63-வது பிறந்தநாளில் ஹீரோ! கமர்ஷியல் சினிமாவின் ‛காக்டெயில்’ கே.எஸ்.ரவிக்குமார்!
இவரது பல படைப்புகள் இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் ஹிட் அடித்திருக்கின்றன. அந்த வகையில் இவர் தமிழ் ரசிகர்களின் நாடி பிடித்தவர் அல்ல, இந்திய ரசிகர்களின் நாடி அறிந்தவர் கே.எஸ்.ரவிக்குமார்.
பரபரப்பாக சென்று கொண்டிருந்த தமிழ் சினிமாவை மடைமாற்றி கமர்ஷியல் என்கிற மாத்திரையை அனைவருக்கும் பகிர்ந்தளித்த இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். குடும்ப படங்களுக்கு ஒரு இயக்குநர், நகைச்சுவை படங்களுக்கு ஒரு இயக்குநர், நவசரப் படங்களுக்கு ஒரு இயக்குநர், நடிப்புக் கலைக்கு ஒரு இயக்குநர் என தனித்தனியே கிளைகளை வைத்திருந்த தமிழ் சினிமாவில், அவை அனைத்தையும் ஒரு சேர காக்டெயிலாக்கிய பெருமை ரவிக்குமாரையே சேரும்.
கே.எஸ்.ரவிக்குமாரின் விசிட்டிங் கார்டு!
தயாரிப்பாளரின் இயக்குநர் என்பது கே.எஸ்.ஆர்.,ன் அடையாளம். குறுகிய காலத்தில் நிறைவான படங்களை குறிப்பிட்ட பட்ஜெட்டில் முடித்துக் கொடுத்து, அதை ஹிட் செய்யும் வித்தை அறிந்தவர். முன்கோபி, பெர்பெக்ட் மேன், சூப்பர் பிளானர், கறார் பேர்வழி என பல விமர்சனங்கள் இவர் மேல் உண்டு. ஆனால் அதுதான் அவரது பலம் என்பார்கள் நெருங்கிப் பழகியவர்கள்.
தமிழகத்தில் கோலோச்சிய அத்தனை நட்சத்திரங்களையும் தன் வானில் உலா வரச் செய்தவர் என்பது கே.எஸ்.ரவிக்குமாரின் மற்றொரு பெருமை. விக்ரமனிடம் இணை இயக்குனராக பணியாற்றினாலும் , தனக்கென ஒரு பார்முலாவை உருவாக்கி, அதன் வழியில் தான் கடைசி வரை பயணித்தார். 1990ல் புரியாத புதிர் என்கிற திரில்லர் படத்தில் இயக்குனராக பயணத்தை துவக்கிய கே.எஸ்.ரவிக்குமார், அடுத்தடுத்து கமர்ஷியல் கிங் ஆவார் என யாரும் எதிர்பார்க்காதது.
‛நிழலோடும் உரசாத தன்மானம் எனது’ -39வது வயதில் கபிலன் வைரமுத்து!
இரண்டாவது படமான சேரன் பாண்டியன், மெகா ஹிட் ஆகி புதிய டிரெண்ட் உருவாக்கியதை தமிழகம் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது.1994ல் வெளியான நாட்டாமை தான் கே.எஸ்.ரவிக்குமாருக்கு பெர்மனெண்ட் விசிட்டிங் கார்ட்டு. அடுத்தடுத்து மாஸ் படங்களின் இயக்குநர் என்பதை நடவு செய்தது நாட்டமை. சிறந்த திரைப்படத்திற்கான மாநில விருது, சிறந்த இயக்குநருக்கான மாநில விருதுகளையும் வாங்கி வந்தது.
