கூட்டுறவுத் தேர்வு முடிவுகள் தாமதம்: மாணவர்களை வஞ்சிக்கும் திமுக அரசு! எடப்பாடி பழனிசாமி கண்டனம்
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வை முறையாக நடத்தத்தான் நிர்வாகத் திறனில்லை என்று பார்த்தால், கூட்டுறவுத் துறைத் தேர்வுக்கான முடிவுகளை வெளியிடக்கூட முடியவில்லை- ஈபிஎஸ்.

கூட்டுறவுத் துறையில் உதவியாளர்கள் மற்றும் இளநிலை உதவியாளர்கள் 2581 பேரை தேர்ந்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் கடந்த அக்டோபர் 5, 11 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. சான்றிதழ் சரிபார்ப்பு நவம்பர் 15, 21 ஆகிய தேதிகளில் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், அந்தப் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் இதுவரை வெளியிடப்படவில்லை. அதற்கு நீதிமன்ற வழக்குகளே காரணம் என்று அரசு கூறி வருகிறது.
இந்த நிலையில் தேர்வு முடிவுகளை வெளியிடக் கூறி, கீழ்ப்பாக்கத்தில் இன்று தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே அரசியல் தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ’’கூட்டுறவுத் துறை சார்பில், கடந்த அக்டோபர் மாதம் SRB மற்றும் DRB பணியிடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், 100 நாட்கள் கடந்த பின்னும், இதுவரை முடிவுகளை வெளியிடாமல் மாணவர்களை வஞ்சித்து வருகிறது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக அரசு.
அறவழியில் போராடினால் அராஜக கைதா?
பெரும் கனவுகளோடு தாங்கள் எழுதிய தேர்வுகளின் முடிவுகளை இதுவரை வெளியிடாத விடியா திமுக அரசைக் கண்டித்து, கூட்டுறவுத் துறை வளாகத்தின் முன்பு அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள, திமுக அரசின் காவல்துறை அராஜகப் போக்குடன் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வை முறையாக நடத்தத்தான் நிர்வாகத் திறனில்லை என்று பார்த்தால், நடந்து முடிந்த கூட்டுறவுத் துறைத் தேர்வுக்கான முடிவுகளை வெளியிடக் கூட வக்கற்ற அரசாக பொம்மை முதல்வரின் விடியா திமுக அரசு இருப்பது வெட்கக்கேடானது.
தேர்வர்களின் எதிர்காலத்தில் அலட்சியப் போக்குடன் இருக்கும் ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
கைது செய்யப்பட்ட தேர்வர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும், கூட்டுறவுத் துறை தேர்வின் முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் எனவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்’’ என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.
























