
Group 4 Result 2024: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது?- வெளியான அறிவிப்பு; காண்பது எப்படி?
TNPSC Group 4 Result 2024: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூன் மாதம் நடைபெற்ற நிலையில் தேர்வு முடிவுகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாக உள்ளது.

டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் பல்வேறு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு, அரசுப் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இதற்கிடையே குரூப் 4 தேர்வு வி.ஏ.ஓ. எனப்படும் கிராம நிர்வாக அலுவலர் பதவி, இளநிலை உதவியாளர், தட்டச்சர், பில் கலெக்டர், ஓட்டுனர் மற்றும் தனி உதவியாளர் பதவிகளுக்கு நடத்தப்படுகிறது. தற்போது வனக் காப்பாளர், வனக் கண்காணிப்பாளர் பணி இடங்களுக்கும் குரூப் 4 தேர்வு மூலமே ஆட்சேர்க்கை நடைபெறுகிறது.
8 மாதம் கழித்து தேர்வு முடிவுகள்
2022ஆம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு அம்மாதம் ஜூலை 24ஆம் தேதி நடத்தப்பட்டது. அதே ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என்று முதலில் கூறப்பட்ட நிலையில், 8 மாதங்கள் கழித்து 2023ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின.
தொடர்ந்து 2023ஆம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வுக்கு அறிவிப்பு வெளியானது. இதற்கு சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். மாநிலம் முழுவதும் 6 ஆயிரத்து 244 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தன.
17 லட்சம் பேர் பங்கேற்பு
தொடர்ந்து 2024ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி மாநிலம் முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் குரூப் 4 தேர்வு நடைபெற்றது. சென்னையில் 432 மையங்களில் தேர்வு நடந்த நிலையில், 1.33 லட்சம் தேர்வர்கள் குரூப் 4 தேர்வை எழுதினர்.
இன்வேலிட் மதிப்பெண் முறை அறிமுகம்
இதற்கிடையே இந்த முறை புதியதாக இன்வேலிட் மதிப்பெண் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு கேள்விக்கு தவறான பதிலை டிக் செய்து, பிறகு அதை அடித்துவிட்டு, வேறு ஒரு பதிலைத் தேர்வு செய்தால், அந்த கேள்விக்கான மதிப்பெண், மதிப்பெற்றதாக (இன்வேலிட்) கருதப்படும். இந்த முறை நடப்பாண்டு முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
குரூப் 4 தேர்வுக்கான ஆன்சர் கீ எனப்படும் விடைக் குறிப்புகள் ஜூன் 18ஆம் தேதி வெளியாகின. தொடர்ந்து தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று கேள்வி எழுந்தது. ஆகஸ்ட் மாதமே தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி ஏற்கெனவே தெரிவித்து இருந்தது.
எனினும் தற்போது, அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
காண்பது எப்படி?
* தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
* அதில், TNPSC Group 4 Exam Results பக்கத்தை க்ளிக் செய்யவும்.
* தேர்வர்கள் தங்களின் பதிவெண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளிடவும்.
* திரையில் தோன்றும் முடிவுகளைத் தரவிறக்கம் செய்துகொள்ளவும்.
* இவ்வாறு தேர்வர்கள் தங்களின் தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

