Anbumani: "ராமதாஸ் இல்லாவிட்டால் ஓபிசிக்கு இட ஒதுக்கீடே வந்திருக்காது.." அன்புமணி ராமதாஸ் ஆவேசம்
ராமதாஸ் இல்லாவிட்டால் ஓபிசிக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்திருக்காது என்று அன்புமணி ராமதாஸ் பேசினார்.

மாமல்லபுரத்தில் வன்னியர் சங்கம் நடத்தும் சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற்றது. பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ஆகியோரது தலைமையில் இந்த மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது, "தமிழ்நாட்டில் தனிப்பெரும் சமுதாயம் வன்னிய சமுதாயம். இது நமது குடும்ப சந்திப்பு. இங்குள்ளவர் அனைவரும் என் தொப்புள் கொடி உறவுகள். என் சொந்தங்கள். இந்த சந்திப்பில் வரலாறு உள்ளது. இது சாதாரணமான சந்திப்பு கிடையாது.
140 நாடுகளில் சொந்தங்கள்:
இதே மண்ணில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் இதே கடற்கரையில் சந்திக்கின்றோம். இது அரசியல் கூட்டம் கிடையாது. இது வரலாறு. தமிழ்நாட்டின் வரலாற்றில் இப்படி ஒரு மாநாடு யாரும் நடத்தியது கிடையாது. இந்த நேரத்தில் எனது அண்ணன் காடுவெட்டியார் இங்கு இல்லை என்று எனக்கு மிகப்பெரிய வருத்தம்.
காடுவெட்டியாருடைய கனவு ஐயா காலத்தில் தமிழ்நாட்டை நாம் ஆள வேண்டும். அதை நனவாக்குவது லட்சக்கணக்கான எனது தம்பிகள், தங்கைகளின் கடமை. அந்த காலத்தில் இந்த விழாவின் பெயர் இந்திர விழா, வசந்த விழா. இன்று உலகில் 140 நாடுகளில் நமது சொந்தங்கள் உள்ளனர்.
வரலாறு தெரியாது:
இனி நாம் என்ன செய்ய வேண்டும் என்று பேச இருக்கிறேன். நம் இளைஞர்களுக்கு பாரம்பரியம், வரலாறு தெரியவில்லை. இதை தெளிவுப்படுத்தவே இந்த காட்சிகளை காண்பித்தோம். நெருப்பில் வந்தவர்கள் நாம். இந்தியாவிலே நமது சமுதாயத்திற்கு மட்டும்தான் புராணம் உள்ளது. காரணம் நாம் வன்னியகுல சத்திரியர்கள்.
சுதந்திரத்திற்கு முன்பு எத்தனை பேருக்குத் தெரியும்? நாகப்ப படையாட்சி காந்தி தென்னாப்பிரிக்காவில் உயிர் நீத்த முதல் தியாகி. இந்திய விடுதலைக்கு சத்தியாகிரகப் போராட்டம் அடித்தளம். இது எவ்வளவு பெரிய பெருமை, வரலாறு. யாருக்காவது தெரியுமா? பின்னால் படையாட்சி என்று பெயர் வருவதால் தெரியாது.
ஓபிசி கமிஷன்:
அஞ்சலை அம்மாளை பார்க்க காந்தி நேரில் வந்தவர். அவரும் இந்திய அளவில் சுதந்திர போராட்ட வீரர் என்று வந்திருக்க வேண்டும். ஆனால், இந்த ரத்தத்திலே வந்திருக்க வேண்டும். பெரியாரின் உண்மையான வாரிசு ஆணைமுத்து. வட இந்தியாவில் விழிப்புணர்வு போராட்டம் நடத்தி வர வைத்தவர் ஆணைமுத்து. அவர் மண்டல் கமிஷனை வரவைக்காவிட்டால் ஓபிசி கமிஷன் இன்று இந்தியாவில் கிடையாது.
