தாக்குதல் நடத்துவது இந்தியாவின் பணி.. சடலங்களை எண்ணுவதுதான் பாகிஸ்தான் பணி - ஏர் மார்ஷல் ஆவேசம்
தாக்குதல் நடத்துவதுதான் இந்தியாவின் பணி என்றும், சடலங்களை எண்ணுவது பாகிஸ்தானின் பணி என்றும் ஏர் மார்ஷல் தெரிவித்தார்.

பகல்ஹாம் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் இந்திய நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, இந்தியா மீது தாக்குதல் நடத்த முயற்சித்த பாகிஸ்தானுக்கு இந்தியாவின் முப்படைகளும் தக்க பதிலடி கொடுத்துள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் மோதல்:
ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து இந்தியா நடத்தி வரும் நிலையில் இன்று முப்படை அதிகாரிகளான ஏர் மார்ஷல் ஏகே பார்தி, லெஃப்டினன்ட் ஜெனரல் ராஜீவ், வைஸ் அட்மிரல் பிரமோத். மேஜர் ஜெனரல் ஷர்தா இணைந்து நிருபர்களைச் சந்தித்தனர்.
அப்போது, அவர்கள் கூறியதாவது,
பயணிகள் விமானம்:
எங்களுடைய மோதல் பயங்கரவாதிகளுடன் மட்டுமே. பாகிஸ்தான் ராணுவத்துடன் அல்ல. பாகிஸ்தானின் அனைத்து அத்துமீறல் முயற்சிகளும் இந்தியா வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் முறியடிப்பு. பாகிஸ்தானின் லாகூரில் ரேடார் அமைப்புகளை அழித்தோம்.
நமது விமானப்படை தயாராக இருந்ததால், ட்ரோன்கள் தாக்குதலில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தாக்குதல் நடக்கும்போதே பயணிகள் விமானங்கள் பறக்க பாகிஸ்தான் அனுமதித்தது. இந்தியா பதில் தாக்குதல் நடத்தியபோது பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தியது பாகிஸ்தான்.
எங்கு அடித்தால் வலிக்குமோ, அங்கு தாக்குதல் நடத்த முடிவு செய்தோம். பாகிஸ்தானின் அனைத்து தாக்குதல் முயற்சிகளையும் முறியடித்தோம். பாகிஸ்தானினவ் சர்கோடா, ரஹீம், யார்கான், நூர்கான் விமானப்படை தளங்கள் மீது தாக்குதல் நடத்தினோம்.
தக்க பதிலடி:
அலை அலையாக வந்த பாகிஸ்தான் ட்ரோன்கள் அழிக்கப்பட்டன. இந்தியா நடத்திய தாக்குதலில் 35 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மரணம் அடைந்துள்ளனர். பாகிஸ்தான் இன்று மீண்டும் தாக்கினால் சும்மா விடமாட்டோம். தக்க பதிலடி கொடுப்போம். பதிலடி தாக்குதல் நடத்த இந்திய ராணுவத்திற்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நிறுத்துவதாக முடிவெடுத்த 2 மணி நேரத்தில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர் வீரமரணம் அடைந்தனர். மீண்டும் தாக்கினால் கடுமையான பதிலடி இருக்கும் என்ற பாகிஸ்தானுக்கு ஹாட்லைனில் தகவல் அனுப்பியுள்ளோம்.
சடலங்களை எண்ணுவது பாகிஸ்தான் பணி
AIR MARSHAL AK BHARTI. 🗣️
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 11, 2025
"Our job is to hit the enemy target, not counting the bodybags, that is up to them". pic.twitter.com/zZTxLI7rvp
எங்கள் இலக்கு பாகிஸ்தான் ராணுவம் அல்ல, தவிர்க்க முடியாத காரணத்தால் பாகிஸ்தான் ராணுவ வீரர்களை தாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. தாக்குதல் நடத்துவதுதான் எங்கள் பணி, சடலங்களை எண்ணுவது பாகிஸ்தான் பணி. மீண்டும் தாக்கினால் விளைவுகள் படுமோசமாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
தாக்குதல் நடத்துவதுதான் இந்தியாவின் பணி, சடலங்களை எண்ணுவது பாகிஸ்தான் பணி என்று ஏர் மார்ஷல் ஏகே பார்தி தெரிவித்தார். மேலும், பாகிஸ்தான் இன்று தாக்குதல் நடத்துமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். பாகிஸ்தான் இந்தியா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் அவர்களுக்கே பெரும் பின்னடைவாக அமையும் என்றே பலரும் கணித்துள்ளனர். பொருளாதார ரீதியாக ஏற்கனவே பின்னடைவில் உள்ள பாகிஸ்தான் இந்தியாவுடன் மோதினால் அவர்களது பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படவே வாய்ப்புகள் அதிகம் ஆகும்.





















