Investment Tips: எதிர்காலத்திற்காக சேமிக்க திட்டம் இருக்கா? அப்ப முதலீட்டிற்கான விதி 72, 114 & 144 பற்றி தெரியுமா?
Investment Tips: எதிர்காலத்திற்கான சேமிப்புகளை முன்னெடுப்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய, முக்கிய முதலீட்டு விதிகளை இந்த தொகுப்பில் அறியலாம்.
Investment Tips: முதலீடுகள் மூலம் லாபம் பெற உதவும் மூன்று முக்கிய விதிகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.
முதலீட்டிற்கான ஆலோசனைகள்:
தனிநபர் நிதி தொடர்பான நிபுணர்களின் கருத்துப்படி, நீங்கள் புரிந்து கொள்ளும் முதலீட்டு விருப்பத்தில் தான் நீங்கள் எப்போதும் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். எந்த முதலீட்டையும் பற்றி உங்களுக்கு நல்ல தெளிவான திட்டம் இல்லையென்றால், அங்கு ரிஸ்க் எடுப்பதைத் தவிர்ப்பதே நிதி இழப்பு அபாயத்தை தடுக்கும் சிறந்த முடிவாகும். தனிப்பட்ட நிதி நிபுணர்கள் முதலீடு தொடர்பான பல விதிகளை உருவாக்கியுள்ளனர். இது முதலீட்டு பயணத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அத்தகைய மூன்று விதிகள் 72, 114 மற்றும் 144. இந்த விதிகள் என்ன சொல்கின்றன, அவை நமக்கு எப்படி உதவும் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
தனிநபர் முதலீட்டிற்கான விதி 72
முதலீட்டு விதி 72 ஆனது எப்போது உங்களது முதலீடு பணம் இரட்டிப்பாகும்என்பதை விளக்குகிறது. 72 இன் விதியைப் புரிந்து கொள்ள, நீங்கள் சாத்தியமான வருடாந்திர வருவாயின் விகிதத்தை 72 ஆல் வகுக்க வேண்டும். உதாரணமாக, 8 சதவிகித வருடாந்திர வருமானத்தை வழங்கும் முதலீட்டு விருப்பத்தில் நீங்கள் ரூ.1 லட்சத்தை முதலீடு செய்துள்ளீர்கள் என கருதுவோம். இப்போது 72 ஐ 8 ஆல் வகுத்தால் 9 கிடைக்கும். இந்த 9 என்பது உங்கள் முதலீடு இரட்டிப்பாக்க எத்தனை ஆண்டுகள் ஆகும். அதாவது, இந்த முதலீட்டில் உங்கள் ரூ.1 லட்சம் ரூ.2 லட்சமாக மாற 9 ஆண்டுகள் ஆகும் என்பதை உணர்த்துகிறது.
தனிநபர் முதலீட்டிற்கான விதி 114
தனிநபர் முதலீட்டிற்கான விதி 114 ஆனது, உங்கள் முதலீடு மூன்று மடங்காக அதிகரிக்க எவ்வளவு நேரம் எடுக்கும் என்பதைக் விளக்குகிறது. இந்த விதியில், நீங்கள் 72க்குப் பதிலாக 114 ஐப் பயன்படுத்த வேண்டும். உதாரணமாக, ஒரு முதலீடு உங்களுக்கு 10 சதவிகித வருடாந்திர வருமானம் தருவதாக இருந்தால், இந்த முதலீட்டில் உங்கள் பணம் மூன்று மடங்காக அதிகரிக்க 114/10 = 11.4 ஆண்டுகள் ஆகும். இந்த வழியில், இந்த முதலீட்டில் உங்கள் பணம் மூன்று மடங்காக அதிகரிக்க 11.4 ஆண்டுகள் ஆகும்.
தனிநபர் முதலீட்டிற்கான விதி 144
144 என்ற விதியின் மூலம், நமது முதலீடு நான்கு மடங்காக அதிகரிக்க எவ்வளவு நேரம் ஆகும் என்பதைக் கண்டறியலாம். இதற்கு பார்முலாவில் 72க்கு பதிலாக 144ஐ போட வேண்டும். எடுத்துக்காட்டாக, ஒரு முதலீடு உங்களுக்கு 12 சதவிகித வருடாந்திர வருமானத்தை அளிக்கிறது என கருதுவோம். எனவே, இந்த முதலீட்டில், உங்கள் பணம் நான்கு மடங்காக அதிகரிக்க 144/12 = 12 ஆண்டுகள் ஆகும். குறிப்பிட்ட வருடங்களில் உங்கள் முதலீட்டை நான்கு மடங்காக அதிகரிக்க ஆண்டு வருமானம் எவ்வளவு தேவைப்படும் என்பதை அறிய, இந்த சூத்திரத்தை தலைகீழாக பயன்படுத்துவதன் மூலம் அறியலாம்.