AMMK Candidates: பாஜக கூட்டணியில் அமமுக வேட்பாளர்கள் அறிவிப்பு - டிடிவி தினகரன் தேனியில் போட்டி, திருச்சியில்?
AMMK Candidates: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின்பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
AMMK Candidates: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் உள்ள, அமமுகவிற்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
அமமுக வேட்பாளர்கள் அறிவிப்பு:
இந்நிலையில், திருச்சி தொகுதியில் செந்தில்நாதனும், தேனி தொகுதியில் டிடிவி தினகரனும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார். தொடர்ந்து பேசுகையில், “முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் என்னை தேனி தொகுதியில் போட்டியிடுமாறு கேட்டுக்கொண்டனர். இதனால் தான் அங்கு போட்டியிடுகிறேன். பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். 2026ம் ஆண்டு தேர்தலிலும் பாஜக உடனான கூட்டணி தொடரும்” என டிடிவி தினகரன் நம்பிக்கை தெரிவித்தார்.
டிடிவி தினகரனை எதிர்ப்பது யார்?
பாஜக கூட்டணி சார்பில் தேனி தொகுதியில் டிடிவி தினகரன் களமிறங்குகிறார். அதேநேரம், திமுக கூட்டணியில் அக்கட்சியின் மாவட்ட செயலாளரான தங்கத் தமிழ்ச்செல்வனும், அதிமுக சார்பில் புதுமுகமான வி.டி.நாராயணசாமியும் போட்டியிடுகின்றனர். தேனி தொகுதியில் முக்குலத்தோர் சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர். அடுத்து சிறுபான்மையினர், நாயக்கர், நாடார், கவுண்டர் உள்ளிட்ட சமுதாயத்தினர் பரவலாக காணப்படுகின்றனர். முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகிய இருவரும், தற்போது பாஜக கூட்டணியில் தான் உள்ளனர். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற ஒரே தொகுதி தேனி என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வெற்றியின் மூலம், ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் முதல்முறையாக மக்களவை உறுப்பினரானார். ஆனால், தற்போது தேனி தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கியுள்ள நாராயாணசமி, அந்தப் பகுதியின் எந்தவொரு பிரதான சமூகத்தையும் சேராத நபராவார். அதேநேரம், நாம் தமிழர் கட்சி சார்பில் தேனி தொகுதியில் மருத்துவர் மதன் ஜெயபால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசியல் கூட்டணிகள்:
நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு தமிழ்நாட்டில் மூன்று பிரதான கட்சிகள் தனித்தனி கூட்டணி அமைத்துள்ளதால், இந்தமுறை மும்முனைப்போட்டி நிலவுகிறது. அதன்படி, திமுக கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, மதிமுக, கொமதேக, ஐயுஎம்எல் மற்றும் மநீம ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதிமுக கூட்டணியில் தேமுதிக, புதிய தமிழகம் கட்சி மற்றும் எஸ்டிபிஐ கட்சிகள் இடம்பெற்றுள்ளன. யாரும் எதிர்பாராத விதமாக கடந்த ஆண்டு அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக வெளியானது. இந்நிலையில் தற்போது அக்கட்சி தனது தலைமையில் புதிய கூட்டணியை கட்டமைத்துள்ளது. அதில் பாமகவிற்கு 10 கட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுபோக புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயாக கட்சி உள்ளிட்ட பல சிறிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.