Tata Punch Facelift: அப்டேட்டில் அமர்க்களம்.. தாறுமாறான பாதுகாப்பு அம்சங்கள், பஞ்ச் புதுசு Vs பழசு, எப்படி இருக்கு?
Tata Punch Facelift: 2026 Launched: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டாடா நிறுவனத்தின் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட பஞ்ச் எடிஷன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tata Punch Facelift: 2026 Launched: டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட் எடிஷன் பழைய மாடலிலிருந்து எவ்வளவு வேறுபட்டுள்ளது என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட பஞ்ச் எடிஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட், ப்யூர், ப்யூர் +, அட்வென்சர், அக்கம்ப்ளிஸ்ட், அக்கம்ப்ளிஸ்ட் +S என 6 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே இருந்த நேட்சுரலி ஆஸ்பிரேடட் மற்றும் சிஎன்ஜி பவர்ட்ரெயின் விருப்பங்கள், 5 ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேடர் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களை கொண்டுள்ளன. கூடுதலாக, தற்போது புதியாக 1.2 லிட்டர் டர்போ சார்ஜ்ட் இன்ஜின் வசதி வழங்கப்பட்டுள்ளது. இது 6 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனை பெறுகிறது. பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட் எடிஷனின் விலை அறிமுககால சலுகையாக 5.59 லட்சத்தில் தொடங்கி, அதிகபட்சமாக 9.29 லட்சம் வரை நீள்கிறது.
பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட் - வெளிப்புற அப்டேட்கள்
பஞ்ச் ஃபேஸ்லிஃப்டானது வெளிப்புற அப்டேட்களில், கடந்த 2024ம் ஆண்டு அறிமுகமான மின்சார எடிஷன் பஞ்சின் தாக்கத்தை கொண்டுள்ளது. அதே மாதிரியான முக்கோண வடிவிலான செங்குத்தாக பொருத்தப்பட்ட எல்இடி முகப்பு விளக்குகளை கொண்டுள்ளது. அதேநேரம், கண்புருவம் வடிவிலான பகல்நேரங்களில் ஒளிரும் டிஆர்எல்கள் சற்று வித்தியாசமாக உள்ளது. பம்பர் கருப்பு நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்டு, ஏர் இண்டேக் வெண்ட்களில் சுற்றி சில்வர் தாக்கத்தை பெறுகிறது. இது கூடுதல் கட்டுமஸ்தான தோற்றத்தை வழங்குகிறது.தோற்ற அடிப்படையிலான மாற்றங்கள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில், 16 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. பின்புறத்தில், புதிய LED டெயில்லைட்கள் லைட் பார் வழியாக இணைக்கப்பட்டுள்ளன.

பின்புற கருப்பு பம்பரில் ஒரு புதிய போலி சில்வர் ஸ்கிட் பிளேட் உள்ளது. பெங்கால் ரூஜ், கேரமல், கூர்க் க்ளவுட்ஸ், சியான்டாஃபிக், டேடோனா கிரே மற்றும் பிரிஸ்டைன் ஒயிட் என் பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட் மொத்தம் ஆறு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. 400 மில்லி மீட்டர் வாட்டர் வேடிங், 193 மில்லி மீட்டர் க்ரவுண்ட் க்ளியரன்ஸை கொண்டுள்ளது. பெட்ரோல் வேரியண்ட்கள் 366 லிட்டர் பூட் ஸ்பேஸையும், சிஎன்ஜி வேரியண்ட்கள் 210 லிட்டர் பூட் ஸ்பேஸையும் கொண்டுள்ளது.
பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட் - உட்புற அம்சங்கள்
ஃபேஸ்லிஃப்ட் எடிஷனானது பழைய மாடலில் உள்ள டேஷ்போர்ட் லே-அவுட்டை பின்பற்றுகிறது. அதேநேரம், புதிய க்ளோஸ் ப்ளாக் 2 ஸ்போக் ஸ்டியரிங் வீல், ஒளிரூட்டப்பட்ட டாடா லோகோவுடன் வழங்கப்பட்டுள்ளது. ப்ராண்டின் பெரிய எஸ்யுவிக்களான நெக்சான் மற்றும் சியாராவில் இருப்பதை போன்ற டச் அடிப்படையிலான க்ளைமேட் கண்ட்ரோல் பேனலும் இடம்பெற்றுள்ளது. ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்ட்ரி இருக்கைகள் தொடர்ந்தாலும், அவற்றின் டிசை மின்சார பஞ்ச் எடிஷனிலிருந்து பின்தொடரப்படுகிறது. ஆனால், புதிய க்ரே மற்றும் நீல நிறம் ஆப்ஷன்கள் சேர்க்கப்பட்டுள்ளன. புதியதாக முன் மற்றும் பின்புற இருக்கைகளில் நீட்டிக்கப்பட்ட தை (தொடை) சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
வசதிகள் அடிப்படையில் பழைய மாடலில் இருக்கும் அதே 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இருந்தாலும், ஆல்ட்ரோசின் மிட்-ஸ்பெக் வேரியணிடில் இருந்து 7 இன்ச் ட்ரைவர் டிஸ்பிளே புதியதாக இணைக்கப்பட்டுள்ளது. 8 ஸ்பீக்கர் சரவுண்ட் சிஸ்டம், சிங்கிள் பேன் சன்ரூஃப், வயர்லெஸ் போன் சார்ஜர், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்ட் ஆட்டோ, 65W டைப்-சி ஃபாஸ்ட் சார்ஜர், ரியர் வெண்ட்களில் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் ஆகிய வசதிகளும் இடம்பெற்றுள்ளன.

பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட் - கவனத்தை ஈர்க்கும் பாதுகாப்பு அம்சங்கள்
பஞ்ச் ஃபேஸ்லிஃப்டின் பாதுகாப்பு குறித்து பேசுகையில், பரிசோதனையில் பெரியவர் மற்றும் சிறியவர்கள் என இரண்டு தரப்புக்கும் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்று அசத்தியுள்ளது. அதன்படி, அனைத்து பயணிகளுக்கும் 3 பாயிண்ட் சீட்பெல்ட் வழங்கப்பட்டுள்ளது. 360 டிகிரி கேமரா, ஸ்டேண்டர்டாக அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி ப்ரோக்ராம், ரியர் பார்கிங் சென்சார்கள், டயர் ப்ரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஹில் ஹோல்ட் மற்றும் டிசெண்ட் கன்ட்ரோல், ISOFIX இருக்கைகள், ஆட்டோ முகப்பு விளக்குகள் மற்றும் ரெயின் சென்சிங் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட் - செக்மெண்டின் சிறந்த அம்சங்கள்
சப்-காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில் வேறு எந்தவொரு காரிலும் இல்லாத அளவிலான பல சிறப்பான அம்சங்களை பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட் கொண்டுள்ளது. அவற்றில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், 26.03 cm HD இன்ஃபோடெயின்மென்ட் ஸ்க்ரீன், 17.78 cm HD டிஜிட்டல் க்ளஸ்டர், 360 டிகிரி HD சரவுண்ட் வியூ சிஸ்டம், ஆட்டோ டிம்மிங் IRVM மற்றும் கமாண்ட் என்ட்ரி 90 டிகிரி கதவு திறப்பு ஆகியவை அடங்கும்.





















