Provident Fund | வேலையில்லாத காலத்திலும் இனி பி.எஃப் அட்வான்ஸ் தொகை எடுக்கலாம்.. புதிய விதிகள் அறிவிப்பு!
ஒரு மாதம் அல்லது அதற்கு மேற்பட்ட காலங்களில் வேலை இல்லாமல் இருந்தாலும் பி.எப் அட்வான்ஸ் தொகையினை எடுத்துக்கொள்ளலாம் .
மாத சம்பளம் வாங்கும் பல தனியார், அரசு தொழிலாளர்களுக்கும், இ.பி.எஃப் எனப்படும் வருங்கால வைப்பு நிதியினை( Employee Provident fund) செயல்படுத்தி வருவார்கள். மாதந்தோறும் நிறுவனங்கள் வழங்கும் தொகை மற்றும் ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டிருக்கும் பணத்தினை ஊழியர்கள் தேவைப்படும் பொழுது பி.எஃப் அட்வான்ஸ் ஆகவும், பணி ஓய்வுக்குப் பின்னர் முழுமையாக எடுக்கவும் பி.எப் அலுவலகம் அனுமதிக்கிறது. இந்நிலையில் தான் பி.எஃப் புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன் படி உறுப்பினர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) கணக்குகளில் கிடைக்கும் மொத்தத் தொகையில் 75% வரை முன்கூட்டியே பெறும் நடைமுறைகள் உள்ள நிலையில், தற்பொழுது பி.எப் உறுப்பினர்கள் வேலையில்லாமல் ஒரு மாதம் அல்லது மேற்பட்ட காலங்களில் இருந்தாலும், அவர்களும் பி.எஃப் அட்வான்ஸ் தொகையினை எடுத்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களின் பி.எஃப் கணக்குகள் நிறுத்தப்பட்டாலும் ஓய்வூதிய உறுப்பினர்களை தக்க வைத்துக்கொள்ளவும் இந்த நடைமுறை உதவிகரமாக இருக்கும் என பி.எஃப் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக கொரோனா பெருந்தொற்று சமயத்தில் தனிநபர்கள் தங்கள் பணத்தினை பி.எஃப் கணக்கிலிருந்து திருப்பி செலுத்தப்படாத அட்வான்ஸ் தொகையாக பெற்றுக்கொள்ளலாம் என கடந்த 2020-ஆம் ஆண்டு அதவாது முதல் அலையின்போதே அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் மாத வருமானம் ரூ.15 ஆயிரத்திற்கும் கீழ் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று முழுவதும் கணிசமான தொகையினை வழங்கி பி.எப் அலுவலகம் உதவிகளைச்செய்துள்ளது. மேலும் பி.எஃப்பில் உறுப்பினர்களின் வசதிகளுக்கு பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு நடைமுறையில் உள்ளது. அதன் விபரங்கள்:
- கொரோனா பெருந்தொற்றின் காரணமாக உயிரிழக்க நேரிடும் பி.எப் உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கும் இழப்பீடு தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. முன்னதாக ஊழியர்களின் வைப்புத் தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது இழப்பீடு தொகை ரூ. 7 லட்சமாக வழங்கப்படுகிறது. மேலும் குறைந்த பட்ச தொகையாக ரூ. 2.5 லட்சமாக உள்ளது.
2. பணியினை விட்டு வெளியேறிய பிறகு தனது பணத்தினை முழுமையாக எடுக்காவிடிலும், உறுப்பினர்கள் கோவிட் அட்வான்ஸ் தொகையினை பயன்படுத்திக்கொள்ளலாம். குறிப்பாக பி.எப் உறுப்பினர்கள் சேவையினை விட்டு வெளியேறியவர்களும் இந்த நடைமுறை பொறுந்தும்.
- கொரோனா தொற்றின் காரணமாக இறந்த ஊழியர்களைச் சார்ந்தவர்களுக்கு குறிப்பிடத்தக்க சமூக பாதுகாப்பு உதவிகளை ESIC திட்டத்தின் வழங்குகிறது. குறிப்பாக காப்பீடு செய்யப்பட்ட நபர்களின் குடும்பங்களுக்கு உதவுவதற்காக, தொழிலாளர் அமைச்சகம் முன்வந்துள்ளது. இதன்படி கொரோனா தொழிலாளர்களின் சம்பள இழப்பிற்கான இழப்பீடு மற்றும் தொழிலாளியின் இறுதி சடங்குகளுக்கான செலவீனங்கள் போன்றவை மேற்கொள்ளப்படும்.
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பலர் வேலையினை இழக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் பி.எப் கணக்கில் உள்ள பணத்தினை முழுமையாக எடுக்காமல், வேலையில்லாதவர்களும் அட்வான்ஸ் தொகையாக எடுத்துக்கொள்ளலாம் என்ற அறிவிப்பு நிச்சயம் பணியாளர்களுக்கு உதவிக்கரமாக இருக்கும். மேலும் பிற நிறுவனங்களில் சேரும் பொழுது மறுபடியும் கணக்குகள் புதுப்பிக்கப்பட்டு கொள்ள முடியும். இதன் மூலம் நாம் ஓய்வூதிய தொகைக்கான காலத்தினையும் அதிகரித்துக்கொள்ள முடியும் என கூறப்படுகிறது