Priyanka Gandhi On Annapoorna | ”கேள்வியே கேட்கக் கூடாதா?பாஜகவின் தந்திரமா நிர்மலா?”சீறும் பிரியங்கா
கேள்வி கேட்டால் அவமானப்படுத்தப்படுகிறார்கள், அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளரை கேமராவுக்கு முன்னால் வலுக்கட்டாயமாக மன்னிப்பு கேட்க வைத்துள்ளார் என்று கொந்தளித்துள்ளார் காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி.
அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் ஸ்ரீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஜிஎஸ்டி குறித்து கலந்தாலோசனை கூட்டத்தில் அதிருப்தியை வெளிப்படுத்தினார். ஸ்வீட்டை விட காரத்திற்கு அதிக ஜிஎஸ்டி இருப்பதாகவும், பன்னுக்கு வரி இல்லை, ஆனால் அதற்குள் இருக்கும் கிரீமுக்கு வரி இருப்பதாகவும் சொல்லி ஜிஎஸ்டி வரியை ஒழுங்குபடுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதனை தொடர்ந்து நிர்மலா சீதாராமனை தனியாக சந்தித்து மன்னிப்பு தெரிவித்தார். நான் எந்த கட்சியை சேர்ந்தவனும் அல்ல, நான் சொன்ன கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என விளக்கம் கொடுத்தார்.
ஆனால் அவர் மன்னிப்பு கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையானது. அவரை அவமரியாதை செய்துவிட்டதாகவும், வலுக்கட்டாயமாக மன்னிப்பு கேட்க வைத்துள்ளதாகவும் எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆணவம் காயப்படும்போது, அவர்களுக்கு அவமானத்தையே திருப்பி கொடுக்க தெரிகிறது என்று நிர்மலா சீதாராமனை விமர்சித்திருந்தார் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி.
இந்தநிலையில் காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தியும் இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அவரது பதிவில், ‘கேள்வி கேட்டால் அவமதிக்கப்படுகிறார்கள். இதுதான் மோடி அரசின் பதிலாக இருக்கிறது. கோயம்புத்தூரின் அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் ஜிஎஸ்டி பிரச்னை தொடர்பாக நிதியமைச்சரிடம் கேள்வி கேட்டதால் அவமானப்படுத்தப்பட்டுள்ளார். ஒரு தொழிலதிபராக அவர் ஜிஎஸ்டி குறித்து நியாயமாக கவலையை சொன்னார். அதற்காக கேலி செய்யப்பட்டார். அவரை கேமரா முன்பு வலுக்கட்டாயமாக மன்னிப்பு கேட்க வைத்தது மத்திய அரசின் தந்திரம். பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டியால் சிறு, குறு தொழில் செய்பவர்கள் சிக்கித்தவித்து வருகின்றனர். வரி குறைப்பு மற்றும் கடன் தள்ளுபடிகளால் பாஜக ஆட்சியில் பணக்காரர்கள் மட்டும் அனைத்து பலனையும் பெறுகிறார்கள். எளிமையான, நியாயமான ஜிஎஸ்டிக்கு காங்கிரஸ் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது, ஆனால் இந்த அரசு பிரச்னைகளைத் தீர்ப்பதை விட எதிர்த்து கேள்வி கேட்கும் குரல்களை அடக்குவதில் அதிக அக்கறை காட்டுகிறது. மக்களைப் புறக்கணிப்பதை விட்டுவிட்டு, பணக்காரர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் ஏற்றவகையில் ஜிஎஸ்டியை மாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.