(Source: ECI/ABP News/ABP Majha)
மதுரையில் பால் உற்பத்தியாளர்கள், பாலை சாலையில் கொட்டி திடீர் சாலை மறியல்.. வீடியோ
பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தி , உசிலம்பட்டியில் பால் உற்பத்தியாளர்கள் பாலை சாலையில் கொட்டி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் ஆவின் நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு, கொள்முதல் விலையை லிட்டருக்கு 7 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் வலியுறுத்தியது. அவ்வாறு உயர்த்தாத பட்சத்தில் பால் நிறுத்த போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே பால் கொள்முதல் விலையை உயர்த்தித் தராததை கண்டித்து, பால் உற்பத்தியாளர்கள் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தி - மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பால் உற்பத்தியாளர்கள் பாலை சாலையில் கொட்டி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
— arunchinna (@arunreporter92) March 20, 2023
தங்களுடைய கோரிக்கையை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டனர் !@usilaigeetha #madurai @ABPNews pic.twitter.com/5SQnVe9ibW
தற்போது பசும்பால் 35 ரூபாய்க்கும், எருமைப்பால் 44 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டு வரும் நிலையில், 10 ரூபாய் உயர்த்தி தர வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 3 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில் மீதமுள்ள 7 ரூபாயையும் உயர்த்த வேண்டுமென கோரி ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாடுகளுக்கான தீவனம், பாலுக்கான உற்பத்தி செலவை ஒப்பிடும்போது தற்போது கொள்முதல் செய்யப்பட்டு வரும் விலை குறைவு என்பதால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தி , உசிலம்பட்டியில் பால் உற்பத்தியாளர்கள் பாலை சாலையில் கொட்டி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை ஆவினுக்கு மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலிருந்தும் தினசரி சுமார் 18 ஆயிரம் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து 1 லட்சத்து 36 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது, இதர ஒன்றியங்களிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு தினசரி 1 லட்சத்து 86 ஆயிரத்து 200 லிட்டர் பால் மதுரை ஆவின் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்