திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளருக்கு சராமரி வெட்டு - திருவண்ணாமலையில் பரபரப்பு
மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் 5 பேர் கொண்ட மர்ம கும்பல் திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் வெட்டிவிட்டு சென்றுள்ள சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலையில் திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளரை 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி தப்பியோடி விட்டது. வெட்டுப்பட்டவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் உயர் சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருவண்ணாமலை நகரில் உள்ள துர்க்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் முத்துக்குமார் வயது (41) என்பவரும் அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் ஆகிய இருவரும் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தனர். அப்போது ஆவின் பால் குளிருட்டும் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 5 பேர் கொண்ட கும்பல் வழிமடக்கியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துகுமார் உடனடியாக அவருடைய இருச்சக்கர வாகனத்தை திருப்பியுள்ளார்.
திமுக பிரமுகரை அரிவாளால் வெட்டிய மர்ம கும்பல்
இருசக்கர வாகனத்தில் பின்புறம் அமர்ந்து வந்த ராஜேஷ் எகிறி குதித்து ஆவின் குளிரூட்டும் நிலையத்திற்கு உள்ளே ஓடியுள்ளார். உடனடியாக முத்துகுமாரும் அந்த கும்பலிடம் இருந்து தப்பி செல்ல முயன்றுள்ளார். அந்த அடையாளம் தெரியாத கும்பல் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து முத்துவின் கழுத்தில் சரமாரியாக வெட்டி விட்டு அங்கு இருந்து இருச்சக்கர வாகனத்தில் தப்பித்து சென்றனர். இதில் படுகாயமடைந்த முத்துகுமார் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இதனைப் பார்த்த ராஜேஷ் கூச்சலிட்டுள்ளார். உடனடியாக கூச்சல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மர்ம கும்பலை பிடிக்க முயன்றனர். அதற்குள் அவர்கள் அங்கு இருந்து தலைமறைவாகினர். இந்த கொடூர தாக்குதலில் ராஜேஷ் தப்பினார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த முத்துகுமாரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
திருவண்ணாமலை தொடர் கொலை சம்பவம்
மேலும், உயர் சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை கிராமிய காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து திமுக பிரமுகரை வெட்டிய மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலையில் கடந்த மாதம் ரிங் ரோட்டில் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். நேற்று முன்தினம் மாற்றுத்திறனாளி ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து, நேற்று போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் 5 பேர் கொண்ட மர்ம கும்பல் திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் வெட்டிவிட்டு சென்றுள்ள சம்பவம் திருவண்ணாமலையில் உள்ள பொதுமக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.