ABP NADU Exclusive: ஆலங்குடிக்கு செய்தது என்ன? சாதனைகளை அடுக்கிய அமைச்சர் மெய்யநாதன்- ஏபிபி நாடுக்கு சிறப்பு பேட்டி
அமைச்சர் மெய்யநாதன் ஏபிபி நாடுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் ஆலங்குடி தொகுதிக்கு செய்தது என்னென்ன? என்று பட்டியலிட்டார்.

ஆலங்குடியின் சட்டமன்ற உறுப்பினரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான மெய்யநாதன் நமது ஏபிபி நாடு-க்கு சிறப்பு பிரத்யேக பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
சாதனைகள் என்ன?
10 ஆண்டுகளில் என்னுடைய மிகப்பெரிய சாதனையாக ஆலங்குடியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொண்டு வந்துள்ளோம். தொடங்கி 4 வருடங்களில் 900 ஆயிரம் பேர் படித்துக் கொண்டிருக்கின்றனர். சாதாரண குடும்பத்தில் பிறந்து நானும் அரசு கல்லூரியில் படித்து அமைச்சரவையில் இருந்ததுடன், முதலமைச்சர் கேட்டவுடனே ஆலங்குடியில் 900 பேர் படித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. கல்விதான் பெரிய விஷயம்.
வாழ்நாள் பெருமை:
நாம அந்த கல்வியை படிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டுள்ளோம். நீண்ட தூரம் சென்று படித்துள்ளோம். என்னுடைய ஆலங்குடி தொகுதியைப் பொறுத்தவரை 80 ஊராட்சிகள், 2 பேரூராட்சிகள். இந்த பகுதி முழுக்க முழுக்க கிராமங்கள். நம் தொகுதி பிள்ளைகளுக்கு உயர்கல்வி வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருப்பது என் வாழ்நாளின் மிகப்பெரிய பெருமை சேர்க்கக்கூடியது. மேலும், மிகப்பெரிய கனவை நிறைவேற்றியிருக்கிறேன். அதற்கு காரணம் முதலமைச்சர். இந்த கல்லூரி இருக்கும்வரை முதலமைச்சர் பெயரையும் சொல்லும். என் பெயரையும் சொல்லும். அது மிகப்பெரிய கனவாக பார்க்கிறேன்.
ஊராட்சி ஒன்றியம்:
ஊராட்சி ஒன்றியம் ஏற்படுத்துவோம் என்று கூறியிருந்தேன். அதை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தில் சில பகுதிகளையும், திருவரங்குலம் ஊராட்சி ஒன்றியத்தில் சில பகுதிகளையும் இணைத்து கொத்தமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு ஊராட்சி ஒன்றியம் அமைக்கும் கோரிக்கையை விரைவில் நிறைவேற்றித் தருவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

கீரமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு தாலுகா அலுவலகம் நிறைவேற்ற வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை. அதை முயற்சித்தேன். வருவாய்துறையில் பிரிக்கும் அளவிற்கு சட்ட விதிகளின் கீழ் இது இல்லாததால், எதிர்காலத்தில் கீரமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு தாலுகா அலுவலகம் உருவாக்கும் கோரிக்கை பரிசீலணையில் உள்ளது. குளிர்பதன கிடங்கு முதலமைச்சர் அறிவிப்பைத் தொடர்ந்து தொடங்கியுள்ளனர். தொகுதி முழுவதும் மேம்பாலங்கள், சாலைகள் கட்டப்பட்டுள்ளது.
அறந்தாங்கி - புதுக்கோட்டை சாலை:
40 கோடி செலவில் விவசாயிகளின் நெல்களை பாதுகாக்க நெல் குடோன் அமைத்துக் கொடுத்துள்ளோம். அதேபோல, ரூபாய் 3 கோடியில் மினி ஸ்டேடியம் திருவரங்குலத்தில் அமைத்துள்ளோம். சிட்கோ தொழிற்பேட்டை அமைத்துக் கொடுத்துள்ளோம். துணை மின் நிலையம் அமைத்துக் கொடுப்போம் என்று சொன்னோம் அதுவும் ரூபாய் 13 காேடி செலவில் அமைக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. தொகுதி முழுவதும் நீர்நிலைகளைத் தூர்வாருதல், பள்ளி கட்டிடங்கள், மேல்நிலைப் பள்ளிகளுக்கான கட்டிடங்கள் அனைத்து வசதிகளும் செய்துள்ளேன்.

அறந்தாங்கியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலை முழுக்க முழுக்க என்னுடைய ஆலங்குடி தொகுதியில்தான் செல்கிறது. அந்த பகுதியில் கிட்டத்தட்ட 32 வேகத்தடைகள் இருக்கும். இதை நான்கு வழிச்சாலையாக மாற்றும் கனவு. இதை முதலமைச்சரிடமும், துணை முதலமைச்சரிடமும் சென்று கூறினேன். உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து நான்கு வழிச்சாலையாக அமைத்துவிட்டோம். இன்னும் 20 கிலோமீட்டருக்கு ரூபாய் 100 கோடிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்பே பணிகள் முடிந்துவிடும். புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கிக்கு 15 முதல் 17 நிமிடங்களில் செல்ல முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.























