மீண்டும் போர் தொடங்க வாய்ப்பிருக்கா? முதுகில் குத்திய பாகிஸ்தான் ராணுவம்.. கார்கில் சொல்லும் பாடம்
ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் இப்படி நடந்து கொள்வது முதல்முறை அல்ல. வாஜ்பாய் காலத்தில் லாகூர் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு ஒரு சில வாரங்களிலேயே கார்கில் போரை தன்னிச்சையாக தொடங்கியது பாகிஸ்தான் ராணுவம்.

இந்தியா மீது பாகிஸ்தானும், பாகிஸ்தான் மீது இந்தியாவும் தொடர்ந்து 3 நாள்களாக தாக்குதல் நடத்தி வந்த நிலையில், நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு அதனை நிறுத்தி கொள்வதாக இரு நாடுகளும் அறிவித்தன. மோதலை நிறுத்தி கொள்வதாக அறிவித்த பிறகும் கூட, ஜம்முவில் ட்ரோன்களை கொண்டு பாகிஸ்தான் நேற்று இரவு தாக்குதல் நடத்தியது. ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் இப்படி நடந்து கொள்வது முதல்முறை அல்ல. வாஜ்பாய் காலத்தில் லாகூர் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு ஒரு சில வாரங்களிலேயே கார்கில் போரை தன்னிச்சையாக தொடங்கியது பாகிஸ்தான் ராணுவம்.
முதுகில் குத்திய ராணுவம்:
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய பாதுகாப்பு படை அதிரடி நடவடிக்கைகளை எடுத்தன. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனால், கோபத்தின் உச்சிக்கு சென்ற பாகிஸ்தான், ஜம்மு உள்ளிட்ட பகுதிகளில் ட்ரோன்கள், ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்த முயற்சி செய்தது.
ஆனால், இஸ்ரேல், ரஷிய மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் முயற்சியை இந்தியா முறியடித்தது. இதையடுத்து, நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, மோதலை நிறுத்தி கொள்வதாக இரண்டு நாடுகளும் அறிவித்தன. மோதல் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒப்பந்தத்தை மீறி ஜம்முவில் நேற்று பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. பாகிஸ்தான் இப்படி நடந்து கொள்வது முதல் முறை அல்ல.
கார்கில் சொல்லும் பாடம்:
இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே தொடர் பதற்றம் நிலவி வந்த சூழலில், கடந்த 1999ஆம் ஆண்டு, இந்திய பிரதமராக பதவி வகித்த வாஜ்பாய், லாகூர் சென்று அன்றைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார்.
காஷ்மீர் உள்ளிட்ட விவகாரங்களில் அமைதியான முறையில் தீர்வை எட்ட இரு நாடுகளும் ஒப்பு கொண்டு, லாகூர் பிரகடனம் வெளியிடப்பட்டது. ஆனால், அந்த சமயத்தில் பாகிஸ்தான் ராணுவம் கார்கில் போருக்கு ரகசியமாக தயாராகி வந்தது. பாகிஸ்தான் அரசாங்கத்தை மீறி, கார்கில் போரை தன்னிச்சையாக சில வாரங்களில் தொடங்கியது.
பாகிஸ்தான் அரசு டம்மியா?
பாகிஸ்தானை பொறுத்தவரையில், அந்நாட்டில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசாங்கத்தை காட்டிலும் ராணுவமே அதிகாரம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ராணுவத்தை பாகிஸ்தான் அரசாங்கத்தினால் கட்டுப்படுத்த முடியாத சூழல் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
இந்தியாவில் ராணுவம், மத்திய உளவுத்துறை (Intelligence Bureau), ரா (Research and Analysis Wing) உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் இந்திய அரசின், மத்திய அமைச்சரவையின் முழு கட்டுபாட்டில் இயங்குகின்றன. ஆனால், பாகிஸ்தானில் அப்படி இல்லை. முக்கியமாக, பாகிஸ்தான் ராணுவத்தின் உளவுத் துறையான ISI (Inter-Services Intelligence) முற்றிலும் சுயேட்சயாக செயல்படும் அமைப்பு. கருப்பு பணத்தில் இயங்கி வருகிறது. பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களை உருவாக்கி, நடத்தி வருவது இது தான். இதை, பாகிஸ்தான் அரசால் மட்டும் இல்லை யாராலும் கட்டுப்படுத்த முடியாது.
பாகிஸ்தான் நாட்டின் பல்வேறு தலைவர்களில் கொலையில் அந்நாட்டு ராணுவம் இருப்பதாக சந்தேகம் இருக்கிறது. அந்நாட்டின் முதல் பிரதமர் லியாகத் அலி கான் தொடங்கி சுல்பிகர் அலி பூட்டோ, பெனாசிர் பூட்டோ வரை பல தலைவர்களின் கொலைக்கு பின்னணியில் பாகிஸ்தான் ராணுவம் இருப்பதாக கூறப்படுகிறது.
மீண்டும் போர் தொடங்க வாய்ப்பிருக்கா?
ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி இருக்கும் சூழலில், இந்த மோதல் இதற்கு பின்னரும் தொடருமா என கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து இந்திய விமானப்படையே பதில் அளித்துள்ளது. எக்ஸ் தளத்தில் இந்திய விமானப்படை வெளியிட்ட பதிவில், ஆபரேஷன் இன்னும் தொடர்ந்து வருவதாக குறிப்பிட்டிருக்கிறது. இருப்பினும், சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக, இந்த மோதல் இதற்கு பின்னரும் நீட்டிக்கப்படாது என்ற கருத்தே நிலவி வருகிறது.





















