Volvo XC40 Recharge: 408hp பவர், சிங்கிள் சார்ஜில் 418 கிலோமீட்டர்கள்.. மிரட்ட வருகிறது வால்வோ XC40 ரீசார்ஜ்!
வால்வோ தனது XC40 ரீசார்ஜ் எலக்ட்ரிக் காரை ஜூலை 26 -யில் அறிமுகப்படுத்த உள்ள நிலையில், அதன் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.
வால்வோ தனது XC40 ரீசார்ஜ் எலக்ட்ரிக் காரை ஜூலை 26 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது, இது உள்நாட்டிலேயே அசெம்பிள் செய்யப்படும். ஏற்கனவே விற்பனையில் உள்ள XC40 ரீசார்ஜின் 2022'க்கான ஃபேஸ்லிஃப்ட் வெர்சனான இது இரண்டு மின்சார மோட்டார்களை கொண்டிருக்கும், 408hp பவருடன் அறிமுகமாக இருக்கும் இந்த எலக்ட்ரிக் எஸ்யூவியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 418 கிலோமீட்டர்கள் வரை செல்ல முடியும்.
2022 வால்வோ XC40 ரீசார்ஜின் முழு விவரங்கள்:
வால்வோ 'XC40 ரீசார்ஜ்' 78kWh பவர்ஃபுல் பேட்டரியைக் கொண்டிருக்கிறது. இது WLTP (Worldwide Harmonized Light Vehicles Test Procedure) எனப்படுகிற உலகளாவிய இலகுரக வாகன சோதனையில் ஒரு சார்ஜில் 418கிமீ தூரம் வரை செல்லும் என வால்வோ கூறியுள்ளது. வால்வோ 'XC40 ரீசார்ஜ்' காரை 150kW DC ஃபாஸ்ட் சார்ஜ் தொழில்நுட்பம் மூலம் வேகமாக சார்ஜ் செய்துகொள்ளலாம், இந்த தொழில்நுட்பத்தால் இதன் பேட்டரியை 10 சதவிகிதத்திலிருந்து 80 சதவிகிதம் வரை வெறும் 33 நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும். வால்வோ வழங்கும் மற்றொரு 50kW ஃபாஸ்ட் சார்ஜ் ஆப்ஷன் மூலம் XC40'யை சுமார் இரண்டரை மணிநேரத்தில் 100 சதவீதம் சார்ஜ் செய்ய முடியும் என்று கூறுகிறது வால்வோ.
வால்வோ 'XC40 ரீசார்ஜ்' 408hp மற்றும் 660Nm டார்க்கை உற்பத்தி செய்யும் இரண்டு மின்சார மோட்டார்களைக் கொண்டுள்ளது, இது பெட்ரோலில் இயங்கும் மாடலை விட இரண்டு மடங்கு பவர் அதிகம். இருப்பினும் 1,188 எடைகொண்ட இந்த காருக்கு இந்த பவர் போதுமானதாகவே தோன்றுகிறது.
2022 வால்வோ XC40 ரீசார்ஜின் சிறப்பம்சங்கள்:
வால்வோ கார்களில் சிறப்பம்சங்களுக்கு என்றுமே குறை இருக்காது. வால்வோ XC60-ன் புதிய டச் ஸ்கிரீன் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் வசதிகளை இந்த ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட XC40 ரீசார்ஜ்-லும் சேர்த்திருக்கிறது வால்வோ. வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப லெதர் வேலைப்பாடுகள் இல்லாத இண்ட்டீரியரையும் ஆப்ஷனலாக வழங்குகிறது, மேலும் ஷார்ப்பான டயல்கள் மற்றும் புதிய ஆண்ட்ராய்டு ஆட்டோவை அடிப்படையாகக் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தையும் வழங்குகிறது.
பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் மொபைல் ஃபோன் சார்ஜிங், கனெக்டெட் கார் தொழில்நுட்பம், முன் இருக்கைகளுக்கு மெமரி ஆப்ஷன் மற்றும் வால்வோவின் (Level 2 Autonomous Driving Capability) தன்னியக்க ஓட்டுநர் திறனான 'லெவல் 2' ஆகியவைகளையும் வழங்குகிறது வால்வோ.
2022 வால்வோ XC40 ரீசார்ஜின் விலை மற்றும் போட்டியாளர்கள்:
'XC40 ரீசார்ஜ்' பெங்களூருக்கு அருகிலுள்ள ஹோஸ்கோட் ஆலையில் அசெம்பிள் செய்யப்படுகிறது. உள்நாட்டிலேயே அசெம்பிள் செய்யப்படுவதால் இதன் விலையும் மார்கெட்டில் உள்ள மற்ற எலக்ட்ரிக் கார்களுடன் போட்டிபோடும் வகையிலேயே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 26'ல் அறிமுகமாக இருக்கும் 'XC40 ரீசார்ஜ்' சமீபத்தில் அறிமுகமான KIA EV6 மற்றும் புதிதாக வரவிருக்கும் Hyundai Ioniq 5 ஆகியவற்றுடன் போட்டிபோடும்.