Lending APP: கடன் வழங்கும் செயலிகளை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கியின் டிஜிட்டா திட்டம்!.. கூடுதல் விவரம்
Digital Lending APPஇணைய வழியாக கடன் வழங்கும் செயலிகளை கட்டுப்படுத்த டிஜிட்டா திட்டத்தை ரிசர்வ் வங்கியானது கொண்டுவரவுள்ளது
சட்டவிரோதமாக செயல்படும் கடன் வழங்கும் செயலிகளின் பயன்பாட்டை தடுக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
கடன் வழங்கும் செயலிகள்:
சமீப காலங்களாக இணையத்தின் வழியாக கடன் வழங்கும் வகையிலான செயலிகள அதிகரித்து வருகிறது. இவை சட்டத்துக்கு புறம்பாகவும், அதிக அளவிலான வட்டியிலும் கடன் அளித்து வருகின்றன. இதனால், மக்கள் சிலர் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாவதும் ஏமாற்றப்படுவதும் நிகழ்கிறது.
இதுபோன்ற நிகழ்வுகள், அதிகம் ஏற்பட்டு வரும் நிலையில், கட்டுப்படுத்தும் நோக்கில் இந்திய ரிசர்வ் வங்கியானது, சில நடவடிக்கைகளை திட்டமிட்டுள்ளது.
டிஜிட்டா:
இதனடிப்படையில், சட்டவிரோதமாக செயல்படும் கடன் வழங்கும் செயலிகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்த, டிஜிட்டா ( DIGITA ) என்கிற அமைப்பை ஏற்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக பிடிஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
சட்டவிரோதமாக கடன் வழங்கும் பயன்பாடுகள் மற்றும் இணைய மோசடிகளை கட்டுப்படுத்தும் வகையில், டிஜிட்டல் இந்தியா அறக்கட்டளை ஏஜென்சியை ( DIGITA ) நிறுவுவது குறித்து ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருகிறது. இணைய வழியாக கடன் வழங்கும் மோசடிகளை தடுப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, இந்தியா டிரஸ்ட் ஏஜென்சியை அமைப்பது குறித்து ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டிஜிட்டா அமைப்பானது, டிஜிட்டல் மூலமாக, ஆன்லைன் வழியாக கடன் வழங்கும் செயலிகளின் சரிபார்ப்பை ஆராயும். சரிபார்க்கப்பட்ட பயன்பாடுகளின் பதிவேட்டை பராமரிக்கவும் செய்யும் என்று கூறப்படுகிறது.
கூகுள் ப்ளே ஸ்டோர்.
Digital Lending APP Guidelines: இந்நிலையில் கூகுளின் அனுமதிப்பட்டியலுக்கான 442 டிஜிட்டல் லெண்டிங் ஆப்களின் பட்டியலை ரிசர்வ் வங்கியானது, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் வழங்கியுள்ளது.
செப்டம்பர் 2022 முதல் ஆகஸ்ட் 2023 வரை, கூகுள் தனது ஆப் ஸ்டோரில் இருந்து 2,200 டிஜிட்டல் லெண்டிங் செயலிகளை நீக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது
RBI மற்றும் நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள நிதிச் சேவைகள் துறையின் கோரிக்கைகளைத் தொடர்ந்து, RBI-ஆல் ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே கூகுள் ப்ளே ஸ்டோரில் அனுமதிக்கும் கொள்கையை Google செயல்படுத்தும் எனவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, எந்த செயலிகள் பாதுகாப்பானவை, எவை இந்திய சட்டத்துக்கு உட்பட்டு செயல்படுபவை என்பதை கூகுள் ப்ளே ஸ்டார் மூலம் எளிதாக அறிந்து கொள்ளலாம் என கூறப்படுவதால், பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் கூறப்படுகிறது.
இதையடுத்து, நிதி துறையில் நிதி குற்றங்களுக்கு எதிரான செயல்பாடுகளில், ஒரு முக்கிய சோதனைச் சாவடியாக டிஜிட்டா செயல்படும் என்று கூறப்படுகிறது.