காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி தேர்வு!
டெல்லியில் நடைபெற்ற எம்.பி.க்கள் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் அக்கட்சியின் எம்பிக்கள் கூட்டம் நடந்தது. அதில், காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
"தீய இயந்திரத்திற்கு எதிராக போரிட்டோம்": கூட்டத்தில் எம்பிக்கள் மத்தியில் பேசிய சோனியா காந்தி, "மிகவும் சவாலான சூழ்நிலையிலும் கடும் போட்டி மிக்க தேர்தலில் போட்டியிட்டீர்கள். நீங்கள் பல தடைகளைத் தாண்டி, மிகவும் திறம்பட பிரச்சாரம் செய்துள்ளீர்கள். உங்கள் வெற்றியால் எங்களுக்கு மக்களவையில் மிகப் பெரிய இருப்பு கிடைத்துள்ளது.
மக்களைவையில் பிரச்னைகளை எழுப்ப குரல் கிடைத்துள்ளது. இவை இரண்டும் எங்கள் பங்கேற்புக்கு அதிக பலத்தை அளிக்க உதவும். இந்திய தேசிய காங்கிரஸ் மீண்டும் ஒருமுறை மீண்டெழுந்து வந்துள்ளது. நம்மை அழிக்க நினைத்து தன்னால் இயன்றதைச் செய்து கொண்டிருந்த ஒரு வலிமைமிக்க, தீய இயந்திரத்திற்கு எதிராக போரிட்டது.
எங்களை பொருளாதார ரீதியாக முடக்க முயற்சித்தது. அது எங்களுக்கு எதிராகவும் எங்கள் தலைவர்களுக்கு எதிராகவும் பொய்கள் மற்றும் அவதூறுகள் நிறைந்த பிரச்சாரத்தை மேற்கொண்டது. பலர் எங்கள் இரங்கல் செய்திகளை எழுதினர்!
ஆனால், கார்கேவின் உறுதியான தலைமையின் கீழ் நாங்கள் விடாமுயற்சியுடன் இருந்தோம். அவர் நம் அனைவருக்கும் இன்ஸ்பிரேஷன். கட்சி அமைப்பிற்கான அவரது அர்ப்பணிப்பு உண்மையிலேயே அசாதாரணமானது. முன்மாதிரியாக திகழும் அவரிடம் இருந்து நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும்.
"அர்ப்பணிப்புக்கு தலை வணங்குகிறோம்": பாரத் ஜோடோ யாத்ரா மற்றும் பாரத் ஜோடோ நீதி யாத்ரா ஆகியவை உண்மையில் அனைத்து மட்டங்களிலும் எங்கள் கட்சிக்கு புத்துயிர் அளித்த வரலாற்று இயக்கங்கள். முன்னெப்போதும் இல்லாத வகையில் தனிப்பட்ட மற்றும் அரசியல் தாக்குதல்களை எதிர்கொண்டு போராடுவதற்கான உறுதி கிடைத்தது.
நேற்று நிறைவேற்றப்பட்ட காங்கிரஸ் காரிய கமிட்டி தீர்மானம், எங்களின் வெற்றிக்காக மிகவும் கடினமாகவும் மிகவும் விடாமுயற்சியுடன் உழைத்த நாடு முழுவதும் உள்ள எங்கள் சக ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறது.
உங்கள் சார்பாக, அந்த உணர்வை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள லட்சக்கணக்கான தொண்டர்கள் மிகவும் கடினமான காலங்களில் கட்சிக்கு ஆதரவாக நின்றுள்ளனர்.
அவர்களின் துணிச்சலுக்கும் அர்ப்பணிப்புக்கும் தலை வணங்குகிறோம். அவர்களுக்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம். நம்முடையது ஒரு இயக்கமாக இருந்தது. இங்கு நாங்கள் உண்மையிலேயே ஒரு கூட்டாக செயல்பட்டோம்.
தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்ற சக காங்கிரஸ்காரர்களுக்கு நாங்கள் முழு ஆதரவை வழங்குவதுடன், அவர்கள் வீரத்துடன் போராடி நமது கட்சிக்கு பெருமை சேர்த்துள்ளனர் என்பதை அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.