Auto Sales February 2024: பிப்ரவரியில் இந்தியாவில் கார், பைக் விற்பனை - முதலிடம் யாருக்கு? டாடா கண்ட அபார வளர்ச்சி
Auto Sales February 2024: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பிப்ரவரியில் விற்பனையில் அசத்திய, கார், பைக் உற்பத்தி நிறுவனங்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

Auto Sales February 2024: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பிப்ரவரியில் மாத விற்பனையில் மாருதி சுசுகி நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது.
பிப்ரவரி மாத கார் விற்பனை உயர்வு:
இந்திய ஆட்டோமொபைல் சந்தை மாதா மாத மொத்த விற்பனையில் தொடர்ந்து ஏற்றம் அடைந்து வருகிறது. ஜனவரி 2023 முதல் பிப்ரவரி 2024 வரை, தொடர்ச்சியாக 14வது மாதமாக வாகன விற்பனை ஏற்றம் கண்டுள்ளது. பிப்ரவரி 2023ல் உள்நாட்டு சந்தையில் உற்பத்தியாளர்களிடமிருந்து டீலர்களுக்கு 335,324 பயணிகள் வாகனங்கள் அனுப்பப்பட்ட நிலையில், கடந்த பிப்ரவரியில் அந்த எண்ணிக்கை 373,177 யூனிட்டுகளாக 11.3% அளவிற்கு உயர்ந்துள்ளது. இதுவரையில் பிப்ரவரி மாதத்தில் பதிவான அதிகபட்ச பயணிகள் வாகனங்களின் விநியோகம் இதுவாகும். கடந்த ஜனவரி மாதத்தில் டீலர்களுக்கு விநியோகிக்கப்பட்ட 3,94,500 யூனிட்கள் தான், ஒரு மாதத்தில் உற்பத்தியாளர்கள் தரப்பிலிருந்து வழங்கப்பட்ட அதிகபட்ச விநியோகமாகும்.
பயணிகள் வாகனங்களின் விற்பனை:
பிப்ரவரி 2024 இல் மொத்த விற்பனையை விட சில்லறை விற்பனை குறைவாக இருந்தபோதிலும், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 301,900 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த பிப்ரவரியில் 11.3% அதிகமாகி சுமார் 335,900 யூனிட்களாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, பிப்ரவரி மாதத்தில் அதிகபட்சமாக மாருதி நிறுவனம் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 271 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டு பிப்ரவரியை விட 9 சதவிகிதம் அதிகமாகும். மாருதி சுசுகி இந்தியா தனது காம்பாக்ட் யூனிட்டில் பலேனோ, செலிரியோ, டிசையர், இக்னிஸ், ஸ்விஃப்ட், டூர் எஸ் மற்றும் வேகன்ஆர் கார்களை உள்ளடக்கிய 71,627 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. பிரெஸ்ஸா, எர்டிகா, ஃப்ரான்க்ஸ், கிராண்ட் விட்டாரா, இன்விக்டோ, ஜிம்னி, எஸ்-கிராஸ் மற்றும் XL6 மாடல்களை உள்ளடக்கிய uv மொத்த விற்பனை, பிப்ரவரி 2024 இல் 61,234 யூனிட்களை எட்டியுள்ளது. அதைதொடர்ந்து, இரண்டாவது இடத்தில் உள்ள டாடா நிறுவனம் 51 ஆயிரத்து 267 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டு பிப்ரவரியை விட 20 சதவிகிதம் அதிகமாகும்.
பிப்ரவரியில் பயணிகள் வாகன விற்பனை:
உற்பத்தி நிறுவனங்கள் | பிப்ரவரி 2024 | பிப்ரவரி 2023 |
மாருதி | 160,271 யூனிட்கள் | 147,467 யூனிட்கள் |
டாடா | 51,267 யூனிட்கள் | 42,862 யூனிட்கள் |
ஹுண்டாய் | 50,201 யூனிட்கள் | 47,001 யூனிட்கள் |
மஹிந்திரா | 42,401 யூனிட்கள் | 30,358 யூனிட்கள் |
டொயோட்டா | 23,300 யூனிட்கள் | 15,338 யூனிட்கள் |
நிறுவன வாரியான பைக் விற்பனை விவரம்:
- இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 3 லட்சத்து 71 ஆயிரத்து 854 யூண்ட்களை விற்பனை செய்து இருந்தது. இந்நிலையில், நடப்பாண்டு பிப்ரவரி மாதத்தில் 4 லட்சத்து 36 ஆயிரத்து 929 யூனிட்களை விற்பனை செய்துள்ளன.
- டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் 17 ஆயிரத்து 959 மின்சார வாகனங்களை விற்பனை செய்து 16 சதவிகித வளர்ச்சியை கண்டுள்ளது. அதேநேரம், ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 23 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்து 46 சதவிகித வளர்ச்சியை கண்டுள்ளது
- சுசுகி மோட்டார் சைக்கிள் நிறுவனம் 97 ஆயிரத்து 435 யூனிட்களை விற்பனை செய்து 38 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்துள்ளது
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

