"கள்ளுக்கு தடை நீக்கம்" தேஜஸ்வி யாதவ் அதிரடி பாஜக கூட்டணிக்கு செக்
மகாபந்தன் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் 20 நாட்களுக்குள் ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. 243 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட இங்கு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நவம்பர் 14 தேதி அன்று வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. நிதிஷ் குமார் தலைமையிலான பாஜக கூட்டணி ஒரு புறமும், தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மாகாபந்தன் கூட்டணி ஒரு புறமும், பிரசாந்த் கிஷோர் என மும்முனை போட்டி நிலவுகிறது. இச்சூழலில் தான் இந்த முறை எப்படியாவது நிதிஷ் குமாரை வீழ்த்தி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து விட வேண்டும் என்று தீவிரம் காட்டி வரும் தேஜஸ்வி யாதவ் தேர்தல் அறிக்கையில் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அதாவது தங்கள் கூட்டணி ஆட்சி அமைத்தால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு அரசு வேலை வழங்கப்படும். அவர்களின் மாத சம்பளம் ரூ.30,000 ஆக நிர்ணயிக்கப்படும். கூடுதலாக, அவர்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும், மேலும் எதிர்காலத்தில் அவர்களுக்கு வட்டியில்லா கடன்கள் வழங்கப்படும். பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS திட்டம்) செயல்படுத்தப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்.மை-பெஹின் மான் யோஜனாவின் கீழ், டிசம்பர் 1 முதல் பெண்கள் மாதத்திற்கு ரூ.2,500 நிதி உதவியையும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு ரூ.30,000 நிதி உதவியையும் பெறுவார்கள். இரவு நேரப் பணிகளின் போது பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், பணியிடங்களில் துன்புறுத்தலைத் தடுப்பதற்கும் கடுமையான சட்டங்கள் இயற்றப்படும். புகார்களை விரைவாகத் தீர்க்க ஒவ்வொரு மாவட்ட அளவிலும் ஒரு சிறப்பு பெண்கள் பாதுகாப்புப் பிரிவு நிறுவப்படும்.அதே போல் பாரம்பரிய பானமான கள் மீதான தடையும் நீக்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.





















