Kia Carens: வரட்டா மாமே..! இனி காரென்ஸில் இந்த வேரியண்ட்ஸ்லாம் கிடைக்காது - கைவிட்ட கியா, ஏன் தெரியுமா?
Kia Carens: கியா நிறுவனம் தனது பிரதான கார் மாடலான காரென்ஸின் பல்வேறு வேரியண்ட்களை கைவிடுவதால அறிவித்துள்ளது.
Kia Carens: கியா நிறுவனத்தின்பிரதான கார் மாடலான காரென்ஸ், இனி ஒரே ஒரு வேரியண்டில் மட்டுமே இந்திய சந்தையில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கியா காரென்ஸ்:
கியா நிறுவனம் அண்மையில் தனது ஃபிளாக்ஷிப் மாடலான காரென்ஸ் கிளாவிஸ் மாடலை இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகப்படுத்தியது. அதன் விளைவாக இந்த கார் மாடலின் முந்தைய எடிஷனான, காரென்ஸின் லைன் - அப் மிகப்பெரிய மாற்றத்தை பெற்றுள்ளது. அதன்படி, அந்த மாடலின் Premium (O)-வை தவிர மற்ற அனைத்து வேரியண்ட் உற்பத்தியையும் கியா நிறுத்தியுள்ளது. கூடுதலாக இந்த MPV கார் மாடலின் பவர்ட்ரெயின் வாய்ப்புகளிலும் மிகப்பெரும் மாற்றங்களை வழங்கியுள்ளது.
கைவிடப்படும் காரென்ஸ் வேரியண்ட்கள்:
திருத்தத்திற்கு முன்பாக, இந்த கார் மாடல் மொத்தம் 9 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதில் ப்ரீமியம், ப்ரீமியம் (O), கிராவிட்டி, ப்ரெஸ்டீஜ், ப்ரெஸ்டீஜ் (O), ப்ரெஸ்டீஜ் பிளஸ், பிரெஸ்டீஜ் பிளஸ் (O), லக்ஷரி பிளஸ் மற்றும் X- லைன் ஆகியவை அடங்கும். இவற்றின் விலை ரூ.10.60 லட்சத்தில் தொடங்கி அதிகபட்சமாக ரூ.19.70 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது 8 வேரியண்ட்களின் விற்பனையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
அதாவது மேற்குறிப்பிடப்பட்ட வேரியண்ட்களில் இனி ப்ரீமியம் (O) வேரியண்ட் மட்டுமே, கியா விற்பனை செய்ய உள்ளது. இதன் விலை ரூ.11.41 லட்சம் ஆகும். இந்த வேரியண்டில் வெண்டிலேடட் சீட்ஸ், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், அலாய் வீல்ஸ், லெவல் 2 ADAS, லெதரெட் அப்ஹோல்ஸ்ட்ரி, ஆம்பியண்ட் லைட்டிங், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், க்ரூஸ் கண்ட்ரோல், சன்ரூஃப், 6 சீட் லே-அவுட் ஆகிய அம்சங்கள் இடம்பெறாது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ்-க்கு ”நோ”
ப்ரீமியம் (O) காரென்ஸ் கார் மாடலில் மூன்று வகையான இன்ஜின் ஆப்ஷன்கள் தொடர்கின்றன. அதாவது, 116hp திறன் கொண்ட 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 116hp திறன் கொண்ட 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் மற்றும் 160hp திறன் கொண்ட 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆபஷன்கள் உள்ளன. ஆனால், இவற்றில் வழங்கப்பட்டு வந்த ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வாய்ப்புகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன. அதன்படி, இந்த இன்ஜின்களில் 6 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன. டர்போ பெட்ரோல் இன்ஜினில் மட்டும் 6 ஸ்பீட் iMT டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இதன் மூலம் காரென்ஸ் மாடலில் இருந்து 7 ஸ்பீட் டூயல் கிளட்ச் மற்றும் 6 ஸ்பீட் டார்க் கன்வெர்டர் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் வாய்ப்புகள் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளன.
காரணம் என்ன?
கியா நிறுவனம் அண்மையில் தான் மேம்படுத்தப்பட்ட பிரீமியம் காரென்ஸ் வெர்ஷனாக, காரென்ஸ் கிளாவிஸ் கார் மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. மொத்தம் 8 வண்ண விருப்பங்களில், 7 வேரியண்ட்களை கொண்ட இந்த காரின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், ரூ.25 ஆயிரம் செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளும் ஆப்ஷன் தொடங்கியுள்ளது. அடுத்த மாதம் இந்த காரின் விலை அறிவிக்கப்படலாம் எனவும், அதன் தொடக்க விலை சுமார் ரூ.11 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கியா நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோவில் காரென்ஸ் மாடலுக்கு மேலே புதிய காரென்ஸ் கிளாவிஸ் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. காரென்ஸ் மாடலின் விற்பனை இந்திய சந்தையில் தொடரும் என முதலில் கூறியிருந்தாலும், அதன் 8 வேரியண்ட்களை கியா தற்போது கைவிட்டுள்ளது. இதன் மூலம் காரென்ஸ் கிளாவிஸ் விற்பனை ஊக்குவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















