Young Poet Award: மாணவர்களுக்கு தமிழக அரசின் இளம் கவிஞர் விருது; விண்ணப்பிப்பது எப்படி?
10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு கவிதைப் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் சிறந்த 3 மாணவர்கள் மற்றும் 3 மாணவிகளை தெரிவு செய்யப்பட உள்ளனர்.
தமிழக அரசின் இளம் கவிஞர் விருதுக்கு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
முதலமைச்சரின் சட்டமன்ற கூட்டத் தொடர் அறிவிப்பு எண்.110 இன்படி 2023-24 ஆம் ஆண்டிற்கான பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு "இளம் கவிஞர் விருது”க்கு கவிதைப் போட்டிகள் நடத்தி சிறந்த படைப்புகளை தெரிவு செய்து அந்த மாணவ, ணவியர்களுக்கு "இளம் கவிஞர் விருது” மற்றும் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளைச் சார்ந்த மாணவ, மாணவியர்களுக்கு 2023 நவம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில் கல்வி மாவட்ட அளவில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு கவிதைப் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் சிறந்த 3 மாணவர்கள் மற்றும் 3 மாணவிகளை தெரிவு செய்யப்பட உள்ளனர்.
எனவே, ஒன்றிய அளவில் தெரிவு செய்யப்பட்ட மாணவ, மாணவியருக்கு வருவாய் மாவட்ட அளவில், 23 .11.2023 வியாடிக் கிழமை அன்று கவிதைப் போட்டியினை நடத்தி, அதில் சிறந்த ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவியை தெரிவு செய்து அம்மாணவர்களின் பெயர், பெற்றோர் பெயர், பயிலும் பள்ளி, மாவட்டத்தின் பெயர் மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றினை 23.11.2023 வியாழக்கிழமை அன்று மாலை 5.00 மணிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.
மேலும் வருவாய் மாவட்ட அளவில் தெரிவு செய்யப்பட்ட மாணவ, மாணவியருக்கு மாநில அளவிலான கவிதைப் போட்டி எதிர்வரும் 30.11.2023 அன்று சென்னை- 8, எழும்பூர், மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.
எனவே மேற்படி மாநில அளவிலான கவிதைப் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ / மாணவியர்களை 30.11.2023 வியாழக்கிழமையன்று காலை 9.00 மணியளவில் சென்னை- 8, எழும்பூர், மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு உரிய பாதுகாவலருடன் வருகை தர வேண்டும்.
எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் “இளம் கவிஞர் விருது” கவிதைப் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கான இடவசதி, கழிப்பிட வசதி, குடிநீர் வசதிகள் ஏற்படுத்தி தரப்பட உள்ளன.
மாநில அளவிலான கவிதைப் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியரின் படைப்புகளிலிருந்து மாநில அளவில் ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவியை நடுவர்கள் மூலம் தெரிவு செய்து அவர்களின் விவரத்தினை இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைக்குமாறு முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
கவிதைத் தலைப்பு
- வேறுபாடற்ற சமுதாயத்திற்கு பாரதியாரின் தொலைநோக்கு பார்வை.
2.வேறுபாடற்ற சமுதாயத்தினை உறுதி செய்திட மாணவர்களின் பங்கு.
மேற்கண்ட தலைப்பில் ஏதேனும் ஒன்றைத் தெரிவு செய்து இக்கவிதைப் போட்டியில் கலந்துகொள்ளலாம்.
குறைந்தது 40 வரிகள் கொண்டதாக இருக்க வேண்டும்.
மொத்த மதிப்பெண்கள்- 20
இவற்றில் பின்வரும் இனங்களுக்கு மொழிநடை -10 மதிப்பெண்கள்
இலக்கண நயம்- 5 மதிப்பெண்கள்
கவிதைக்கான விளக்கம் அளித்தல் - 5 மதிப்பெண்கள் என ஒதுக்கீடு செய்யப்படும்.