் அலற வைத்தார் ரவிக்குமார். சின்ன மீனில் பெரிய மீனை பிடித்த கதையாக லோ பட்ஜெட்டில் கோடிகளை அள்ளியது சேரன் பாண்டியன்.
பெரிய பண்ணையார், சின்ன பண்ணையார் என இருவர். ஒரே வீட்டில் தடுப்புச்சுவருக்கு மத்தியில் தனித்தனியாக வாழ்கிறார்கள். தன் தந்தை ஜாதி மாறி திருமணம் செய்து பிறந்தவர்கள் என்பதால் சின்ன பண்ணையார் மற்றும் அவரது தங்கையை பெரிய பண்ணையாருக்கு பிடிக்காது. ஜாதியை தூக்கி கொண்டாடுபவர் அவர். சின்னப் பண்ணை வீட்டுக்கு வரும் அவரது உறவினர், பெரிய பண்ணையின் மகளை விரும்புகிறார். அவர்களது காதலை சேர்த்து வைத்து சின்னப்பண்ணையின் தங்கை உயிரிழப்பதும், ஜாதியை உடைப்பதும் தான் படத்தின் கரு. ஒரு வரிக் கதையை லாவகமாக கையாண்டு, தனக்கே உரிய மசாலாக்களை தூவி துவம்சம் செய்திருப்பார் கே.எஸ்.ரவிக்குமார்.
அனைத்திலும் நிறைந்திருந்த அம்சம்!
பெரிய பண்ணையாக விஜயக்குமார், அவரது மனைவியாக மஞ்சுளா, அவர்களின் மகளாக ஸ்ரீஜா, சின்னப்பண்ணையாக சரத்குமார், தங்கையாக இந்திரா, அவர்களது உறவுக்காரப் பையனாக ஆனந்த்பாபு, அப்பா, மகன் வில்லனாக நாகேஷ், கே.எஸ்.ரவிக்குமார். இவர்களை தவிர கவுண்டமணி, செந்தில் இது தான் படத்தின் யூனிட். இளையராஜா கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் அறிமுக இசையமைப்பாளர் சவுந்தர்யனை களமிறக்கி அனைத்து பாடல்களையும் ஹிட் ஆக்கி, எவர்கிரீனாக இன்றும் கொண்டிருக்கிறார்கள். இப்படி அனைத்திலும் அம்சம் அனைத்தும் நிறைந்திருந்த படம் சேரன் பாண்டியன்!
சம்பா நாத்து…. என்கிற நடவின் போது பாடுகிற பாடல், இப்போதும், எப்போதும் கேட்கும் இனிமை ரகம்!
‛கண்கள் ஒன்றாக கலந்ததா…’ என்கிற காதல் பாடல்… பஞ்சு மிட்டாயில் பதனீர் சேர்த்த அனுபவம்!
‛காதல் கடிதம் வரைந்தேன்…’ என்கிற பாடல்… அன்றைய கால பேப்பர் விடும் தூதுவிற்கு சாட்சியம்!
‛வா… வா… எந்தன் நிலவே…’ பாடல், காதல் வலியில் கேட்போருக்கு , கிளிசரின் இல்லாம் கண்களை குளமாக்கும்.
‛சின்னத்தங்கம்… எந்தன் செல்லத்தங்கம்…‛ பாடல், 90’s பாசமலர் என்று இன்றும் என்றும் கொண்டாடப்படும்!
இப்படி இன்னும் சில பாடல்கள் அத்திரைப்படத்தின் வெற்றியில் தன்னையும் இணைத்துக் கொண்டன. அந்த காலகட்டத்தில் ஜாதியத்திற்கு எதிராக பேசுவதெல்லாம், அதுவும் கமர்ஷியலில் பேசுவதெல்லாம் ரொம்ப பெரிய ரிஸ்க். அதை அவ்வளவு அருமையாக காட்சிப்படுத்திய இயக்குனரின் சாதூர்யமும், வெளிப்படுத்திய நடிகர்களின் நடிப்பும் தான் ‛சேரன் பாண்டியன்’ 30 ஆண்டுகளை கடந்து கொண்டாடப்படுகிறது.
63-வது பிறந்தநாளில் ஹீரோ! கமர்ஷியல் சினிமாவின் ‛காக்டெயில்’ கே.எஸ்.ரவிக்குமார்!
மோட்டார் மெக்கானிக் மாணிக்கமாக கவுண்டமணியும், ஊரில் வெட்டியாக சுற்றித் திரியும் குப்பாயி ஆத்தா பேரன் செந்திலும் செய்யும் லூட்டிகள், அந்த ஜோடியின் டாப் 10 ஹிட் வரிசையில் சேரன் பாண்டியனையும் இடம் பெற செய்தது. ‛ஹவா… ஹவா… ஹவா…’ என, தூக்கு மாட்டியது போல நடித்து ஏமாற்றும் செந்திலின் பாடல், சேதுபதி திரைப்படத்தில் ஹவா ஹவா… என பாடல் வைக்கும் அளவிற்கு பேமஸ் என்றால் அந்த ரீச் பற்றி வேறு என்ன சொல்ல! காமெடி, சென்டிமெண்ட், காதல், பாடல், சோகம் என அனைத்தும் கலந்த கலவை சோறாய் 90’s கிட்ஸ்களை கட்டிப் போட்ட சேரன் பாண்டியன், 20k கிட்ஸ்களுக்கும் பிரியாணியாய் கவர்ந்திருக்கிறது.
பிலிம் தேயுமளவிற்கு ரிபீட் ஆனாலும், இன்றும் ரசிக்கலாம் சேரன் பாண்டியனை. சூப்பர் ஹிர் பிலிம்ஸ் நிறுவனத்தின் ஆரம்ப கால பயணத்தை வேறூன்ற செய்த படங்களில் சேரன் பாண்டியனுக்கு பெரும்பங்கு உண்டு.
‛நிழலோடும் உரசாத தன்மானம் எனது’ -39வது வயதில் கபிலன் வைரமுத்து!
நேற்று ரிலீஸ் ஆன படம் இன்று பலருக்கு தெரிவதில்லை. ஆனால் 30 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட ஒரு படம், இன்றும் நினைவில் இருக்கிறது என்றால், அது எவ்வளவு பெரிய கிரெடிட். தமிழில் கிடைத்த மெகா வரவேற்பை தொடர்ந்து 1992 ல் தெலுங்கிலும் பாலராமகிருஷ்ணலு என ரீலிஸ் ஆகி, அங்கும் பாக்ஸ் ஆபிஸை கலக்கியது சேரன் பாண்டியன். சேரனுக்கு ,பாண்டியனுக்கு எப்படி தமிழகத்தில் என்றும் இடம் உண்டோ…. அது போல தான் சேரன் பாண்டியனுக்கும் என்றும் இடம் இருக்கும், ரசிகர்களின் இதயத்தில்!