இந்தியாவில் ஓபிசி இட ஒதுக்கீட்டை பெற்றுத்தந்தது இரண்டு சத்திரியர்கள். ஒன்று ஆணைமுத்து, இன்னொன்று ராமதாஸ் ஐயா. ஐயா இல்லாவிட்டால் இன்று இந்திய அளவிலே ஓபிசிக்கு இந்திய அளவிலே 27 சதவீத இட ஒதுக்கீடு இன்று வரை வந்திருக்காது.
27 சதவீத இட ஒதுக்கீடு:
அன்று ஐக்கிய முற்போக்கு அரசிலே அந்த கூட்டத்தில் சோனியாவிடம் நீங்கள் இட ஒதுக்கீடு கொண்டு வருவீர்களா? இல்லாவிட்டால் நாங்கள் கூட்டணியை விட்டு வெளியேறுவோம் என்று ஆவேசமாக பேசினார். சோனியாகாந்தி ஐயாவின் அழுத்தத்தால் இந்தியாவில் ஓபிசிக்கு கல்வி நிலையத்தில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை அறிவித்தார். இது எவ்வளவு பெரிய வரலாறு. இது யாருக்காவது தெரியாது?
இந்தியாவில் 6 இட ஒதுக்கீட்டைப் பெற்றுத்தந்தவர் ஐயா. அருந்ததியர்களுக்கு 3 விழுக்காடு, இஸ்லாமியர்களுக்கு 3 விழுக்காடு, எம்பிசி-களுக்கு 20 விழுக்காடு, வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு, மத்தியிலே மருத்துவ துறையிலே பட்டியலின/ பழங்குடியின மக்களுக்கு 22.5 சதவீத இட ஒதுக்கீடு, ஓபிசிக்கு 27 விழுக்காடு இதுதான் வரலாறு. ஆனால், ஐயாவிற்கு அந்தளவு அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஆனால், தமிழ்நாட்டின் தனிப்பெரும் சமுதாயம் படிப்பறிவு இல்லை.
எம்பிசி இட ஒதுக்கீடு:
குடிசையில் வாழ்ந்து கொண்டிருக்கிறது, கூலி வேலை செய்து கொண்டிருக்கிறது, விவசாயம் செய்து கொண்டிருக்கிறது, எந்த தொழிலும் இல்லை. ஆண்டு கொண்டிருக்கும் கட்சிகள் எல்லாம் இந்த சமுதாயத்தை வெறும் வாக்கு வங்கியாகவே பார்க்கிறார்கள். தேர்தல் நேரம் வந்தால் உங்களை பயன்படுத்துவார்கள். அதன்பிறகு முடிந்து போய்விட்டது.
மற்ற சமுதாயமும் உங்களை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்று தெரியும் அல்லவா? ஏதாவது பிரச்சினை வந்துச்சுனா நம்மகிட்ட வருவாங்க. நாமளும் போவோம். தீர்த்து வைப்போம். 50, 60 கேஸ் வாங்குவோம். தேர்தல் முடிந்துடுச்சுனா டாடா பை, பை. இந்த கூட்டம் நமது உரிமைகளுக்காக கூடியுள்ள கூட்டம். எங்களுக்கு படிப்பு வேண்டும், வேலை வேண்டும், சுயமரியாதை வேண்டும். ஐயா மிகவும் சிரமப்பட்டு 27 தியாகிகள் காவல்துறையினர் சுட்டார்கள். அதன்பிறகு ஐயா நமக்கு வாங்கித் தந்தது 20 விழுக்காடு எம்பிசி இட ஒதுக்கீடு.
வன்னியர் உள் ஒதுக்கீடு:
அந்த இட ஒதுக்கீடு வந்து 36 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், 36 ஆண்டுகள் ஆகியும் நமக்கு சரியான வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை, கல்வி கிடைக்கவில்லை. அதனால்தான் ஐயா கடந்த ஆட்சியாளர்களிடம் போராடி வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தார்.
நீதிமன்றத்திற்கு சென்றோம் நமக்கு எதிரான தீர்ப்பு வந்தது. உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பு தந்தார்கள். தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு தர எந்த தடையும் கிடையாது. தரவுகளைச் சேகரித்து நியாயப்படுத்தி கொடுங்கள் என்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.





















