தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
ஓ.பன்னீர்செல்வத்தின் முக்கிய ஆதரவாளரான முன்னாள் அமைச்சரான வைத்திலிங்கம் தவெக-விற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக-வை கைப்பற்றுவேன் என்று சபதமிட்டு வந்த ஓ.பன்னீர்செல்வம் பாஜக-வையே மலைபோல் நம்பியிருந்த நிலையில், பாஜகவோ எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணியை வலுப்படுத்தி சுமூகமாக தேர்தலைச் சந்திக்க காய்கள் நகர்த்தி வருகிறது.
இதனால், ஓ.பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகள் மீது அதிருப்தி அடைந்த வைத்திலிங்கம் தவெக-வில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. ஓ.பன்னீர்செல்வத்தின் ஒரே நம்பிக்கையாக தற்போது இருப்பவர் வைத்திலிங்கம் மட்டுமே ஆவார். அவரும் ஓ.பன்னீர்செல்வத்தை விட்டு விலகி தவெக சென்றுவிட்டால் ஓ.பன்னீர்செல்வம் மிகப்பெரிய அளவில் பலவீனமாக மாறிவிடுவார். டெல்டாவில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பக்கபலமாக இருப்பவர் வைத்திலிங்கம் மட்டுமே ஆவார். அவரும் வேறு கட்சிக்குச் சென்றுவிட்டால் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் செல்வாக்கு மிக கடுமையாக சரிந்துவிடும் அபாயம் உள்ளது. இதனால், வைத்திலிங்கத்தை தன் பக்கமே தக்க வைக்க ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
திமுக பக்கம் செல்ல முடியாத அதிமுக-வினரின் புகலிடமாக தவெக மாறி வருகிறது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதற்கான தொடக்கப்புள்ளியை வைத்துள்ள நிலையில், அவரைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியால் ஓரங்கட்டப்பட்ட அதிமுக-வினர் தவெக-வில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக- பாஜக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் இடம்பெறுவாரா? அல்லது சுயேட்சையாக களமிறங்குவாரா? அல்லது அவர் தனிக்கட்சி தொடங்குவாரா? அல்லது வேறு கட்சியில் இணைவாரா? என்பது கேள்வியாக எழுந்துள்ளது. தேர்தல் நெருங்க நெருங்க தமிழ்நாட்டின் அரசியலில் பல்வேறு கட்சித் தாவல்களும், கூட்டணி மாற்றங்களும் அடுத்தடுத்து அரங்கேறும் என்றே கருதப்படுகிறது. தினகரன், சசிகலா ஆகியோருடன் ஓ.பன்னீர்செல்வம் கரம் கோர்த்தாலும் அவர்களாலும் அதிமுக-வில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த இயலவில்லை.




















