PM Modi: "இனி உங்களிடம் நான் தமிழிலே பேசப்போகிறேன்" பிரதமர் மோடி கொடுத்த சர்ப்ரைஸ்!
PM Modi: பிரதமர் மோடி இனி தமிழில் பேசப்போகிறேன் என்று கன்னியாகுமரியில் நடந்த கூட்டத்தில் மக்கள் முன்பு பேசியுள்ளார்.
கன்னியாகுமரியில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது, அவர் பேசியதாவது,
தமிழர்களின் பெருமை:
"புதிய பாராளுமன்றம் கட்டி தமிழ் மன்னர்களின் பெருமை, தமிழ் மக்களின் பெருமையை எப்போதும் சொல்வது போல நிறுவப்பட்டது அந்த செங்கோல். அதைக்கூட தி.மு.க. புறக்கணித்தார்கள். இதுபோன்ற தமிழரின் பெருமையை இனி யாரும் புறக்கணிக்க முடியாது. அப்படி புறக்கணிக்க இந்த மோடி அனுமிக்க மாட்டான். இது மோடியின் கியாரண்டி.
உங்களுடைய அன்பும், பாசமும், இந்த ஆதரவும் மொத்த இந்தியாவிற்கும் பலம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்தியா கூட்டணியைச் சேர்ந்தவர்கள் அவர்கள் தமிழ் மக்களின் உயிரோடு விளையாடும் குற்றத்தை செய்கிறார்கள். நமது மீனவர்களுக்கு இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். அவர்கள் உயிருடன் திரும்ப முடியாது என்று சொல்லப்பட்டது.
தி.மு.க. - காங்கிரஸ் பதில் சொல்ல வேண்டும்:
ஆனால், நான் சும்மா இருக்கவில்லை. தூங்கவில்லை. எத்தனை கதவுகள் உண்டோ, அத்தனை கதவுகளையும் உடைத்தோம். எத்தனை சாத்தியம் இருந்ததோ, அத்தனையும் சரி செய்தோம். கொஞ்சம் கூட சேதாரம் இல்லாமல் அத்தனை பேரையும் மீட்டு வந்தோம். அத்தனை மீனவர்களையும் காப்பாற்றி வந்தோம். நமது மீனவர்கள் எதற்காக இலங்கைக்கு செல்ல வேண்டும்? இது யார் செய்த குற்றம்? சிந்தித்து பார்க்க வேண்டும்.
நமது மீனவ சகோதர, சகோதரிகள் இனிமேல் இதுபோன்ற துன்பத்தை தொடர்ந்து அனுபவிக்க அனுமதிக்காது. இது நீங்கள் யாரும் செய்த குற்றம் அல்ல. நாங்கள் செய்த குற்றமும் அல்ல. தி.மு.க. – காங்கிரஸ் செய்த குற்றம். அவர்கள் இருவரும் சேர்ந்து இந்த பாவத்தை செய்திருக்கிறார்கள். மக்களின் கண்களில் விழுந்த தூசிகள் அவர்கள். அவர்கள் செய்த தவறுக்கும், பாவத்திற்கும் பதில் சொல்ல வேண்டிய காலம் நெருங்கி விட்டது.
தமிழ் மொழியில் இனி பேசப்போகும் மோடி:
மத்தியில் இருக்கும் நமது இந்திய அரசு பெண்களுக்கான அரசு. பெண்களை முன்னேற்றும், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் அரசு. ஆனால், தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணிக்கு பெண்களை ஏமாற்றும், அவமானப்படுத்தும் கட்சி. பா.ஜ.க.தான் பெண்களை மதிக்கும் கட்சி. பெண்களுக்கு மிகப்பெரிய மரியாதை கொடுக்கும் பா.ஜ.க. இன்னும் அவர்களுக்காக பாடுபடும். நீங்கள் எனக்கு தரும் அன்பையும், பாசத்தையும் உணர்கிறேன். என்னால் தமிழ் மொழியை கற்றுக் கொள்ள முடியவில்லையே என்ற வருத்தத்தை தெரிவிக்கிறேன். இது எனக்கு மிகப்பெரிய குறையாக உள்ளது.
இந்த குறைபாட்டை போக்க தொழில்நுட்பத்தை நாடியுள்ளேன். உங்களிடம் இனி தமிழில் பேசப்போகிறேன். இனிமேல் சமூக ஊடகமான எக்ஸ் தளத்திலும், நமோ செயலியிலும் இனி என்னுடைய குரலில் தமிழில் பேசப்போகிறேன். இதன்மூலம் நான் சொல்ல நினைக்கும் கருத்தை தமிழில் சொல்ல முடியும் என்று நம்புகிறேன். உங்கள் அன்புக்கு என்னால் வேறு எந்த காணிக்கையையும் திருப்பிச் செலுத்த தெரியவில்லை. நீங்கள் எனக்கு மிகப்பெரிய அன்பை, பாசத்தை, வாழ்த்தையும் கொடுக்கிறீர்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.