விவசாயிகள் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யுங்கள்... குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்
வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டத்தால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். உடன் நடவடிக்கை எடுத்து போராட்டத்தை கைவிடச் செய்ய வேண்டும்.

தஞ்சாவூர்: தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமை வகித்தார். இதில் விவசாயிகள் பேசியதாவது:
தோழகிரிப்பட்டி பி.கோவிந்தராஜ்: கரும்பு வெட்டுக் கூலியை அரசே ஏற்க வேண்டும். தேர்தலுக்கு முன்பே விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். அரசு ஊழியர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதால் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல்லை விற்பனை செய்வதற்கு இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. போராட்டம் முடியும் வரை விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை சான்று இல்லாமல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி மேட்டு கட்டளை கால்வாய் வாய்க்கால், சி, டி வாய்க்காலை வேளாண் பொறியியல் துறை மூலம் தூர் வாரும் பணியில் சேர்க்க வேண்டும். கரும்பு வெட்டுக் கூலியை அரசே ஏற்க வேண்டும். கோடை காலம் ஆரம்பிக்க உள்ள நிலையில் விவசாயிகளுக்கு எவ்வித இடையூறும் இன்றி மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அய்யம்பேட்டை முகமது இப்ராஹிம் : இடைக்கால பட்ஜெட்டில் பால் கொள்முதலுக்கு ரூ.3 ஏத்தி வழங்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் உள்ள விவசாயிகளில் பயிர் கடன், நகை கடன் முழுவதையும் தேர்தலுக்கு முன்பே தள்ளுபடி செய்துஅறிவிக்க வேண்டும். வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டத்தால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். உடன் நடவடிக்கை எடுத்து போராட்டத்தை கைவிடச் செய்ய வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் வேளாண் ஆராய்ச்சி மையத்தை தொடங்கி அதற்கு வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பெயர் சூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். நடப்பு ஆண்டி பாசன வாய்க்கால்கள் குளங்கள் ஏரிகள் கிளை வாய்க்கால்களை முன்னதாகவே தூர்வார வேண்டும். அய்யம்பேட்டையில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்.
திருவோணம் வி.எஸ்.வீரப்பன் : திருவோணம் தாலுகாவில் புதிய நீதிமன்றம் அமைக்க வேண்டும். புதிய கருவூலம், தீயணைப்புத்துறை அலுவலகம் ஆகியவற்றையும் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவோணம் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி, புதிய கட்டிடம் கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எல்.பழனியப்பன் : ஒரத்தநாடு தாலுகா கோனார் நாட்டின் மையப்பகுதியான செல்லம்பட்டி பாலம் பொய்யுண்டார் கோட்டையில் நெடுஞ்சாலைத்துறை சாலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகளை அகற்ற வேண்டும். வடக்கூர் வடக்கு ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பாப்பான் குளம் பங்காளி குளம், குமலன்குழி போன்ற குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்வள ஆதாரத்தை உயர்த்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்..
ஆம்பலாப்பட்டு தங்கவேல்: ஆம்பலாப்பட்டு - ஆலத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 4 கிலோமீட்டர் தூரம் தார் சாலை செட் பண்ணிடும் பணி நடந்து வருகிறது. இதில் பாலம் அமைக்கப்படும் இடத்தில் மின்கம்பம் இடையூறாக உள்ளது. இதை அகற்றி வேறு இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவ கொள்ளை வருவாய் கிராம எல்லைக்குட்பட்ட விவசாயிகள் பயன் பெறும் வகையில் நேரடி கொள் முதல் நிலையமும், தனித்தனியாக உலர் களமும் அமைத்து தர வேண்டும்.

ஏ.கே.ஆர்.ரவிச்சந்தர் : தஞ்சை மாவட்டத்தில் பல இடங்களில் ஆழ்குழாய் கிணறு பாசன பகுதிகளில் குடிநீர் உப்பு நீராக மாறும் அவல நிலையை தடுக்க வேண்டும். கொள்முதல் நிலையங்களில் எடை மோசடி உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளை தடுக்க கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும். திருவையாறு திருக்காட்டுப்பள்ளி பகுதிகளில் மணல் கொள்ளை நடப்பதை பறக்கும் படை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விதை விழுந்து 50% மானியத்தில் வழங்கி விவசாயிகள் விளைவித்த உளுந்து பயிறு வகைகளை நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.
வாளமர்கோட்டை இளங்கோவன். - இந்தியா தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற்றது போல் சிறு தானிய உற்பத்தியிலும் தென்னிந்தியாவில் தமிழகம் முதலீடு வகிக்க அனைத்து முயற்சிகளையும் மாவட்ட கலெக்டர் பரிந்துரையோடு அரசு செயல்படுத்த வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட கால்நடை மேய்ச்சல் நிலங்களை விசித் பாரத் ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார திட்டம் 125 நாள் ஜி ராம்ஜி திட்டத்தின் கீழ் புல்விதைகளை தூவி பராமரித்து கால்நடைகளை காப்பாற்ற வேண்டும்.
பெரமூர் அறிவழகன் - இயற்கை விவசாயிகளையும் விவசாயத்தையும் காக்கும் வகையில் ஊக்குவிக்க அரசின் மானிய திட்டங்கள் அமைக்க வேண்டும்.களைக்கொல்லியை தடை செய்து கலை எடுக்க 100 நாள் பணியாளர்களை பயன்படுத்த வேண்டும். வாழை விவசாயிகள் நலன் கருதி பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும். அரசு அலுவலர்கள் போராட்டத்தினால் பொதுமக்களும், விவசாயிகளும் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஒரத்தூர் பக்த மு. பிரகலாதன்: வெண்ணாறு பிரிவு கச்சமங்கலம் தலைப்பு பிள்ளை வாய்க்கால் மூலம் ஒரத்தூர், நத்தமங்கலம், மேகளத்தூர் ஆகிய கிராமங்கள் பாசன வசதி பெறுகிறது. மழைக்காலங்களில் இப்பகுதிகளில் உள்ள வயல்களில் தண்ணீர் தேங்கினால் வடிவதற்கு வாய்ப்பு இல்லாமல் உள்ளது. இது குறித்து பல ஆண்டுகளாக தொடர்ந்து மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே அதற்கு தீர்வு காணும் வகையில் ஆய்வு மேற்கொண்டு வடிவால் வசதி செய்து தர வேண்டும் .























