"முஸ்லிம் வீட்டுக்கு போனா..பொண்ணுங்க காலை உடைங்க” அத்துமீறி பேசிய பாஜக EX MP | Pragya Singh Thakur
இந்துக்கள் அல்லாதவர்களின் வீடுகளுக்குச் செல்லும் பெண்களின் கால்களை பெற்றோர்கள் உடைக்க வேண்டும் என்று பாஜக முன்னாள் எம்பி பிரக்யா சிங் தாக்கூர் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக முன்னாள் எம்பி பிரக்யா சிங் தாக்கூர் மதம் தொடர்பாக அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் பேசி வம்பில் சிக்கிக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். போபாலில் நடைபெற்ற ஆன்மிக நிகழ்வு ஒன்றில், பெற்றோர்களின் விருப்பத்துக்கு மாறாக நடக்கும் பிள்ளைகளுக்கு 'உடல்ரீதியான' தண்டனைகளை வழங்க வேண்டும் என்று சொல்லி விமர்சன வலையில் சிக்கியுள்ளார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், உங்கள் குழந்தையின் நன்மைக்காக, நீங்கள் அவர்களை அடிக்க வேண்டிய நிலைமை வந்தால் கொஞ்சம் கூட தயங்காதீர்கள். குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்திற்காக தான் பெற்றோர்கள் தண்டனை கொடுக்கிறார்கள். ஒரு மகள் பிறந்தவுடன், தாய்மார்கள் மகிழ்ச்சியடைந்து லட்சுமி வீட்டிற்குள் வந்திருப்பதாக நினைத்து மகிழ்கிறார்கள். ஆனால் வளர்ந்ததும், அவள் வேறு மதத்தைச் சேர்ந்த ஒருவரின் மனைவியாக இன்னொரு வீட்டிற்கு செல்கிறாள்.
இதுபோன்ற சூழலில், உங்கள் மனதை வலிமைப்படுத்திக்கொண்டு, உங்கள் மகள், இந்து அல்லாதவரின் வீட்டுக்குச் சென்றால், சற்றும் யோசிக்காமல் அவர்களது காலை உடையுங்கள். பெற்றோர் சொல்வதைக் கேட்காதவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். பெற்றோர்கள் அப்படிச் செய்வது குழந்தைகளின் நன்மைக்காகத்தான். அவர்கள் துண்டுதுண்டாக வெட்டப்பட்டு கொல்லப்படுவதிலிருந்து காப்பாற்றுவதற்காக தான் என்று அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அவரது பேச்சுக்கு அரசியல் வட்டாரத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இஸ்லாமியர்களுக்கு எதிராக பாஜகவினர் தொடர்ந்து வெறுப்பை பரப்பும் வகையில் பேசி வருவதாக காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மக்கள் மத்தியில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய பிரக்யா சிங் தாக்கூருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பூபேந்திர குப்தா, "மத்தியப் பிரதேசத்தில் மதம் மாற்றம் செய்யப்பட்டதாக ஏழு வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டிருக்கும்போது, இவ்வளவு வெறுப்பு ஏன் பரப்பப்படுகிறது? இதுபோன்று அவர் பேசுவதற்கு தேவை என்ன இருக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.





















