Apple Update: ஆப்பிள்: உலகின் முதல் 3 ட்ரில்லியன் டாலர் நிறுவனம்
2007-ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் அறிமுகம் ஆனது. அப்போது முதல் இதுவரை 5800 சதவீதம் அளவுக்கு இதன் சந்தை மதிப்பு உயர்ந்திருக்கிறது.
புத்தாண்டின் முதல் வர்த்தக தினத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 3 ட்ரில்லியன் டாலரை தொட்டிருக்கிறது. இந்த சந்தை மதிப்பை தொட்ட முதல் நிறுவனம் ஆப்பிள்தான். அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் மட்டுமே ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பை விட அதிக ஜிடிபி கொண்டதாக இருக்கிறது. மற்ற அனைத்து நாடுகளின் ஜிடிபியும் ஆப்பிளின் சந்தை மதிப்பை விட குறைவு.
3 ட்ரில்லியன் டாலரை தொட்டாலும் அதற்கு பிறகு சிறிய சரிவில் இந்த பங்கு வர்த்தகமாகி வருகிறது. ஆப்பிள் நிறுவனம் தொடங்கி 38 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு ட்ரில்லியன் டாலர் சந்தை மதிப்பை எட்டியது. அடுத்த 24 மாதங்களுக்குள் 2 ட்ரில்லியன் டாலர் சந்தை மதிப்பை எட்டியது. அடுத்த 16 மாதங்களுக்குள் 3 ட்ரில்லியன் டாலர் சந்தை மதிப்பை எட்டி இருக்கிறது.
2007-ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் அறிமுகம் ஆனது. அப்போது முதல் இதுவரை 5800 சதவீதம் அளவுக்கு இதன் சந்தை மதிப்பு உயர்ந்திருக்கிறது.
ஆப்பிளுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் மைக்ரோசாப்ட் இருக்கிறது. மூன்றாவது இடத்தில் கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் இருக்கிறது. நான்காவது இடத்தில் அமேசான், ஐந்தாவது இடத்தில் டெஸ்லா ஆகியவை இருக்கின்றன. இந்த ஐந்து நிறுவனங்கள்தான் ட்ரில்லியன் டாலருக்கு மேல் சந்தை மதிப்பை உடையவாக உள்ளன.
போயிங், கோககோலா, டிஸ்னி, எக்ஸான் மொபில், மெக்டொனால்ட், நெட்பிளிக்ஸ் மற்றும் வால்மார்ட் ஆகிய அனைத்து நிறுவனங்களின் சந்தை மதிப்பை விடவும் ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு அதிகம்.
வாரன் பபெட்
வாரன் பபெட்டின் நிறுவனமான பெர்க்ஷயர் ஹாத்வே, ஆப்பிள் நிறுவன பங்குகளை வைத்திருக்கிறது. 2016 முதல் 2018-ம் ஆண்டு வரை ஆப்பிள் பங்குகளில் பெர்க்ஷயர் முதலீடு செய்தது. ஆப்பிள் நிறுவனத்தில் 5 சதவீத பங்குகள் பெர்க்ஷயர் வசம் இருக்கிறது. 36 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்ததிருக்கிறது. இந்த பங்குகளின் தற்போதைய சந்தை மதிப்பு 160 பில்லியன் டாலர் அளவுக்கு இருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் பெர்க்ஷயர் நிறுவனத்தின் சிறந்த முதலீடு இது என கருதப்படுகிறது.
2021-ம் ஆண்டு
அமெரிக்காவின் முக்கியமான டெக்னாலஜி நிறுவனங்கள் கடந்த ஆண்டு பெரிய ஏற்றத்தை சந்தித்திருக்கின்றன. அமெரிக்காவின் ஐந்து முக்கியமான டெக்னாலஜி நிறுவனங்கள் கடந்த ஆண்டு மட்டும் 2.45 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்திருக்கின்றன. ஆல்பபெட் பங்கு கடந்த ஆண்டு மட்டும் 65 சதவிதம் அளவுக்கு உயரந்தது. 2009-ம் ஆண்டுக்கு பிறகு ஆல்பபெட் (கூகுள்) நிறுவனத்துக்கு முக்கியமான ஆண்டாக 2021-ம் ஆண்டு ஆல்பபெட்டுக்கு இருக்கிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் 51 சதவீதம் அளவுக்கு 2021-ம் ஆண்டு உயர்ந்திருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் மைக்ரோசாப்ட் பங்கு 1200 சதவீதம் அளவுக்கு உயரந்திருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் 2021-ம் ஆண்டு 34 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. மெடா நிறுவனம் 23 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. ஆனால் முக்கியமான நிறுவனமான அமேசான் கடந்த ஆண்டு சிறப்பாக செயல்படவில்லை. டெக்னாலஜி நிறுவனங்களுக்கு முக்கியமான ஆண்டாக இருந்தால் கடந்த ஆண்டு இந்த பங்கு 2.4 சதவீதம் அளவுக்கு மட்டுமே உயர்ந்திருக்கிறது. 2014-ம் ஆண்டு முதல் இந்த பங்கு 1000 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருக்கிறது.