நட்சத்திரங்கள் மின்னிய வானம் கே.எஸ்.ஆர்.,
1995ல் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து இயக்கிய முத்து சூப்பர் டூப்பர் ஹிட். இன்னும் சொல்லப்போனால், ரஜினி அடுத்தடுத்து தன் படங்களை முத்து பாணிக்கு மாற்றும் அளவிற்கு நம்பிக்கை தந்த படம். 1996ல் உலக நாயகன் கமலுடன் அவ்வை சண்முகி. சூப்பர் ஸ்டார் ரசிகர்ளுக்கும், உலக நாயகன் ரசிகர்களுக்கும் என்ன பிடிக்கும் என்பதை நாடி பார்த்து நடவு செய்தவர் கே.எஸ். நட்புக்காக, படையப்பா, தெனாலி, பஞ்சதந்திரம், வில்லன், வரலாறு, தசாவதாரம், ஆதவன் என அக்மார்க் ஹிட் பிளேலிஸ்ட் வைத்திருக்கிறார் ரவிக்குமார். ரஜினி கமலோடும் மட்டுமல்ல, அஜித்-விஜயோடும் பணியாற்றி காலங்களோடு தன் படைப்புகளை நகர்த்தி வந்தவர். பல இயக்குனர்கள் படப்பிடிப்போடு தங்கள் பணியை முடித்துக் கொள்வார்கள். ஆனால், கே.எஸ்.ரவிக்குமார் ரஜினி, கமல் போன்ற உச்ச நட்சத்திரங்களுடன் எந்நேரமும் ஆலோசிக்கும் அளவிற்கு நட்பை பெற்றவர். இன்றும் அவர்களின் நெருங்கிய வட்டாரத்தில் இருக்கிறார். சினிமாவை தாண்டிய ஆலோசனைகளை வழங்குகிறார் என்றால் கே.எஸ்.,மீதான அவர்களின் நம்பிக்கையை நம்மால் உணர முடிகிறது.
பந்தயக் குதிரை ரவிக்குமார்!
தனது ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு குட்டி ரோலில் தலைகாட்டுவதை தனது மேனரிஸமாக வைத்திருக்கும் ரவிக்குமார், தனது அனைத்து படங்களிலும் அதை தவிர்த்ததில்லை. அதுவே நாளடைவில் அவரை ஒரு நடிகராக மாற்றியது. இன்று பல படங்களில் குணசித்திரமாக கலக்கிக் கொண்டிருக்கிறார் ரவிக்குமார். சமீபத்தில் வெளியான மதில் படத்தில் அவர் தான் ஹீரோ. தமிழ் மட்டுமல்லாது பிற மொழிகளிலும் தன் படைப்புகளை கொண்டு சென்ற கே.எஸ்.ரவிக்குமாருக்கு மற்றொரு சிறப்பும் உண்டு. இவரது பல படைப்புகள் இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் ஹிட் அடித்திருக்கின்றன.
அந்த வகையில் இவர் தமிழ் ரசிகர்களின் நாடி பிடித்தவர் அல்ல, இந்திய ரசிகர்களின் நாடி அறிந்தவர். 1958 ம் ஆண்டு மே30ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் வாங்கனூரில் பிறந்த கே.எஸ்.ரவிக்குமார், இன்று தனது 63 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ‛என் தலையெழுத்து… ரிலீஸ் தேதி முடிவு பண்ணிட்டு தான் என்னிடம் எல்லா படங்களும் வரும்… ஆனால் அது என் மீதான நம்பிக்கை; அந்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்பதுதான் என் மைண்ட்டில் ஓடும்,’’ என பேட்டி ஒன்றில் கூறியிருப்பார் கே.எஸ்.ரவிக்குமார். வெற்றி பெற்ற குதிரையில் தான் எல்லாரும் பணம் கட்டுவார்கள். ஆனால் அது ஒரே குதிரையாக இருக்காது. ஆனால் முன்னணி நிறுவனங்கள், முன்னணி நாயகர்கள் பலரும் தொடர்ந்து பணம் கட்டிய ஒரே குதிரை கே.எஸ்.ரவிக்குமார். அந்த குதிரை தன் வெற்றியை நிறுத்தவே இல்லை. இன்னும் வேகமாகவே ஓடிக்கொண்டிருக்கிறது. ஓடும்! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கே.எஸ்.ரவிக்குமார் சார்!