சித்தராமையாவுக்கு ஆப்பு? டெல்லியில் குவிந்த MLA-க்கள்! DK சிவக்குமார் ப்ளான்
காங்கிரஸ் தலைமை வாக்கு கொடுத்தது போல் கர்நாடகாவில் முதலமைச்சர் பதவியில் மாற்றம் வரப்போவதாக பேச்சு அடிபடும் நிலையில் டி.கே.சிவக்குமார் ஆதரவாளர்கள் டெல்லியில் குவிந்து வருவது பரபரப்பை கிளப்பியுள்ளது. சித்தராமையாவிடம் இருந்து பதவியை பறிக்க டி.கே.சிவக்குமார் காய்களை நகர்த்தி வருவதாக சொல்கின்றனர்.
கர்நாடகாவில் 2023ல் காங்கிரஸ் ஆட்சியை பிடித்த போது சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமாருக்கு இடையே அதிகார போட்டி ஏற்பட்டது. சீனியர் என்ற அடிப்படையில் சித்தராமையாவிடன் முதலமைச்சர் பதவியை ஒப்படைத்த காங்கிரஸ் தலைமை, டி.கே.சிவக்குமாருக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு கொடுத்தது. அப்போது 2 பேரும் ஆளுக்கு இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சராக இருந்து கொள்ளலாம் என டீல் போட்டு தான் தலைமை இந்த விஷயத்தை சரிகட்டியதாக பேச்சு அடிபட்டது.
இந்தநிலையில் இந்த மாதத்துடன் சித்தராமையாவின் இரண்டரை ஆண்டுகள் ஆட்சி நிறைவுக்கு வருகிறது. அதனால் டி.கே.சிவக்குமாரை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்ற குரல் காங்கிரஸ் வட்டாரத்தில் மீண்டும் எழுந்துள்ளது. கர்நாடகாவில் முதலமைச்சர் பதவியில் மாற்றம் வரப் போவதாக பேச்சு அடிபடும் நேரத்தில் 5 ஆண்டுகள் நான் தான் முதலமைச்சராக இருப்பேன் என பதிலடி கொடுத்தார் சித்தராமையா. இது டி.கே.சிவக்குமார் ஆதரவாளர்களுக்கு அப்செட்டை கொடுத்ததாக சொல்கின்றனர். சித்தராமையாவை முதலமைச்சர் ஆக்கியது ஆரம்பத்தில் இருந்தே டி.கே.சிவக்குமார் தரப்புக்கு பிடிக்கவில்லை.
இந்த நிலையில் டி.கே.சிவக்குமார் ஆதரவு MLA-க்கள் டெல்லிக்கு படையெடுத்து வருவது பரபரப்பை கிளப்பியுள்ளது. டெல்லி தலைமையை நேரில் சந்தித்து முதலமைச்சர் மாற்றம் பற்றிய கோரிக்கையை வைக்கவிருப்பதாக சொல்கின்றனர். காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் பெங்களூருக்கு வந்துள்ளார். சித்தராமையாவை நேரில் சந்தித்து நிலைமையை கட்டுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக கூறப்படுகிறது.
கர்நாடக காங்கிரஸில் குழப்பம் வந்துள்ளதால், முதலமைச்சர் பதவியில் மாற்றம் வருமா என்ற கேள்வி வந்துள்ளது. ஆட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில் ராகுல்காந்தி தலையிட்டு நிலைமையை சரிகட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.





















