”சண்டையை நிறுத்துங்க”ஆட்டத்தை ஆரம்பித்த ட்ரம்ப் முடிவுக்கு வருகிறதா போர்? | Russia | Donald trump
உலகின் மிகப்பெரிய நாடான ரஷ்யாவிற்கும், நாடான உக்ரைனுக்கும் கடந்த 3 ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. இந்த இரு நாட்டு போர் காரணமாக உலக பொருளாதாரம், வர்த்தகம் உள்ளிட்ட பல விஷயங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இரு நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று உலக நாடுகளும், மக்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்த விவகாரத்தில் புதிய திருப்பமாக இரு நாடுகள் மத்தியில் போர் நிறுத்தத்திற்கான முயற்சியில் அமெரிக்கா குதித்துள்ளது. இதற்கான முயற்சியில் நேரடியாக அமெரிக்க அதிபர் ட்ரம்பே இறங்கியுள்ளார்.
போர் நிறுத்தத்திற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் நாளை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேச உள்ளார். இந்த பேச்சுவார்த்தையை அமெரிக்க அதிபர் ட்ரம்பும், ரஷ்யாவும் உறுதி செய்துள்ளது. பகல்ஹாம் தாக்குதலுக்கு எதிரொலியாக இந்தியா பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதலை அடுத்து, இரு நாடுகள் மத்தியில் சண்டை ஏற்பட்டது. இந்த சண்டை அதிகாரப்பூர்வமான போராக மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகளவு இருந்த நிலையில், இந்த மோதல் நிறுத்தப்பட்டது. வர்த்தகத்தை முன்னிறுத்தி இந்தியா - பாகிஸ்தான் சண்டையை தான் நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெருமையாக கூறினார். மேலும், இந்தியா - பாகிஸ்தான் மோதல் நிறுத்தப்படுவதாக இரு நாடுகளும் அறிவிக்கும் முன்னரே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் அறிவித்தார்.
மத்திய அரசு இதில் அமெரிக்காவின் தலையீடு இல்லை என்று மறுப்பு தெரிவித்தாலும் ட்ரம்ப் தொடர்ந்து தானே இந்தியா - பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதாக பொது வெளியில் தெரிவித்து வருகிறார். இந்த நிலையில், அமெரிக்காவின் பரம எதிரியாக கருதப்படும் ரஷ்யா- உக்ரைன் மோதலில் சமாதானம் நடத்த முயற்சிப்பது உலக நாடுகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு மற்றொரு முக்கிய காரணம், ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் அமெரிக்கா அங்கம் வகிக்கும் நேட்டோ நாட்டு படையில் சேர வேண்டும் என்று ஆர்வம் தெரிவித்ததால்தான் இந்த போரே தொடங்கியது. இந்த நிலையில், போருக்கு முக்கிய காரணமான அமெரிக்காவே தற்போது போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தையில் இறங்கியிருப்பது பலருக்கம் ஆச்சரியத்தை உண்டாக்கியுள்ளது.
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவி வகித்து வரும் ட்ரம்ப் மீது ஏராளமான விமர்சனங்கள் உள்ளது. அந்த விமர்சனங்களை நல்ல விதமாக மாற்றும் முயற்சியாகவும், தனது செல்வாக்கை அதிகரிக்கும் முயற்சியாகவும் ட்ரம்ப் இதுபோன்ற போர் நிறுத்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால், அமெரிக்காவின் சமாதானத்தை ரஷ்ய அதிபர் புதின் ஏற்பாரா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.





















