Mahindra Thar Facelift: முரட்டு லுக்.. மிரட்டும் அப்டேட்ஸ்.. ராக்ஸ் காபி, தார் ஃபேஸ்லிப்ஃட் - 10 மிகப்பெரிய மாற்றங்கள்
Mahindra Thar Facelift: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தார் 3 டோர் ஃபேஸ்லிஃப்ட் எடிஷனில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும், 10 மிகப்பெரிய மாற்றங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Mahindra Thar Facelift: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தார் 3 டோர் ஃபேஸ்லிஃப்ட் எடிஷன் விரைவில் சந்தைப்படுத்தப்பட உள்ளது.
தார் 3 டோர் ஃபேஸ்லிஃப்ட்
மஹிந்த்ரா நிறுவனம் தனது தார் 3 டோர் மற்றும் பொலேரோ நியோ கார் மாடல்களின், ஃபேஸ்லிஃப்ட் எடிஷனை அடுத்த சில மாதங்களில் அறிமுகப்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. அதேநேரம், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தேதி தொடர்பான அறிவிப்பு ஏதும் தற்போது வரை இல்லை. இந்நிலையில் தான் வெளிப்புறத்தோற்றம் மறைக்கப்பட்டு, சாலையில் பரிசோதனையின் போது எடுக்கப்பட்ட தார் 2025 எடிஷனின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. அவை காரின் உட்புற மற்றும் வெளிப்புற அம்சங்கள் தொடர்பான பல தகவல்களை வழங்கியுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை அண்மையில் சந்தைப்படுத்தப்பட்ட தார் ராக்ஸ் மாடலை அடிப்படையாக கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தார் ஃபேஸ்லிஃப்ட் - 10 மிகப்பெரிய மாற்றங்கள்...
- டபுள் ஸ்டேக்ட் ஸ்லாட்களை கொண்ட புதிய க்ரில்
- முகப்பு மற்றும் டெயில்லேம்ப்களுக்கு புதிய C வடிவிலான எல்இடி சிக்னேட்சர்
- மறுவடிவமைப்பு செய்யப்பட்ட அலாய் வீல்கள்
- புதிய 3 ஸ்போக் எலெக்ட்ரிக் பவர் ஸ்டியரிங்
- பெரிய 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் டச்ஸ்க்ரீன்
- டோர் இன்லெயிட் பவர் விண்டோ ஸ்விட்சஸ்
- A பில்லர்களின் மீது க்ராப் ஹேண்டில்ஸ்
- ஃப்ரண்ட் ஆர்ம்ரெஸ்ட்
- ரிவெர்ஸ் பார்கிங் கேமரா
- செண்டர் கன்சோலில் வயர்லெஸ் சார்ஜர்
தார் ஃபேஸ்லிஃப்ட் - சற்றே மேம்படுத்தப்பட்ட ஸ்டைலிங்
மேம்படுத்தப்பட்ட தாரின் வெளிப்புறத்தில் டபுள் ஸ்டேக்ட் ஸ்லாட்களுடன் கூடிய புதிய க்ரில், முகப்பு மற்றும் டெயில்லேம்ப்களுக்கு புதிய C வடிவிலான எல்இடி சிக்னேட்சர் வழங்கப்பட்டுள்ளன. புதியதாக வடிவமைக்கப்பட்ட அலாய் வீல்கள் டாப் ஸ்பெக் வேரியன்ட்களில் மட்டும் கிடைக்கக் கூடும். அதேநேரம், டயரின் அளவில் எந்த மாற்றமும் இருக்காது என தெரிகிறது.
தார் ஃபேஸ்லிஃப்ட் - ப்ரீமியம் அம்சங்கள்
சாலை பரிசோதனையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களின்படி, புதிய தார் எடிஷனில், தற்போதைய ஹைட்ரலிக் பவர் யூனிட்டிற்கு மாற்றாக 3 ஸ்போக் எலெக்ட்ரிக் பவர் ஸ்டியரிங் வழங்கப்பட்டுள்ளது. பெரிய 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் போன் சார்ஜர், ரிவர்ஸ் பார்கிங் கேமரா, ஃப்ரண்ட் ஆர்ம்ரெஸ்ட், டோர் இன்லெயிட் பவர் விண்டோ ஸ்விட்சஸ்,A பில்லர்களின் மீது க்ராப் ஹேண்டில்ஸ் ஆகிய அம்சங்களும் தார் ராக்ஸில் இருந்து பின்பற்றப்படுகிறது.
தார் ஃபேஸ்லிஃப்ட் - இன்ஜின், கியர்பாக்ஸ் ஆப்ஷன்
தாரின் புதிய எடிஷனில் இன்ஜின் அடிப்படையில் எந்தவித மாற்றமும் செய்யப்படாமல், தற்போதுள்ள அம்சங்கள் அப்படியே தொடர்கிறது. அதன்படி, 152bhp ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 119bhp ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 1.5 லிட்டர் டர்போ டீசல், 132bhp ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 2.2 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் தொடர்கின்றன. ட்ரான்ஸ்மிஷன் பிரிவில், 6 ஸ்பீட் மேனுவல் ஆப்ஷன் ஸ்டேண்டர்டாக வழங்கப்படுகிறது. 6 ஸ்பீட் டார்க் கன்வெர்டர் ஆட்டோமேடிக் ஆப்ஷனானது, 2.2 லிட்டர் டீசல் வேரியண்ட்களில் மட்டுமே கிடைக்கிறது.
தார் ஃபேஸ்லிஃப்ட் - விலை விவரங்கள்
மத்திய அரசு அண்மையில் அறிமுகப்படுத்திய ஜிஎஸ்டி சீர்திருத்தத்தை தொடர்ந்து, தற்போதைய தார் 3 டோர் காரின் விலை ரூ.1.35 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த காரின் விலை வரம்பு ரூ.10.31 லட்சம் தொடங்கி ரூ.16.60 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்) வரை நீள்கிறது. கூடுதல் பிரீமியம் அம்சங்கள் மற்றும் ஸ்டைலிங் மேம்பாடுகள் சேர்க்கப்பட்டதால், 2025 தார் ஃபேஸ்லிஃப்ட் சிறிய விலை உயர்வைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடக்க விலை ரூ.11 லட்சம் முதல் ரூ.11.50 லட்சம் வரை நீளக்கூடும்.





















