Gold theft: பைக் வாங்க சித்தி வீட்டில் கைவரிசை காட்டிய அக்கா மகன் - சிக்கியது எப்படி?
நீண்ட நாட்களாக விலையுயர்ந்த பைக் வாங்க வேண்டும் என்கின்ற ஆசையில் சித்தி வீட்டில் தங்க நகையை திருடிய இளைஞர் கைது.

விழுப்புரம்: பைக் வாங்குவதற்கு சித்தி வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் 24 சவரன் தங்க நகையை கொள்ளையடித்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள வெள்ளிமேடுபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நடுவணந்தல் கிராமம் குளக்கரை தெருவை சேர்ந்த தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக ஓட்டுநர் முருகன் மனைவி கலையரசி (42), இவர் கடந்த 15ஆம் தேதி மதியம் 12 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு சாவியை அருகில் இருந்த பாத்ரூமில் வைத்துவிட்டு அகூர் கிராமத்தில் உள்ள தனது விவசாய நிலத்திற்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில் இரவு 7 மணியளவில் வந்தவாசியில் தனியார் கல்லூரியில் படித்து வரும் கலையரசியின் மகள் தீபிகா வீட்டிற்கு வந்து பாத்ரூமில் இருந்து சாவியை எடுத்து வீட்டை திறந்து பார்த்த போது செல்ஃபில் மறைத்து வைத்திருந்த பேக் கீழே கிடந்துள்ளது. அதை எடுத்து பார்த்ததில் அதில் வைத்திருந்த ஐந்தரை சவரன் நெக்லஸ், ஐந்தரை சவரன் ஆரம், 3 பவுன் வளையல் செட்,ஒன்றரை பவுன் வளையல் செட், மாட்டல் அரைபவுன்,கம்பல் ஒரு பவுன், நாணல் குழாய் கால் பவுன் உட்பட 24 சவரன் தங்க நகைகள் காணாமல் போய் உள்ளது.
இதனையடுத்து வெள்ளிமேடுபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் வெள்ளிமேடுபேட்டை போலீசாருக்கு கலையரசி கொடுத்த புகாரின் அடிப்படையில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கலைச்செல்வி வீட்டிற்கு அடிக்கடி வரும் நபர்களை போலீசார் விசாரணை செய்தனர். இதில் கலைச்செல்வியின் அக்கா மகன் மணிகண்டன் (23) அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றது தெரிய வந்தது. மணிகண்டனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, நீண்ட நாளக பார்த்து வந்ததாகவும், சித்தி இல்லாத நேரத்தை பயன்படுத்தி பைக் வாங்குவதற்காக பீரோவில் இருந்த தங்க நகையை திருடியதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று திண்டிவனம் டி.எஸ்.பி பிரகாஷ் தலைமையிலான தனிப்படை போலீஸார் நகைகளை திருடிய செஞ்சி தாலுக்கா அவ்வியூர் கிராமத்தை சேர்ந்த நாராயணசாமி மகன் மணிகண்டன் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 14 சவரன் நகைகளை மீட்டு அவரை நீதி மன்றகாவலுக்கு அனுப்பி வைத்தனர்.